யௌதேயர் (இந்தி:यौधेय) அல்லது யௌதேய கணம் (இந்தி:यौधेयगण) என்போர் கங்கை மற்றும் சிந்து நதிச் சமவெளிகளுக்கிடையே வாழ்ந்த கூட்டத்தினர் ஆவர். பாணினியின் அஷ்டாத்யயியிலும், கணபதம் நூலிலும் அவர்கள் பற்றிய குறிப்பைக் காண முடிகின்றது. வடமொழிப் பதினெண் புராணங்கள், மகாபாரதம், முதலான நூல்களிலும் அவர்கள் பற்றிய குறிப்புக்களைக் காண முடிகின்றது. கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில், அவர்கள் பொ.மு 500இலிருந்து, பொ.பி 200 வரை வாழ்ந்த குலத்தோர் எனக் கொள்ள முடிந்தாலும், அவர்கள் வலுவான அரசியல் சக்தியாக மிளிர்ந்த காலம் பொ.மு 200இலிருந்து பொ.பி 400 என்று உறுதிபடக் கூறமுடிகின்றது.
யௌதேயர்களின் வழித்தோன்றல்களாக, பாகிஸ்தான் மற்றும் ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப்[1][2][3][4] பகுதிகளில் வாழும் ஜாட் இன மக்கள் கருதப்படுகின்றனர்.[1][4][5][6] மற்றும் அகிர் குடியினர்[7][8][9] ஆகியோர் கருதப்படுகின்றனர்.
உசிநாரர் மற்றும் நிருகுவின் வழிவந்தவர்களாக யௌதேயர்களைக் குறிப்பிடும் வரிகள், பிரம்மாண்ட, வாயு, பிரம்ம புராணங்களிலும், அரிவம்சத்திலும் காணக்கிடைக்கின்றன.[10]
அஷ்டாத்யயியில் (பொ.மு 5ஆம் நூற்றாண்டு) யௌதேயர்கள் பற்றிய குறிப்பைக் (5.3.116-17 and 6.1.178) காண முடிகின்றது. பொ.பி 150ஐச் சேர்ந்ததாகக் கருதப்படும் யுனகாட் மலைப்பொறிப்பில், சத்திரியர்களில் பெருவீரரும் யாருக்கும் திறை அளிக்கா மாவீரர்களுமான யௌதேயர்களை, முதலாம் உருத்திரதாமன் தோற்கடித்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது[11][12][13] சமுத்திரகுப்தனின் அலகாபாத் தூண் கல்வெட்டிலும் யௌதேயர் பற்றிய குறிப்பைக் காணலாம்.[14] வராகமிகிரரின் பிருகத் சங்கிதை அவர்களை இந்தியாவின் வட பகுதியில் வாழ்பவர்களாக இனங்காட்டுகின்றது. (16.28 மற்றும் 16.22)
யௌதேய நாணயம். வேலும் சேவலும் தரித்த வேலவன் | பிரித்தானிய அருங்காட்சியகத்திலுள்ள யௌதேய அறுமுகன் சிற்பம். |
யௌதேய ஆட்சி நிலவியதாகக் கருதப்படும் தென்கீழ் பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான் பெரும் நிலப்பரப்பில் கிடைத்துள்ள அவர்களது நாணயங்களே, அவர்கள் வல்லமை வாய்ந்த அரசை அமைத்திருந்தமைக்குச் சான்றாகின்றன.[15] யௌதேய நாணயங்களில் காணப்படும் முருகன் சிற்பமும் அவற்றில், ஆறுமுகம், சேவல், மான் முதலான முருக வழிபாட்டுச் சின்னங்கள் காணப்படுவதும், இன்றைய தமிழர் தெய்வமான முருகன், ஒருகாலத்தில், வட பாரதமும் விதந்து போற்றிய பெரும் தெய்வம் என்பதற்கான கிடைத்தற்கரிய சான்றுகளாக விளங்குகின்றன.[16]