மொசதக் உசைன் சைகத் (Mosaddek Hossain Saikat (பிறப்பு: டிசம்பர் 10, 1995) வங்காளதேசத் துடுப்பட்ட வீரர் ஆவார். இவர் வங்காளதேச அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் 2013 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.2014-2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் 250 அற்றும் 282 ஓட்டங்களை தொடர்ச்சியான் போட்டிகளில் எடுத்தார்.தனது முதல் 10 போட்டிகளில் 1,000 ஓட்டங்களை எடுத்தார். அக்டோபர் , 2015 இல் தனது 13 ஆவது போட்டியில் மூன்று நூறுகள் அடித்தார். இதன்மூலம் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் மூன்று நூறுகள் அடித்த முதல் வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார். மார்ச் 2017 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.
வலதுகை மட்டையாளரும் வலது கை புறத் திருப்பப் பந்துவீச்சாளருமான இவர் இரண்டு முறை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் துடுப்பாட்டத்தில் விளையாடியுள்ளார். 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஆத்திரேலியா மற்றும் அபு தாபியில் நடைபெற்ற போட்டியில் இவர் விளையாடியுள்ளார். ஏப்ரல் 2013 இல் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் தலைவராக நியமிக்கப்பட்டார். இதில் முதல் போட்டியில் 107 ஓட்டங்களும் இரண்டாவது போட்டியில் 74 ஓட்டங்களும் எடுத்தார். பின் ஐந்து போட்டிகள் கொண்ட போட்டித் தொடருக்கும் இவர் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்தப் போட்டித் தொடரில் 200 ஓட்டங்களுக்கும் அதிகமாக எடுத்தார். அதில் மூன்றாவது போட்டியில் 98 ஓட்டங்கள் எடுத்து அணியினை வெற்றி பெற உதவினார்.[1][2] பின் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 113 பந்துகளில் 110 ஓட்டங்கள் மற்றும் 10 ஓவர்கள் வீசி 38 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.[3]
தனது 17 ஆவது வயதில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தார். 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அபஹானி அணிக்காக விளையாடினார். இதில் தொலேஷ்வர் விளையாட்டு சங்கத்திற்கு எதிரான போட்டியில் 100 ஓட்டங்கள் அடித்தார்.[4]
செப்டம்பர் 28, 2016 இல் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியில் அறிமுகமானார்.[5] இந்தப் போட்டியில் இவர் வீசிய முதல் பந்திலேயே இலக்கினைக் கைப்பற்றினார். இதன் மூலம் முதல் பந்தில் இலக்கினைக் கைப்பற்றிய முதல் வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.[6] பின் ஏழாவது வீரராகக் களம் இறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்கள் எடுத்தார். 10 ஓவர்கள் வீசி 31 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். ஆனால் இந்தப் போட்டியில் இரண்டு இலக்குகளால் வங்காளதேச அணி தோல்வியடைந்தது.[5]
பெப்ரவரி 2017 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இம்ருல் கயஸ் காயம் காரணமாக விலகினார். இதனால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[7] மார்ச் 15, 20117 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இது வங்காளதேச அணியின் 100 ஆவது போட்டியாகும். இதன் முதல் ஆட்டப் பகுதியில் எட்டாவது வீரராக களம் இறங்கி 75 ஓட்டங்கள் எடுத்தார்.[8]