துவங்கப்பட்டது | 1903 |
---|---|
துவங்கியவர் | மோதிலால் ஜெயின் |
Successor | பனர்சிதாசு ஜெயின் |
நாடு | இந்தியா |
தலைமையகம் | 41 யு. ஏ. பங்களா சாலை, ஜவகர் நகர், தில்லி 110007. |
பரவல் | உலகம் முழுவதும் |
முக்கிய நபர்கள் | இலீலா ஜெயின்n (தலைவர்) |
வெளியிடும் வகைகள் | பட்டியலை காண்க |
தலைப்புகள் | இந்தியவியல், சமசுகிருதம் |
அதிகாரப்பூர்வ இணைத்தளம் | mlbd.co.in |
மோதிலால் பனர்சிதாசு (Motilal Banarsidass) (MLBD) என்பது 1903 ஆம் ஆண்டு முதல் சமசுகிருதம் மற்றும் இந்தியவியல் குறித்த செய்திகளை வெளியிடும் ஒரு முன்னணி இந்திய வெளியீட்டு நிறுவனமாகும். இது இந்தியாவின் தில்லியில் அமைந்துள்ளது. இது ஆசிய மதம், தத்துவம், வரலாறு, கலாச்சாரம், கலை, கட்டிடக்கலை, தொல்பொருள், மொழி, இலக்கியம், மொழியியல், இசை, மாயவாதம், யோகா, தாந்திரீகம், மறைபொருள் நிலை, மருத்துவம், வானியல், சோதிடம் தொடர்புடைய பாடங்களையும், தொடர்களையும், அது தொடர்பான விரிவான ஆய்வுகளையும் அறிவார்ந்த வெளியீடுகளாக வெளியிட்டு விநியோகிக்கிறது. இது இன்றுவரை 25,000 க்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளன.[1]
அதன் குறிப்பிடத்தக்க வெளியீடுகள் புராணங்களின் 100 தொகுதிகள், மாக்ஸ் முல்லரால் திருத்தப்பட்ட கிழக்கின் புனித புத்தகங்கள் (50 தொகுதிகள்) பைபிளோதெக்கா புத்திகா (32 தொகுதிகளில் 30 தொகுதிகள்); இந்தி மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் ராமசரிதமானஸ், பத்து தொகுதிகளில் மனுதரும சாத்திரம் மற்றும் சமசுகிருத அகராதி, மற்றும் இந்திய தத்துவங்களின் கலைக்களஞ்சியம் (7 தொகுதிகள்). இந்திய வரலாற்று ஆராய்ச்சி அமைப்பு (ஐ.சி.எச்.ஆர்), இந்திரா காந்தி தேசிய கலை மையம் (ஐ.ஜி.என்.சி.ஏ) மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான அமைப்பு (ஐ.சி.சி.ஆர்) போன்ற அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் அடிப்படையில் புத்தகங்களையும் இது கொண்டு வருகிறது.[2] [3] இது சுமார் ரூ.5-6 கோடி விற்றுமுதலைக் கொண்டுள்ளது. இதில் சுமார் 75% ஏற்றுமதியிலிருந்து வருகிறது.[4]
இந்த வெளியீட்டு நிறுவனம் அமிருதசரசின் ரஞ்சித் சிங் மன்னனின் அரசவை நகைக்கடைக்காரர்களின் குடும்பத்தின் வழித்தோன்றலான லாலா மோதிலால் ஜெயின் என்பவரால் முதன்முதலில் இலாகூரில் 1903 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. லாகூரில் உள்ள 'சையிது மித்தா கடைவீதி' என்ற இடத்தில் சமசுகிருத புத்தகங்களை விற்கும் புத்தகக் கடை ஒன்றைத் தொடங்க, பின்னல் வேலையிலிருந்து சம்பாதித்த தனது மனைவியின் சேமிப்பிலிருந்து ரூ.27 மோதிலால் கடன் வாங்கினார். கடையின் பிற்காலத்தில் வெளியீட்டு வணிகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தனது மூத்த மகன் மோதிலால் பனர்சிதாசின் பெயரிட்டார்.
