ராம் சம்பத் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | சூலை 25, 1977 |
பிறப்பிடம் | மும்பை, இந்தியா |
இசை வடிவங்கள் | திரைப்பட, மேடை இசை, தனி இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர் |
இசைக்கருவி(கள்) | மின்னணு இசைப்பலகை (கீபோர்டு) |
ராம் சம்பத் (பி. 25 சூலை 1977) ஓர் இந்திய இசை அமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். விளம்பர நிறுவனம் ஒன்றில் இசை அமைப்பாளராக தொழில் வாழ்வைத் துவங்கிய இவர் பின் தனியிசை தொகுப்புகள் மூலமும் அதன் பின் இந்தி திரை இசை மூலமும் பிரபலம் அடைந்தார். இவர் பிரபல நிறுவங்களான ஏர்டெல், டோகோமோ, தம்ப்சு அப், பெப்சி மற்றும் டைம்சு ஆப் இந்தியா ஆகியற்றின் விளம்பரங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
மும்பை நகரில் உள்ள செம்பூரில் பிறந்த ராம் சம்பத்தின் தந்தை ஒரு தமிழர், தாய் கன்னடர். தனது பள்ளிக் கல்வியை செம்பூரில் உள்ள ஓ.எல்.பி.எஸ் மேல் நிலைப் பள்ளியில் பயின்றார். ராம் சம்பத்தின் குடும்பம் இசைப் பாரம்பரியம் கொண்டது. அவரது தாத்தா டி.வி. ராமானுசம் அவர்கள் மும்பையில் உள்ள சண்முகானந்தா அரங்கின் நிறுவனர் ஆவார்[1]. இளமை முதலே கருநாடக இசைக் கலைஞர்கள் அவர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இதனால் ஈர்க்கப்பட்ட அவர் பின்னர் எட்டு ஆண்டுகள் முறையாக கருநாடக இசையைப் பயின்றார். பள்ளிக் கல்விக்குப் பின் அவர் போதார் கல்லூரியில் இளநிலைக் கல்வியைக் கற்றார். அங்கு அவர் கல்லூரி இசைக் குழுவில் விசைப்பலகை கலைஞராக இருந்தார்[2].
ஒரு விளம்பர நிறுவனத்தில் தனது வாழ்வைத் தொடங்கிய ராம் சம்பத், ஏர்டெல், டொகோமோ, தம்ப்சு அப், பெப்சி ஆகிய நிறுவனங்களுக்கும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் "ஐ லீட் இந்தியா" பிரச்சாரத்தின் பாடலையும் இயற்றியுள்ளார்[3].
2008ஆம் ஆண்டு ஆத்திரேலியாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான ஐ.என்.எக்ஸ்.எஸ் (INXS) உடன் இணைந்து அவர்களது பாடல்களின் இந்தியப் பதிப்பை உருவாக்கினார். 2012ஆம் ஆண்டு ஆமிர் கானின் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சிக்காக பிரசூன் ஜோசி எழுத்தில் அவர் இயற்றிய "தேரா ரங் ஆசியா" பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது[4].
புகழ்பெற்ற தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியான கோக் ஸ்டுடியோவில் 2013ஆம் ஆண்டு பருவத்தில் பங்கு பெற்றார்[5].
ராம் சம்பத்தின் முதல் திரைப்படம் ராம் மாத்வானி இயக்கத்தில் வெளியான லெட்ஸ் டாக் ஆகும். அதன் பின் பல படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் அவருக்கு புகழைச் சேர்த்த திரைப்படம் ஆமிர் கான் தயாரிப்பில் 2011ஆம் வெளிவந்த டெல்லி பெல்லி ஆகும். அந்த திரைப்படத்திற்காக அவர் பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
அவரது அடுத்த படமான தலாசு இசைக்காக மிகுந்த வரவேற்பை பெற்றது[6]. அந்த திரைப்படத்தில் பாடல்களை எழுதிய ஜாவேத் அக்தர் தனது அடுத்த படமான புக்ரேவிலும் ராம் சம்பத்தையே இசையமைக்க வைத்தார். புக்ரேவில் அவரது மனைவி சோனா மொகாபாத்ரா பாடிய 'அம்பர்சரியா' பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது[7].
ராம் சம்பத் ஒடிசாவைச் சார்ந்த பாடகர் சோனா மொகாபாத்ராவை மணந்து கொண்டார். 2002ஆம் ஆண்டு இயக்குனர் ராம் மாத்வானி மூலம் சந்தித்த இருவரும் 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பின்னரே சோனா மிகப்பெரிய பாடகராக புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.