ருத்ரவீணா | |
---|---|
இயக்கம் | கைலாசம் பாலசந்தர் |
தயாரிப்பு | நாகேந்திர பாபு |
கதை | கே. பாலச்சந்தர் கணேஷ் பாட்ரோ |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிரஞ்சீவி ஜெமினி கணேசன் சோபனா |
ஒளிப்பதிவு | ஆர். இரகுநாத ரெட்டி |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
கலையகம் | அஞ்சனா புரொடக்சன்ஸ் |
விநியோகம் | கீதா ஆர்ட்ஸ் |
வெளியீடு | 4 மார்ச்சு 1988 |
ஓட்டம் | 170 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ருத்ரவீணா (Rudraveena) என்பது கே. பாலச்சந்தர் எழுதி இயக்கி 1988 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த நாடக திரைப்படமாகும். நாகேந்திர பாபு என்பவர் அஞ்சனா புரொடக்சன்ஸ் சார்பில் இதை தயாரித்திருந்தார். இப்படத்தில் சிரஞ்சீவி, சோபனா ஆகிய இருவரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஜெமினி கணேசனுடன் இணைந்து முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இது தெலுங்குத் திரைப் படங்களில் ஜெமினியின் அரிய தோற்றங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. மேலும் இது, தெலுங்குத் திரையில் கன்னட நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரமேஷ் அரவிந்தின் நடிப்பை அறிமுகப்படுத்தியது. பி. எல். நாராயணா, பிரசாத் பாபு, சுமித்ரா, தேவிலலிதா, மற்றும் பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்திருந்தனர்.
கணேஷ் பட்ரோ படத்தின் உரையாடலை எழுதியுள்ளார். படத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையை இளையராஜா அமைத்திருந்தார். ஆர். இரகுநாத ரெட்டி படத்தின் ஒளிப்பதிவு இயக்குநராக இருந்தார். படத்தொகுப்பை கணேஷ் குமாரும், மோகனம் கலை இயக்குநராகவும் இருந்தனர்.
இத்திரைப்படம் புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞரான 'பிலஹரி' கணபதி சாத்திரி, என்பவருக்கும் அவரது இளைய மகன் சூர்யநாராயணா என்கிற சூர்யம் ஆகியோருக்கிடையிலான கருத்தியல் மோதல்களில் கவனம் செலுத்துகிறது. தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சாத்திரி அளித்த பாகுபாடு அவரது மகன் சூர்யத்தால் விமர்சிக்கப்படுகிறது. அவர் சமூகத்தின் நலனை நம்புகிறார். பின்னர் அவர்களின் நன்மைக்காக வீட்ட்டை விட்டு வெளியேறுகிறார். சாத்திரியின் பார்வைகளில் மாற்றத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகள் கதையின் மீதமுள்ள பகுதியை உருவாக்குகின்றன.
சிரஞ்சீவி தனது சகோதரர் நாகேந்திர பாபு கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு படங்களில் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினார். திரைப்பட தயாரிப்பில் அனுபவத்தைப் பெற, பாபு கீதா ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தார்.[2] அவர் தனது தாயார் கே.அஞ்சனா தேவிக்குப் பிறகு அஞ்சனா புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.[3] சிரஞ்சீவியை ஒரு அதிரடி நாயகனாக காட்டாமல் வழக்கத்திற்கு மாறாக ஒரு படம் தயாரிக்க அவர் திட்டமிட்டார். சங்கராபரணம் (1980) மற்றும் சிந்து பைரவி (1985) ஆகியவற்றைப் பார்த்த பிறகு, பாபு சிரஞ்சீவியின் வழிகாட்டியான கே.பாலசந்தரை அணுகி தனது முதல் தயாரிப்பு முயற்சியில் இறங்கினார். இதி கத காது (1979) மற்றும் 47 ரோஜுலு (1981) ஆகிய படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றினர்; இவர் இரண்டு படங்களிலும் பாபு வில்லனாக நடித்தார்.[4] பாலச்சந்தர் படத்தை இயக்கினார்.[5]
படத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையை இளையராஜா மேற்கொண்டார்.[6] சிறீவெண்ணிலா சீத்தாராம சாத்திரி பன்னிரண்டு பாடல்களை எழுதினார்.[7] இதில் ஒன்பது பாடல்கள் படத்தில் இடம் பெற்றது.[8] பாட்ரோவின் கூற்றுப்படி, கதாநாயகர்களின் கனவுகளில்விட கதையை வெளிப்படுத்த பாடல்களை பாலச்சந்தர் விரும்பினார். தெலுங்கு எழுத்தாளர் சிறீ சிறீ எழுதிய "செப்பலானி உந்தி" என்ற பாடலில் மகா பிரஸ்தானம் என்ற கவிதைத் தொகுப்பின் வசனங்களை தயாரிப்பாளர்கள் பயன்படுத்தினர்.[9]
ருத்ரவீணா ₹ 8 மில்லியன் அளாவில் தயாரிக்கப்பட்டது.[7] மார்ச் 4, 1988 அன்று வெளியான இப்படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.[10] இது இந்தியாவின் 12 வது சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது .[11] இருப்பினும், இது ஒரு வணிக ரீதியாக தோல்வியைத் தழுவியது. மேலும் பாபு ₹ 0.6 மில்லியன் நஷ்டம் அடைய வேண்டியிருந்தது. பசிவாடி பிராணம், சுயம்கிருஷி, ஜேப்பு தொங்கா (அனைத்தும் 1987 இல் வெளியிடப்பட்டது) மஞ்ச்சி தொங்கா (1988) போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்த சிரஞ்சீவிக்கு இது ஒரு பின்னடைவாகக் கூறப்பட்டது. ருத்ரவீணாவை தனிப்பட்ட முறையில் ஆன்மீக விழிப்புணர்வுள்ள படமாக பாபு கருதினார். அதைப் பற்றி ஒரு புத்தகம் எழுதலாம் என்று உணர்ந்தார். அதே ஆண்டில் பாலச்சந்தரால் இந்த படம் தமிழில் உன்னால் முடியம் தம்பி என மறுபெயரிட்டு எடுக்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் சிரஞ்சீவியின் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.[12] அதே நேரத்தில் ஜெமினி கணேசன் அதே பாத்திரத்தில் நடித்தார்.[13]
36 வது தேசிய திரைப்பட விருதுகளில், ருத்ரவீணா மூன்று பிரிவுகளில் வென்றது: தேசிய ஒருங்கிணைப்பிறகாக சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது, சிறந்த இசையமைப்பு, சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான (எஸ். பி. பாலசுப்பிரமணியம்) விருது .[14] இதன் மூலம், சப்தபாடிக்கு (1981) பிறகு நர்கிஸ் தத் விருதைப் பெற்ற ஒரே தெலுங்கு படம் இதுவாகும் .[7] சலங்கை ஒலி (1983) மற்றும் சிந்து பைரவிக்குப் பிறகு இது இளையராஜாவின் மூன்றாவது விருதாகும்.[15] சீதாராமசாத்திரி ஒரு பாடல் வித்தியாசத்தில் சிறந்த பாடலாசிரியர் விருதை இழந்தார். சிரஞ்சீவிக்கு சிறப்பு ஜூரி விருது , நந்தி விருதுகள் உட்பட மேலும் நான்கு விருதுகளை வென்றது. [16]