மோகன்லால் லல்லுபாய் தந்த்வாலா | |
---|---|
பிறப்பு | சூரத்து, குசராத்து, இந்தியா | 18 செப்டம்பர் 1909
இறப்பு | 8 அக்டோபர் 1998 | (அகவை 89)
பணி | வேளாண் பொருளாதாரம் கல்வியாளர் எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1934–1998 |
அறியப்படுவது | வேளாண் பொருளாதாரச் சீர்திருத்தம் |
விருதுகள் | பத்ம பூசண் |
மோகன்லால் லல்லுபாய் தந்த்வாலா (Mohanlal Lallubhai Dantwala; 1909-1998) ஓர் இந்திய வேளாண் பொருளாதார நிபுணரும், கல்வியாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர், இந்திய வேளாண் பொருளாதாரத்தின் தந்தை என பலரால் கருதப்படுகிறார்.[1] இவர் காந்தியவாதியும், இந்திய சுதந்திர ஆர்வலருமாவார். இந்திய சுதந்திர போராட்டத்தின் போது இவர் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார். இவர் இந்தியாவின் விவசாயத் துறை பற்றிய பல புத்தகங்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.[2] மேம்பாட்டு ஆய்வுகளை ஊக்குவிக்கும் ஆராய்ச்சி மையமான மேம்பாட்டு மாற்று மையத்தின் (CFDA) நிறுவனர் தலைவராகவும் இருந்தார்.[3] இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக இந்திய அரசு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருதை 1968இல் இவருக்கு வழங்கியது.[4]
தந்த்வாலா 18 செப்டம்பர் 1909 அன்று இந்தியாவின் குசராத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான சூரத்தில் பிறந்தார். இவர் சூரத் எம்டிபி கலைக் கல்லூரியிலும், மும்பை வில்சன் கல்லூரியிலும் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். கல்விச் சிறப்பிற்காக ஜேம்ஸ் டெய்லர் பரிசையும் வென்றார். பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[5] இந்த காலகட்டத்தில்தான் இவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டார். இதற்காக, மொத்தமாக ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். இது இவரது முனைவர் பட்ட படிப்பில் இடையூறுகளை ஏற்படுத்தியது. மேலும், இவர் மும்பையில் உள்ள ஆர்தர் சாலை மத்திய சிறையில் சிறைவாசம் அனுபவித்தபோது இவரது ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில், இவர் தனது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றான எ ஹன்டரட் இயர்சு ஆப் இந்தியன் காட்டன் (A Hundred Years of Indian Cotton) என்ற நூலை எழுதினார். கிழக்கிந்திய பருத்தி சங்கத்தால் நியமிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தில் ஜவகர்லால் நேரு எழுதிய முன்னுரை இருந்தது.
மகாத்மா காந்தியின் நெருங்கிய ஒத்துழைப்பாளர்களில் ஒருவரான இவர், அக்டோபர் 1952 இல் "அரிஜன்" என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட முன்மொழிவு ஆவணத்தை வரைந்து, "நடைமுறை அறங்காவலர்" என்ற காந்திய இலட்சியத்தின் வளர்ச்சிக்கு பங்களித்ததாக அறியப்படுகிறது [6] இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இவர் காங்கிரசு முன்னணி சோசலிச கட்சியை உருவாக்க உதவுவதற்காக ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா போன்ற பல முன்னணி அரசியல் தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். [5]
இவர் மொரார்ஜி தேசாயின் தனிப்பட்ட செயலாளராக சிறிது காலம் பணியாற்றினார். மேலும், 1977இல் இந்திய திட்டக் குழுவால் அமைக்கப்பட்ட தொகுதி நிலைத் திட்டத்திற்கான பணிக்குழுவின் தலைவராக இருந்தார்.[7] இப்பணிக்குழு தொகுதி மட்டங்களில் சமூக-பொருளாதார திட்டமிடல் செயல்முறைக்கு நிறுவன மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகளை பரிந்துரைத்தது.[8] [9] இந்த குழு பின்னர் "தந்த்வாலா குழு" என்று அழைக்கப்பட்டது.[10] இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையின் இயக்குநராகப் பணியாற்றினார்.[11] இந்திய அரசின் தேசியப் பேராசிரியராகவும் இருந்தார்.[12] 1998 ஆம் ஆண்டில் மேம்பாட்டுக்கான மாற்று மையம் நிறுவப்பட்டபோது, இவர் அதன் நிறுவனர் தலைவரானார். மேலும் தான் இறக்கும் வரை இந்தப் பதவியை வகித்தார்.[3]
வேளாண் பொருளாதாரத்தில் பல உலக இயக்கங்களுடன் தொடர்புடைய தந்த்வாலா, இந்தத்தலைப்பில் பல வெளியீடுகளை எழுதினார்.[2] மேலும் பல அத்தியாயங்களுக்கும் பங்களித்தார். சுதந்திரத்திற்குப் பின் இந்திய விவசாய வளர்ச்சி, நிலச் சீர்திருத்தங்களின் மதிப்பீடு, இந்தியாவில் வறுமை, அன்றும் இன்றும், காந்தியம் மறுபரிசீலனை வளர்ச்சியின் தடுமாற்றங்கள்: இந்திய அனுபவம் இந்தியாவில் மூல பருத்தி சந்தைப்படுத்துதல் ஆகிய நூல்கள் இவரது மற்ற குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.மேலும் இவர் தன்னார்வ நடவடிக்கை மூலம் "சமூக மாற்றம்" போன்ற படைப்புகளையும் திருத்தியுள்ளார்.
1969இல் இந்திய அரசு குடிமக்களின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருதை வழங்கி இவரை கௌரவித்தது.[4] ஒரு வருடம் கழித்து வாகனிங்கன் பல்கலைக்கழகத்தின் இணை நிறுவனமான வாகனிங்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பில் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.[13]
இவர் அக்டோபர் 8, 1998 அன்று, தனது 89 வயதில் இறந்தார். [5] 1998இல் எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி என்ற இதழில் "எம்எல் தந்த்வாலாவை நினைவுகூருதல்" என்ற தலைப்பிலும்,[14] இந்தியன் ஜர்னல் ஆஃப் அக்ரிகல்ச்சர் எகனாமிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டபேராசிரியர் எம்எல் தந்த்வாலா: ஏ ட்ரிபியூட் உட்பட பல இரங்கல் செய்திகளில் இவரது வாழ்க்கை கதை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[15]