ரீட்டா கங்குலி | |
---|---|
பிறப்பு | இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா |
பணி | இந்துஸ்தானி இசைக் கலைஞர் |
அறியப்படுவது | இந்துஸ்தானி இசை |
பெற்றோர் | கே. எல். கங்குலி மீனா |
வாழ்க்கைத் துணை | கேசவ் கோத்தாரி |
பிள்ளைகள் | மேக்னா கோத்தாரி மற்றும் அரிஜித் ஆகியோரின் தாய் |
விருதுகள் | பத்மசிறீ சங்கீத நாடக அகாதமி விருது பிரியதர்சி விருது ராஜீவ் காந்தி சிரோண்மணி விருது கிரிட்டிக்ஸ் சர்க்கிள் ஆப் இந்தியா விருது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது |
ரீட்டா கங்குலி (Rita Ganguly) ஓர் இந்தியப் பாரம்பரியக் கலைகளின் நிபுணரும், திறமையான நடனக் கலைஞரும், இசைக்கலைஞரும் மற்றும் பாடகரும் ஆவார். இவருக்கு 2000 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருது [1] மற்றும் 2003 இல் பத்மசிறீ விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது. [2] இவர் பாலிவுட் திரைப்பட நடிகை மேக்னா கோத்தாரி என்பவரின் தாயாவார்.
ரீட்டா கங்குலி உத்தரபிரதேசத்தின் இலக்னோவில் ஒரு பெங்காலி பிராமண குடும்பத்தில் ஒரு பத்திரிகையாளரான கே. எல். கங்குலி மற்றும் அவரது மனைவி மீனா கங்குலி ஆகியோருக்கு மகளாக பிறந்தார். கே. எல். கங்குலி ஒரு சுதந்திர போராட்ட வீரராகவும் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும் இருந்தார். 1938 ஆம் ஆண்டில், ஜவகர்லால் நேரு அவர்களால் நிறுவப்பட்ட நேசனல் ஹெரால்டு என்ற செய்தித்தாளின் முதல் ஆசிரியராகவும் இருந்தார். [3] [4]
செய்தித்தாள் லக்னோவில் அமைந்தது. எனவே, ரீட்டா இங்கு வளர்ந்தார். கோபேசுவர் பானர்ஜியின் கீழ் தனது 12 வயதில் ரவீந்திரசங்கீதத்தைக் கற்கத் தொடங்கினார். [3] பின்னர் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தில், இவரது மூத்த சகோதரி கீதா கட்டக் உடன் சேர்ந்து கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதகளி மற்றும் மணிப்புரியின் இந்திய பாரம்பரிய நடன வடிவங்களைப் படித்தார். [4] புகழ்பெற்ற குருக்களான, குஞ்சு குருப் மற்றும் சாந்து பனிக்கர் [5] ஆகியோரின் கீழ் கதகளியில் மேலதிக பயிற்சிகளை மேற்கொண்டார். மேலும் நியூயார்க்கின் மார்த்தா கிரஹாம் பள்ளியில் நவீன நடனத்தில் பயிற்சி பெற்றார். இவர் உருசியாவின் போல்ஷோய் அரங்கம் உட்பட பல்வேறு கட்டங்களில் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
நடனத்தின் ஆசிரிய உறுப்பினராக தேசிய நாடக பள்ளியில் சேர்ந்தார். அங்கு இவர் இயக்கம் மற்றும் மைம் என்ற புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக அறியப்படுகிறது. [6] இவர் முப்பது ஆண்டுகள் தேசிய நாடகப் பள்ளியில் கற்பித்தார். அங்கு இவர் பணியாற்றிய காலத்தில், இவர் தயாரிப்புகள் மற்றும் ஆடை வடிவமைப்பில் பங்களித்ததாக அறியப்படுகிறது. பாரம்பரிய கலைகளுக்கான பொழுதுபோக்கு அரங்கம் மற்றும் விக்ரிஷ்ட மத்தியம் என்ற அரங்கம் ஆகியவற்றை கட்டும் முயற்சிகளிலும் இவர் பெருமைப்படுத்தப்படுகிறார். தேசிய நாடகப் பள்ளியின் உதவியுடன், இவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகளுக்கு சென்று, அங்கு நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். மேலும், இந்திய பாரம்பரிய கலைகளுக்கான பட்டறைகளை நடத்தினார்.
ஐம்பதுகளில், தில்லியில் ஒரு நிகழ்ச்சியின் போது பாடுவதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தபோது இவரது வாழ்க்கை மாறியது. இதன் பின்னர் இவர் பாடுவதில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். [4] புகழ்பெற்ற கதக் குருவான ஷம்பு மகாராஜாவால் ஊக்கப்படுத்தப்பட்ட இவர், பிரபலமான பாடகியான சித்தேஸ்வரி தேவியுடன் இந்தியாவில் பல இடங்களில் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். [3] இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றின் போது, புகழ்பெற்ற இந்துஸ்தானி இசைப் பாடகரான பேகம் அக்தர் கங்குலியைச் சந்தித்து தனது சீடராக அழைத்துச் சென்றார். இந்த பாடகர்களுக்கிடையேயான பிணைப்பு 1974 இல் அக்தர் இறக்கும் வரை நீடித்தது.
ரீட்டா கங்குலி 2000 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றுள்ளார். [1] 2003 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதை வழங்கி இந்திய அரசு இவரை கௌரவித்தது. இவர் பிரியதர்சி விருது, ராஜீவ் காந்தி சிரோமணி விருது, கிரிடிக்ஸ் சர்க்கிள் ஆஃப் இந்தியா விருது மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். [3]
ரீட்டா கங்குலி 'கலாதர்மி' என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இது கலை நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதற்கான ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். மேலும் பேகம் அக்தரின் கசல் இசை அகாடமியின் தலைவரும் ஆவார். [7] [8] [3]
ரீட்டா கங்குலி, சங்கீத நாடக அகாதமியின் முன்னாள் செயலாளர் கேசவ் கோத்தாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள், அரிஜித் என்ற ஒரு மகனும் மற்றும் பாலிவுட் நடிகையான மேக்னா கோத்தாரி என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். [4]