தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிப்பதிலும், தமிழ்மொழியைக் கற்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர்களாக யேர்மனியத் தமிழர்கள் விளங்குகிறார்கள். தமிழர்கள் அதிகமாகப் புலம்பெயரத் தொடங்கிய 1980 காலப் பகுதியிலேயே தமிழ் ஆர்வலர்களால் இதையொட்டிய செயற்பாடுகள் முன்னெடுக்கப் பெற்றன. ஆனாலும் அவர்களின் செயற்பாடுகள் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனக்கட்டுப்பாட்டின் கீழ் இயங்காத காரணத்தால், குறித்த இலக்கை அடைய முடியாமலே இருந்தன. காலப்போக்கில் யேர்மன் வாழ் தமிழ்க்குழந்தைகளுக்கான தமிழ்மொழியின் அவசியம் பற்றிய சிந்தனை பல தமிழ் ஆர்வலர்களிடையே அலசப்பெற்றும், ஆராயப்பெற்றும் ஓர் ஆக்கபூர்வமான தீர்மானம் எடுக்கப்பெற்றது. இதன் பலனாக அனைத்துலக, யேர்மனியப் பொறுப்பாளர்களின் ஆலோசனைகளுடன் 1990இல் உலகத் தமிழர் இயக்கம் போன் நகரில் தொடங்கப் பெற்றது. உலகத் தமிழர் இயக்கத்தின் முக்கிய அங்கமாக தமிழ்க்கல்விப் பணி தொடங்கியது.
அன்றைய காலப்பகுதியில் அமைப்பின் யேர்மனியப் பொறுப்பாளராகத் திகழ்ந்த மாவீரர் மேஜர் சுரேந்திரகுமார் அவர்களின் ஆலோசனைப்படி யேர்மனி, யூச்சன் நகரில் முதன்முதலில் தமிழ்ப்பாடசாலை, தமிழாலயம் என்ற பெயரில் தொடங்கப் பெற்றது. யூச்சன் நகரில் தமிழாலயம் ஆரம்பிக்கப் பெற்றதைத் தொடர்ந்து யேர்மனியின் பல நகரங்களிலும் போட்டி போட்டுக் கொண்டு பல தமிழ்ப்பாடசாலைகள், தமிழாலயம் என்ற பெயரில் உருவாகின. 10 ஆண்டுகளில் யேர்மனியில் 103 தமிழாலயங்கள் உருவெடுத்திருந்தன. 15 வருடங்களில் 130 தமிழாலயங்கள் 6000 மாணவர்களுடன் வளர்ந்து நின்றது. ஒவ்வொரு தமிழாலயமும் நிர்வாகி, உதவி நிர்வாகி, பெற்றோர் பிரதிநிதி (சார்பாளர்) என்ற கட்டமைப்புடன், ஓர் ஒழுங்குமுறையுடனேயே நடாத்தப்பெறுகிறது. தமிழாலயத்தில் முதலாம் வகுப்பிலிருந்து 11ம் வகுப்பு வரையான பிரிவுகளில் அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்ப தமிழ்மொழியும், சமூக/சுற்றாடற் கல்வியும், தமிழர்களின் கலை, பண்பாடுகளும் கற்பிக்கப் பெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் பரீட்சைகளும் நடத்தப்பெற்று சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. இதனோடு தமிழ்த்திறன் போட்டியும் ஆண்டுதோறும் நடாத்தப்பெற்று சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பெறுகின்றன. தமிழ்த்திறன் போட்டியில் கட்டுரை எழுதுதல், மேடைப்பேச்சு என்பன நடைபெறுகின்றன.
தமிழாலயங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எந்தவித ஊதியத்தையும் எதிர்பார்க்காமலேயே இந்தப் பணியைச் செய்கிறார்கள். அவர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளும் உலகத் தமிழர் இயக்கக் கல்விப்பணியகத்தினால் ஒழுங்கு செய்யப்பெற்று முறைக்கு முறை பயிற்சிகள் கொடுக்கப்பெறுகின்றன.
யேர்மன் தமிழர்களில் ஏறக்குறைய 45,000 பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களால் 1983இல் யேர்மனியில் ஒரு பலமான இந்துக்கட்டமைப்பு உருவாக்கப் பட்டது. யேர்மன் வாழ் தமிழர்கள் ஒரு இடத்தில் என்றில்லாது யேர்மனி முழுவதிலும் பரந்து வாழ்கிறார்கள். இவர்களால் இதுவரையில் 24 இந்துக்கோயில்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இவைகளில் அனேகமான கோயில்கள் கெலர் எனப்படும் நிலக்கீழ் அறைகளிலும், வீடுகளின் ஏதோ ஒரு பகுதியில், ஒரு அறையிலும் என்றே ஆரம்பிக்கப் பட்டன. இவைகளில் சில சிலகாலங்கள் செல்ல வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, பெரிதாகப் புனரமைக்கப்பெற்றும் உள்ளன. அவைகளில் ஹம் காமாட்சி அம்மன் ஆலயம் குறிப்பிடத்தக்க ஒரு பெரிய கோயிலாகும். ஹம் காமாட்சி அம்மன் ஆலயம் ஐரோப்பியாவில் உள்ள இந்துக் கோயில்களில் இரண்டாவது பெரிய கோயிலாகக் கருதப்படுகின்றது.
தமிழர்களின் இந்துக் கோயில்கள்
சீசெல்சு அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம்
பக்நாங் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம் (Sri Meenadchi Temple, Eberhard Str.8, 71522 Backnang, Germany)
மயூரபதி ஸ்ரீ முருகன் ஆலயம் (Urban Str 176, 10961 Berlin)
வள்ளி தேவா சேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிமணியர் ஆலயம் (GoldSchmidt Str 5, 45127 Essan)
ஸ்ருட்கார்ட் சித்திவிநாயகர் ஆலயம் (Stuttgrt, Germany)
ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் ( Sri Katpaga Vinayakar Temple, Intze Str-26, 60314 Frankfurt, Germany)
ஸ்ரீ கனக துர்க்கா அம்பாள் ஆலயம் (Robert koch Str 05a, 58239 Schwerte)
ஸ்ரீ சொர்ணநாகபூஷணி அம்பாள் ஆலயம் (Girmesgath 95, 47803 Krefeld)
ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயம் (Mönchengladbach)
ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் (Turnstrasse. 8a, 75173 Pforzheim)
ஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமி ஆலயம்
ஸ்ரீ முல்கைம் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆலயம்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் (Sri Muthumari Amman temple, Empelder str 96, 30455 Hannover)
ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் (Bredenscheider str 119, 45527 Hattingen)
சிறி சித்திவிநாயகர் ஆலயம் ( Sri Siththivinayagar Temple, Humboldt Str 103, 90459 Nürnberg)
ஹம் காமாட்சி அம்மன் கோயில் (Hindu Shankara Sri Kamadchi Ampal Temple, Siegenbeck strasse 4-5, 59071 Hamm-Uentrop, Germany)