மொஹிதீன் பேக் Mohideen Baig | |
---|---|
பிறப்பு | சேலம், தமிழ்நாடு, இந்தியா | 5 திசம்பர் 1919
இறப்பு | நவம்பர் 4, 1991 கொழும்பு, இலங்கை | (அகவை 71)
தேசியம் | இலங்கையர் |
அறியப்படுவது | பாடகர் |
சமயம் | இசுலாம் |
பெற்றோர் | கரீம் பேக், பீஜான் பீவி |
மொகிதீன் பேக் (Mohideen Baig, மொஹிதீன் பேக், டிசம்பர் 5, 1919 - நவம்பர் 4, 1991) என்பவர் இலங்கையின் பிரபல பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். தமிழ்நாட்டில் பிறந்து இலங்கையில் குடியேறிய இவர்[1] சிங்களம், தமிழ் மொழிகளில் பல பாடல்களை இவர் பாடியுள்ளார். இவர் பல இசுலாமிய, பௌத்த பக்திப் பாடல்களையும் பாடியிருந்தார்.[2] இவர் பாடிய "புத்தம் சரணம் கச்சாமி" என்ற பாடல் இன்றும் ஒலிக்கும் பாடல் ஆகும். பிரபல பாடகர்களான எச். ஆர். ஜோதிபால, சுஜாதா அத்தநாயக்க, ஜமுனாராணி உட்படப் பிரபலமான பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.
தமிழ்நாடு, சேலத்தில் கரீம் பேக், பீஜான் பீவி ஆகியோரின் 14 பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் மொகிதீன்.[3] தந்தை சேலத்தில் காவல்துறையில் பணியாற்றியவர். 1931 இல் இலங்கைக்கு குடிபெயர்ந்த மொஹிதீன் பேக் இலங்கை காவல்துறையில் பணியில் சேர்ந்தார். 1947 இல் திருமணம் புரிந்தார்.[3] இவரது மகன் இஷாக் ஒரு பிரபலமான பாடகர் ஆவார். கே. கே. ராஜலட்சுமியுடன் இணைந்து பாடிய இவரது முதலாவது பாடல் கருணா முகுதே நமு கிலீலா கொலம்பியா இசைத்தட்டில் 1936 ஆம் ஆண்டில் வெளிவந்தது. சிங்களத்தில் வெளியான இரண்டாவது திரைப்படமான அசோகமாலாவில் (1947) தனது பின்னணிப் பாடலைப் பாடினார்.[4] இத்திரைப்படத்தில் இவர் நான்கு பாடல்களைப் பாடியிருந்தார். ஒரு பாடல் காட்சியில் இவர் பாடியவாறே நடித்திருந்தார்.[3] சேர் சிற்றம்பலம் கார்டினர் இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார்.
1950களின் ஆரம்பத்தில் "கெலே நந்த", "தைவோ கய" ஆகிய சிங்களத் திரைப்படங்களில் ருக்மணி தேவியுடன் இணைந்து பாடினார். 1953 ஆம் சினிமாஸ் கே. குணரத்தினம் தயாரித்த "சுஜாதா" திரைப்படத்தில் நான்கு பாடல்களைப் பாடினார்.[3] இத்திரைப்படத்தில் ஜமுனாராணியுடன் இணைந்து சில பாடல்களைப் பாடினார். 1955 இல் ரி. சோமசேகரன் தயாரித்த "சடசுலங்க" என்ற திரைப்படத்தில் லதா மங்கேஷ்கர் உடன் இணைந்து ஒரு சிங்களப் பாடலைப் பாடினார்.[3]
மொகிதீன் பேக் இலங்கையில் தயாரான கோமாளிகள், நான் உங்கள் தோழன் ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.[3]
இலங்கையின் முதலாவது சுதந்திர நாள் வைபவம், மற்றும் 1974 பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு பாடியுள்ளார்.[4] 1956 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காஇவருக்கு இலங்கை குடியுரிமை வழங்கிக் கௌரவித்தார்.