ராதா விஸ்வநாதன் | |
---|---|
பிறப்பு | ராதா சதாசிவம் 11 திசம்பர் 1934 கோபிசெட்டிபாளையம், பழைய கோயம்புத்தூர் மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 2 சனவரி 2018 பெங்களூரு, கருநாடகம், இந்தியா | (அகவை 83)
பணி | கருநாடக இசைப் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1940 – 2018 |
ராதா விஸ்வநாதன் (Radha Viswanathan) (11 டிசம்பர் 1934 - 2 ஜனவரி 2018) ஒரு இந்தியப் பாடகர் மற்றும் பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவரது தாயார் கருநாடக இசைப் பாடகரான எம். எஸ். சுப்புலட்சுமியுடன் பாடியுள்ளார்.
1934 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று கோபிசெட்டிபாளையத்தில் பிறந்தார்.[1] தியாகராஜன் சதாசிவம் மற்றும் அவரது முதல் மனைவியான (பார்வதி எனும்) அபிதகுசாம்பாளின் மூத்த மகளாவார். இவரது தந்தை, அபிதகுசாம்பாள் மறைவிற்குப் பின்னர் எம்.எஸ் சுப்புலட்சுமியை மணந்து கொண்டார். அதனால் இவரை எம். எஸ். சுப்புலட்சுமி வளர்த்து ஆளாக்கினார்.[2]
டி.ஆர் பாலாசுப்ரமணியம், ராம்நாத் கிருஷ்ணன், மாயவரம் கிருஷ்ண ஐயர் ஆகியோரிடமிருந்து ராதா தனது ஆரம்ப கால இசைப் பயிற்சியை மேற்கொண்டார். ஐந்து வயதிற்குட்பட்ட வயதில் தன் தாயுடன் இவர் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். வழவூர் ராமையா பிள்ளையிடம், கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகள் ஆனந்தி ராமச்சந்திரனுடன் சேர்ந்து இவர் முதல் சீடராக இருந்து பரதநாட்டியம் கற்றுத் தேர்ந்தார்.[3] பரதநாட்டிய அரங்கேற்தத்தை 1945 ஆம் ஆண்டில் செய்தார். ராதாவும் ஆனந்தியும் எம். எஸ். பதங்களைப் பாடும்பொழுது சேர்ந்து நடனமாடுவார்கள்.[4] வயலின் கலைஞர் எகுடி மெனுகினுக்கு, மியூசிக் அகாதெமி, (சென்னை) இசை நிகழ்ச்சியில் ராதா ஒரு பிரத்யேக நடன நிகழ்ச்சியை நடத்தினார். "கனஷியாம் ஆயாரி" என்ற மீரா பஜன் பாடலை எம்.எஸ். பாட, அதற்கு ராதா, மகாத்மா காந்திக்கு முன்னர் பிர்லா மாளிகையில் நடனமாடியுள்ளார். தனது 21 வயதில், ராதா நடனமாடுவதை விட்டு, பாடுவதின் மீது மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்தார். விரைவில், எம்.எஸ். கச்சேரிகளில் ராதா ஒரு முக்கிய பாடகராக இருந்தார். எம்.எஸ். மற்றும் ராதா ஆகியோர் முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர், கே.வி நாராயணசுவாமி ஆகியோரிடம் கீர்த்தனைகளை கற்றுத் தேர்ந்தனர். மற்றும் பதங்களை டி. பிருந்தாவிடமிருந்து கற்றனர். பனாரஸ் சித்தேஸ்வரி தேவி, திலீப்குமார் ராய் ஆகியோரிடமிருந்து இந்துஸ்தானி பாரம்பரிய இசையைக் கற்றுக் கொண்டார்.