ராஜா முதலியார் | |
---|---|
Raja Mudaliar | |
மலாக்கா சுல்தானகத்தின் துறைமுகத் தலைவர் | |
பதவியில் c.1500–1511 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மலாக்கா |
ராஜா முதலியார் அல்லது ராஜா மண்டலியார் (மலாய் மொழி: Raja Mudaliar; ஆங்கிலம்: Raja Mutheliar); என்பவர் 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மலாக்காவில் வாழ்ந்த ஒரு செல்வந்தர்; ஒரு வணிகர். மலாக்காவின் சிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர். அந்தச் சமூகத்தினரின் தலைவராகவும் செயல்பட்டவர்.
செஜாரா மெலாயு (Sejarah Melayu) எனும் மலாய் வரலாற்றுச் சுவடுகளின் கூற்றுப்படி, ராஜா முதலியார் மலாக்காவின் துறைமுகத் தலைவர் (மலாய் மொழி: Syahbandar; ஆங்கிலம்: Chief of Port) பதவியில் சேவை செய்தவர்.
துறைமுகத் தலைவர் பதவி என்பது மலாக்கா சுல்தானகத்தின் மூத்த அமைச்சர்களின் பதவிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. சுல்தான் மகமுட் ஷாவிற்கும் அவரின் பெண்டகாரா துன் முத்தாகிர் என்பவருக்கும் இடையில் அவநம்பிக்கையை விதைப்பதற்காக தவறான குற்றச்சாட்டைச் சுமத்தியதாகவும் சொல்லப் படுகிறது.
அந்த வகையில் இவர் துரோகம் செய்ததாகச் சித்தரிக்கப் படுகிறார். எனினும் துன் முத்தாகிரின் இறப்பிற்கு வேறு காரணங்களும் சொல்லப் படுகின்றன.
சுல்தான் மகமுட் ஷாவின் நிர்வாகம் பலகீனமாக இருந்ததால், துன் முத்தாகிர் லஞ்சம் வாங்கினார் என்றும்; அமைச்சர்களுக்கு சலுகைகள் காட்டினார் என்றும்; அதனால் நிர்வாகம் சீர்குலைந்தது என்றும் சொல்லப் படுகிறது.
நிர்வாகப் பலகீனங்கள் அமைச்சர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தியது. இதன் விளைவாக சுல்தான் மகமுட் ஷா, பெண்டகாரா துன் முத்தாகிரையும் அவரின் முழுக் குடும்பத்தையும் தூக்கிலிட்டுக் கொன்றார்.[1]
துன் முத்தாகிர் தன் மகள் துன் பத்திமாவை, சுல்தான் மகமுட் ஷாவிற்குத் திருமணம் செய்து கொடுக்க இணக்கம் தெரிவிக்காததால் துன் முத்தாகிரின் மீது பழிவாங்கும் எண்ணம் ஏற்பட்டதாகவும் சொல்லப் படுகிறது.
அந்தக் குற்றச்சாட்டின் விளைவாக பெண்டகாரா துன் முத்தாகிர் மற்றும் அவரின் முழு குடும்பத்தினரும் தூக்கிலிடப்பட்டனர். இதன் விளைவாக, பொது மக்களின் வெறுப்பை சுல்தான் மகமுட் ஷா சம்பாதித்தார். சுல்தான் மகமுட் ஷா என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் எட்டாவது சுல்தான் ஆகும்.
அரண்மனை உறவுகளும் இரு பிரிவுகளாகப் பிளவுபட்டது. இந்த ஒற்றுமையின்மையின் காரணத்தினால், மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் விரைவாக ஆக்கிரமிப்பு செய்ய வழிவகுத்துக் கொடுத்தது.
ராஜா முதலியாரின் பேச்சைக் கேட்டு பெண்டகாரா துன் முத்தாகிரையும் அவரின் குடும்பத்தைரையும் கொன்றது தவறு என சுல்தான் மகமுட் ஷா பின்னர் உணர்ந்து சுல்தான் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பின்னர் அவருடைய மகன் அகமட் ஷா பதவிக்கு வந்தார். சுல்தான் அகமட் ஷா என்று அழைக்கப்பட்டார்.
இருப்பினும் மலாக்காவைப் போர்த்துகீசியர்களிடம் இருந்து மீட்க முடியாத காரணத்தினால், 1513-ஆம் ஆண்டில், அவரின் தந்தையார் சுல்தான் மகமுட் ஷாவினால், சுல்தான் அகமட் ஷா கொல்லப்பட்டார்.