லாலா மோதிலால் ஜெயினின் மற்றொரு மகன் லாலா சுந்தர்லால் ஜெயின் மேற்பார்வையில் 1911 ஆம் ஆண்டில், அமிர்தசரசு மை செவன் கடைவீதியில் மேலும் ஒரு கிளைத் திறக்கப்பட்டது. 1912 இல் லாலா பனாரசிதாசின் அகால மரணத்திற்குப் பிறகு, அவரது மற்றொரு மகன் தனது நிறுவனத்தை மூடிவிட்டு குடும்ப வணிகத்தை கவனிக்க லாகூர் சென்று தனது சகோதரனுடன் சேர்ந்தார். இவர் பள்ளிக் கல்வியை முடித்தவர், எனவே இறுதியில் நிறுவனத்தின் தலைவரானார். விரைவில் ஒரு அச்சிடும் பிரிவும் அமைக்கப்பட்டு, பதிப்பகம் நிறுவப்பட்டது.[5]
இந்திய விடுதலைப் போராட்ட வீரரான இராசேந்திர பிரசாத்தின் ஆலோசனையின் பேரில் 1937 ஆம் ஆண்டில் பாட்னாவில் ஒரு கிளை தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தியப் பிரிவினையின் போது ஏற்பட்ட ஒரு கலவரத்தில் லாகூர் கடை எரிந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, குடும்பம் இந்தியாவுக்குச் சென்றது. ஆரம்பத்தில் பிகானேர் மற்றும் பட்னாவில் தங்கியிருந்தது. 1950 இல் வாரணாசிக்குச் செல்வதற்கு முன்பு, அது 1951 இல் கடையை அமைத்தது. கடைசியாக 1958 இல் தில்லிக்கு மாற்றப்பட்டது. இன்று இது உலகின் சில பெரிய வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இது அதன் சொந்த உள்நாட்டு அச்சிடும் அலகினை கொண்டுள்ளது.
1992 ஆம் ஆண்டில், சாந்திலால் ஜெயினுக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. இது இந்தியாவின், வெளியீட்டின் மூலம் சிறந்த சமூக சேவைக்கான முதல் பத்ம விருதாகும்.[3] இன்று சாந்திலாலின் மூத்த மகன் நரேந்திர பிரகாஷ் ஜெயின், 'பிரகாஷ்' என்று பரவலாக அறியப்படுகிறார். மேலும் அவரது நான்கு சகோதரர்கள் மற்றும் அவர்களின் மகன்களும், நிறுவனத்தின் தலைவரான அவர்களின் தாயார் லீலா ஜெயினும் இந்த வணிகத்தை நடத்தி வருகின்றனர்.[1]
2003 ஆம் ஆண்டில், சென்னையில் நடந்த ஒரு விழாவில் நிறுவனம் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. அதில் காஞ்சி சங்கராச்சாரியார் செயேந்திர சரசுவதி ஆர்.பாலசுப்பிரமணியம், பி.எம்.கே சர்மா மற்றும் கே.வி.சர்மா ஆகிய மூன்று சமசுகிருத அறிஞர்களை கௌரவித்தார்.[6] பெங்களூரில் நடைபெற்ற ஒரு விழாவில் , கர்நாடக ஆளுநர் டி. என். சதுர்வேதி, இந்தியவியலில் பங்களித்ததற்காக நூற்றாண்டு கண்ட புகழ்பெற் சுதாகர் சதுர்வேதி, எஸ். எம். எஸ். சாரி மற்றும் ஐதராபாத்தின் பி. கே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை பாராட்டினார். மேலும் பிரபல சோதிடர் பி. வி. ராமன் மரணத்திற்குப் பின் கௌரவிக்கப்பட்டார்.[7]
தில்லியில் அதன் முக்கிய கடை ஜவகர் நகரில் உள்ள பங்களா சாலையில், தில்லி பல்கலைக்கழக வடக்கு வளாக பகுதியில், கிரோரி வளாகக் கல்லூரிக்கு பின்னால் உள்ளது. இது சுமார் 30,000 தலைப்புகள் கொண்ட இந்தியவியல் இலக்கியங்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், புனே, வாரணாசி மற்றும் பாட்னாவில் கிளைகளைக் கொண்டுள்ளது [8]