மலேசிய கூட்டரசு சாலை 37 Malaysia Federal Route 37 Laluan Persekutuan Malaysia 37 | |
---|---|
ரவாங் புறவழிச்சாலை Rawang Bypass Jalan Pintasan Rawang | |
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 10.662 km (6.625 mi) |
பயன்பாட்டு காலம்: | 2005 – |
வரலாறு: | கட்டுமானம் 2017[1] |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | செரண்டா தெற்கு மாற்றுச் சாலை |
மலேசிய கூட்டரசு சாலை 1 கோலாலம்பூர்-ரவாங் நெடுஞ்சாலை | |
தெற்கு முடிவு: | தாமான் ரிம்பா டெம்பிளர் மாற்றுச் சாலை |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கோலா குபு பாரு; செரண்டா; பத்தாங்காலி; பண்டார் பாரு செலாயாங்; செலாயாங்; பத்து மலை |
நெடுஞ்சாலை அமைப்பு | |
ரவாங் புறவழிச்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 37 (ஆங்கிலம்: Malaysia Federal Route 37; அல்லது Rawang Bypass); மலாய்: Laluan Persekutuan Malaysia 37 அல்லது Jalan Pintasan Rawang) என்பது மலேசியா, சிலாங்கூர், ரவாங் நகரத்தில் மலேசிய அரசாங்க நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான புறவழிச்சாலை ஆகும்.[2][1]
ரவாங் புறவழிச்சாலை, 28 நவம்பர் 2017 அன்று போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. ரவாங் புறவழிச்சாலையைக் கட்டுவதற்கு ரிங்கிட் RM 628 மில்லியன் செலவானது. இதன் கட்டுமானம் 16 சூலை 2005-இல் தொடங்கி 21 நவம்பர் 2017-இல் நிறைவடைந்தது.
10 கிமீ நீளம் கொண்ட இந்த ரவாங் புறவழிச்சாலையைக் கட்டுவதற்கு 12 ஆண்டுகள் பிடித்தன. மலைக் குன்றுகளுக்கு இடையில் உயரமான துண்களை எழுப்பி, மேம்பாலங்களைக் கட்டுவதில் ஏற்பட்ட சிக்கல்களினாலும்; இயற்கை இடர்களினாலும் கால தாமதம் ஏற்பட்டது.
இந்தப் புறவழிச்சாலையில் 2.7 கிமீ தொலைவிற்கு மிக உயரமான மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. அந்த மேம்பாலத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் 58.2 மீட்டர் உயரம் கொண்டவை. ரவாங் நகரின் மையத்தில் செல்லும் மலேசிய கூட்டரசு சாலை 1-இல் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க ரவாங் புறவழிச்சாலை கட்டப்பட்டது.[3][4]
இந்தப் புறவழிச்சாலை கட்டப்படுவதற்கு முன்னர், ரவாங் நகர மையத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்; அந்த வகையில், கோலாலம்பூர்-ஈப்போ சாலை வழியாக செரண்டாவில் இருந்து செலாயாங் நகருக்குப் பயணிக்க 2 மணிநேரம் வரை பிடித்தது என்றும் அறியப்படுகிறது.[3][1]
தற்போது இந்த ரவாங் புறவழிச்சாலை, செரண்டா - செலாயாங் பயண நேரத்தை 30 நிமிடங்களாகக் குறைக்க உதவுகிறது.
ரவாங் புறவழிச்சாலை என்பது டெம்பிளர் பூங்கா தொடங்கி செரண்டா வரை செல்லும் 10 கிமீ பிரிக்கப்பட்ட நெடுஞ்சாலை (Divided Highway) ஆகும். இது கோலாலம்பூர்-ரவாங் நெடுஞ்சாலை எனும் மலேசிய கூட்டரசு சாலை 1-இல் இருந்து தொடர்கிறது. அங்கு மலேசிய கூட்டரசு சாலை 1, 5.8% சாய்வுடன் 2.7-கிமீ மேம்பாலம் (Viaduct) வழியாக மேல்நோக்கிச் செல்கிறது. அதற்கு முன், ரவாங்கிற்குத் திருப்பி விடப்படுகிறது.[5]
ரவாங் புறவழிச்சாலை 58.2 மீ உயரத்தில் அதன் மிக உயர்ந்த மேம்பாலத் தூணைக் கொண்டுள்ளது. இது மலேசியாவின் இரண்டாவது மிக உயரமான மேம்பாலச் சாலை வழியாகும்.[3] மீதமுள்ள 6.3 கிமீ பகுதி தரை மட்டத்தில் செல்கிறது.
ரவாங் புறவழிச்சாலை ; கோலாலம்பூர்-ஈப்போ சாலை செரண்டாவுக்கு அருகில் ஒரு மாற்றுச் சாலை வழியாக முடிவடைகிறது.[5]
ரவாங் புறவழிச்சாலையின் இரண்டாவது கட்டத்தின் கட்டுமானத்தின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் விளைவாக கட்டுமானத்திற்கும் அதிக காலம் பிடித்தது. தொடக்கத்தில், திட்டமிடப்பட்ட பாதை சற்று நீளமாகவே இருந்தது; அத்துடன் முற்றிலும் தரைமட்டத்தில் கட்டப்பட திட்டமிடப்பட்டது.
தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட தரைவழிச் சாலை வழியாக, சிலாங்கூர் மாநிலப் பாரம்பரிய பூங்கா மற்றும் டெம்பிளர் பூங்கா வழியாக ரவாங்கிற்குச் செல்லலாம்.[5] சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் அழுத்தங்கள் காரணமாகவும், சாத்தியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் காரணமாகவும், ரவாங் புறவழிச்சாலையின் கட்டுமானம் சீரமைக்கப்பட்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.
மறுவடிவமைப்பின் விளைவாக, சிலாங்கூர் மாநிலப் பாரம்பரிய பூங்காவின் மலைக்குன்றுகளின் பகுதியில் 2.7-கிமீ மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதற்கு முன்னர், தரைவழிச் சாலை அமைக்கப்பட்டால் சிலாங்கூர் மாநிலப் பாரம்பரிய பூங்காவில் உள்ள ஜியாம் காஞ்சிங் (Giam Kanching) மரங்களுக்கு மிகவும் ஆபத்தான நிலை ஏற்படலாம் எனும் எதிர்மறையான தாக்கங்களும் இயற்கை ஆர்வலகளிடையே ஏற்பட்டன.
ஜியாம் காஞ்சிங் மரங்கள் உள்ளூர் இன வகை மரங்களாகும். மேலும் சிலாங்கூர் மாநிலப் பாரம்பரிய பூங்காவில் மட்டுமே அவற்றைக் காண முடியும்.[6][7][8] மேம்பாலக் கட்டுமான அணுகுமுறையின் மூலம், பாதிக்கப்படும் வனப்பகுதி 65 எக்டேரில் இருந்து 24 எக்டேராகக் குறைக்கப்பட்டது.[1] ரவாங் புறவழிச்சாலை 12 ஆண்டுக் கட்டுமானத்திற்குப் பிறகு 21 நவம்பர் 2017-இல் கட்டி முடிக்கப்பட்டது.[3]