ரந்தாவ் அபாங் | |
---|---|
Rantau Abang | |
திராங்கானு | |
ஆள்கூறுகள்: 4°52′15″N 103°23′22″E / 4.87083°N 103.38944°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | திராங்கானு |
மாவட்டம் | டுங்குன் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 23000 |
தொலைபேசி | +6-09-6 |
போக்குவரத்து எண் | T |
ரந்தாவ் அபாங்; (ஆங்கிலம்: Rantau Abang; மலாய்: Rantau Abang சீனம்: 兰道阿邦) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், டுங்குன் மாவட்டத்தில் (Dungun District) உள்ள நகரம்; ஒரு முக்கிம். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து 80 கி.மீ.; கோலா டுங்குன் (Kuala Besut) நகரில் இருந்து 20 கி.மீ. தெற்கில் உள்ளது.[1]
இந்த நகரம் மலேசியாவில் மிக அழகான கடற்கரையைக் கொண்ட கடற்கரை நகரம் என புகழப் படுகிறது. உலகம் முழுவதும் இருந்து ஒவ்வொரு நாளும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கடற்கரைக்கு வருகின்றனர். குறிப்பாக சீனா, தைவான், ஜப்பான் நாட்டுப் பயணிகள் அதிகமாக வருகின்றனர். உலகத்திலேயே மிகவும் பெரிய கடல் ஆமைகளான பேராமைகளுக்கு (Leatherback Sea Turtle) இந்த இடம் மிகவும் புகழ்பெற்றது.
ரந்தாவ் அபாங் கடற்கரை பெரிய கடல் ஆமைகளான பேராமைகளுக்கு பிரபலமானது. தவிர, ரந்தாவ் அபாங் அதன் மைல்கள் கணக்கிலான மணல் கடற்கரையால் நன்கு அறியப்படுகிறது. டுங்குன் நகருக்கு வடக்கே சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோலா அபாங் நகரில் இருந்து ரந்தாவ் அபாங் வரை கடற்கரை தொடர்ச்சியாக நீண்டுள்ளது.[2]
பெரும்பாலான கடற்கரைகள் நீச்சலுக்குப் பாதுகாப்பானவை. கடற்கரை கைப்பந்தாட்டம், மகிழுலா, காற்றாடி பறக்க விடுதல் மற்றும் முகாமிடுதல் போன்ற அனைத்து வகையான கடற்கரை நடவடிக்கைகளுக்கும் ரந்தாவ் அபாங் கடற்கரை வசதியாக உள்ளது.[2]
அத்துடன், கடற்கரையில் தரமான மற்றும் மலிவான தங்குமிடங்களை வழங்கும் இடங்கள் உள்ளன. இங்குள்ள கடற்கரைகள் நீச்சல் நடவடிக்கைகளுக்கும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்பானவை. எனினும் சில இடங்கள் மீன்வளத் துறையால் ஆமை பாதுகாப்பு நோக்கங்களுக்காகத் தடைசெய்யப்பட்டு உள்ளன.[2]
முன்பு காலத்தில், ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் முதல் ஆகத்து மாதம் வரையிலான காலங்களில், ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிடும். இருப்பினும், அண்மைய ஆண்டுகளில் முட்டையிடும் கடல் ஆமைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
1950-களில் இந்த ஆமைகளில் 10,000-க்கும் மேற்பட்ட ஆமைகள் ரந்தாவ் அபாங் கடற்கரைகளுக்கு வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது; இந்த இடம் அந்த ஆமைகளின் சரணாலயம். இருப்பினும் அண்மைய காலமாக கடல் ஆமைகள் கடல்கரைக்கு வருவது வெகுவாகக் குறைந்துவிட்டது.[3]
இந்த ஆமைகள் அழிந்து வருவதாக (Turtles Extinct), அண்மையில் திராங்கானு அரசாங்கம் அறிவித்தது.[4] சுற்றுலாப் பயணிகளின் இடையூறுகள் கடலாமைகள் குறைவதற்கு மிகப்பெரிய காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் பலர் ஆமை முட்டைகளை எடுத்து உள்ளூர் கிராமங்களில் விற்கின்றனர். ஆமை முட்டைகள் ஓர் உள்ளூர் உணவாக மாறிவருவதும் ஒரு காரணம் என அறியப் படுகிறது.[5]
ஆமை மற்றும் கடல் சுற்றுச்சூழல் மையம் (Turtle and Marine Ecosystem Centre) ரந்தாவ் அபாங்கில் கடலாமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.[6]