ரிஷப் ஷெட்டி | |
---|---|
பிறப்பு | பிரசாந்த் ஷெட்டி[1] 7 சூலை 1983 கீரடி, குந்தாபுரா வட்டம், உடுப்பி மாவட்டம், கருநாடகம், இந்தியா[2] |
படித்த கல்வி நிறுவனங்கள் | பெங்களூர், விஜயா கல்லூரி |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2006–தற்போது வரை |
அறியப்படுவது | காந்தாரா பெல்பாட்டம் (2019) கருட கமனா விருஷப வாகன சர்க்காரி ஹி பிரா. ஷாலே, காசர்கோடு, கொடுகே: ராமண்ணா ராய் (2018) கிக்கி பார்ட்டி |
வாழ்க்கைத் துணை | பிரகதி (தி. 2017) |
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
rishabshettyfilms |
பிரசாந்த் ஷெட்டி,[3] தொழில்ரீதியாக ரிஷப் ஷெட்டி (Rishab Shetty) என்று அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய நடிகரும் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் முதன்மையாக கன்னடத் திரையுலகில் பணியாற்றுகிறார். 2022 வெளியான காந்தாரா படம் மூலம் பிரபலமானார். ரிஷப் ஷெட்டி அத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கி, முக்கிய கதாநாயகனாகவும் நடித்திருந்தார். சர்க்காரி ஹி பிரா. ஷாலே, காசர்கோடு, கொடுகே: ராமண்ணா ராய் (2018) படத்திற்காக 66வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருது உட்பட பல பாராட்டுகளை பெற்றவர்.
ரிஷப் ஷெட்டி 1983 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி கர்நாடகாவின் தெற்கு கன்னட மாவட்டத்திலுள்ள மங்களூருவில் உள்ள கீரடி என்னுமிடத்தில் பிறந்தார்.[4] கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள குந்தாபுராவில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், பின்னர் பெங்களூரு விஜயா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். குந்தாபுராவில் யக்சகானம் நாடகங்கள் மூலம் நாடகப் பயணத்தைத் தொடங்கினார். பெங்களூரில் படிக்கும் போது நாடகங்களில் தீவிரமாக பங்கேற்றார். இந்த நாடகங்களின் வெற்றி இவரை ஒரு தொழில்முறை நடிகராக்கியது.[5]
ரிஷப் ஷெட்டி தனது கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு, சிறிய அளவில் வருமானம் ஈட்டும் சில பணிகளை செய்து வந்தார். அதே சமயம் திரைப்படங்களிலும் தனது வாய்ப்புகளை முயற்சி செய்தார்.[6][7] மேலும், பெங்களூரில் உள்ள அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் திரைப்பட இயக்கத்தில் சான்றிதழும் பெற்றார்.[8] திரைப்பட படப்பிடிப்புகளில் உதவி இயக்குநராக பணியாற்றத் தொடங்கினார். அபோது இயக்குநர் ரக்சித் ஷெட்டியுடன் நண்பரானார்.
துக்ளக் திரைப்படத்தில் இவரது முதல் முக்கிய வேடம் இருந்தது.[9] இவர் பவன் குமாரின் லூசியாவில் காவல் அதிகாரியாக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். பின்னர் ரக்சித் ஷெட்டி இயக்கி 2014ல் வெளியான உளிதவரு கண்டந்தை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பின்னர் 2016 இல், ரக்சித் ஷெட்டி நடிப்பில் இவரது அறிமுக இயக்கத்தில் ரிக்கி படம் வெளியானது. அதே ஆண்டில், இவர் கிரிக் பார்ட்டி படத்தை இயக்கினார். பிறகு சர்க்காரி ஹி பிரா. ஷாலே படத்தை இயக்கினார். திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், 66 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.
ரிஷப் ஷெட்டி, பெல் பாட்டம் (2019) திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இது 2019 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற கன்னடத் திரைப்படமாகும். 2021 ஆம் ஆண்டு வெளியான கருட கமனா விருஷப வாகன திரைப்படம் மங்களூருவைச் சேர்ந்த கும்பல் தலைவன் 'ஹரி'யின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது. இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதில் ரிஷப் ஷெட்டி மற்றும் ராஜ் பி. ஷெட்டியின் நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.[10]
2022 ஆம் ஆண்டில் ரிஷப் ஷெட்டி ஹோம்பலே பிலிம்ஸுடன் இணைந்து இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் வெளியானது. எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த கன்னடத் திரைப்படங்களில் காந்தாரா இரண்டாவது இடத்தில் இருந்தது.[11] ஆரம்பத்தில் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. பின்னர், படம் வெற்றிபெற்ற பிறகு மற்ற நான்கு இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது.[12] இந்தத் திரைப்படம் நாடு தழுவிய பாராட்டுகளைப் பெற்றது. பல திரைப்பட விமர்சகர்கள் கதாநாயகனாக ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பாராட்டினர். 54 வது பன்னாட்டுத் திரைப்பட விழாவில் (2023) காந்தாரா வெள்ளி மயில் - சிறப்பு நடுவர் விருதை வென்றது.[13]