ரோர்: டைகர் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் | |
---|---|
![]() விளம்பரப் பதாகை | |
இயக்கம் | கமல் சாதனா |
தயாரிப்பு | அபீஸ் ரிஜ்வி |
கதை | கமல் சாதனா அபீஸ் ரிஜ்வி |
இசை | ஜான் ஸ்டீவர்ட் பிஜிஎம் |
நடிப்பு | அபினவ் ஹிமர்சா வெங்கடசாமி அசிம் டைகர் சுப்ரட் தத்தா நோரா பதேகீ அலி குலி மிர்ஜா அடில் சாஹல் வரிந்தர் சிங் குமன் ஆரன் சௌதரி பிரனாய் தீஷித் புல்கிட் ஜவகர் |
ஒளிப்பதிவு | மைக்கல் வாட்சன் |
படத்தொகுப்பு | கமல் சாதனா முஜாமில் நாசிர் |
கலையகம் | ஏஏ பிலிம்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 31, 2014 |
ஓட்டம் | 123 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ரோர்: டைகர் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் என்பது 2014 இல் கமல் சாதனா எழுதி இயக்கி வெளிவந்த இந்திய இந்தி மொழித் திரைப்படமாகும். 2014 அக்டோபர் 31 ஆம் நாள் வெளிவருவதற்கு முன்னரே இத்திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சியை நடிகர் சல்மான் கான் ஜூலை 31 அன்றே மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டார். தனது குட்டியினைத் தேடும் ஒரு வெள்ளைப் புலியுடன் ஒரு குழுவினர் நடத்தும் சாகசப் போராட்டமே கதைக் களமாகும்.[1][2][3][4][5][6]
அடர்ந்த சதுப்பு நிலக் காட்டுப் பகுதியில் மனிதனுக்கும் விலங்குக்கும் இடையே நடக்கும் முரண்பாடுகளைக் காட்சிப்படுத்தும் வகையில் இத்திரைப்படம் படமெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 800 இக்கும் மேற்பட்ட சிறப்புத் தோற்றங்களுடன் சுந்தரவனக் காடுகளில் மேலிருந்துகீழான காட்சிப்பாடுகளுடன் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் கமல் சாதனா கூறுகையில், நான்கு மாதங்களாகப் பரிட்சார்த்த படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு, பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸிலும் தாய்லாந்திலும் பயிற்றுவிக்கப்பட்ட புலியுடன் படப்பிடிப்பு நடத்தி, அதைக் காட்சி விளைவுகள் கொண்டு படமாக்கப்பட்டது என்றார். மேலும் தயாரிப்பாளர் அபீஸ் ரிஜ்வியுடன் இந்தக் காட்சி விளைவுகளை இணையவழிப் பயிற்சியில் கற்றுக் கொண்டோம் என்றார்.[7]
தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் திரைப்படத்தில் பணியாற்றிய லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மைக்கல் வாட்சன் ஒளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றினார். ஸ்காண்டினேவியா நாட்டைச் சேர்ந்த சிறப்புக் குழுவினர் உலங்குப்படக் கருவி கொண்டு மேலிருந்து படம்பிடித்தனர். இதில் 150 சர்வதேச வல்லுநர்களைக் கொண்ட படக்குழுவினரும் 300 ஊழியர்கள் கொண்ட காட்சி விளைவு நிறுவனமும் இதில் பங்களித்துள்ளதாகவும் இவற்றைத் தொகுத்துப் படச்சுருளில் கொண்டுவரப் பன்னிரண்டு மாதங்களானதாகவும் தயாரிப்பாளர் ரிஜ்வி குறிப்பிடுகிறார். அகாதமி விருது பெற்ற ரெசுல் பூக்குட்டி இதன் ஒலி நுட்பத்திற்கு ஒப்பந்தமானார்.
ரோர் திரைப்படமானது கலந்துபட்ட விமர்சனங்களைப் பெற்றது. இதன் புதிய கதையம்சம் திரைப்படத்தைச் சுவாரசியமாக்குகிறது, மேலும் படத்தொகுப்பும், கணினி வரைகலையும் சிறப்பாகக் கொண்டு இந்தியாவில் காணாத வகையில் திரைப்படமாக்கியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.[8] ஆனால் இப்படம் என்பது மூளையில்லாதவர்களுக்கானது என்று காட்டமாக ஏபிபிலைவ் விமர்சித்துள்ளது.[9] ரோர் என்பது காட்சி விருந்தாகவும் பிரமிக்கும் திரையில் சுந்தரவனத்தின் இயற்கை அழகை அருமையாகவும் காட்டியுள்ளார்கள் என்று சுபாஸ் கே ஜா குறிப்பிடுகிறார். மேலும் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருப்பதாகவும் கூறினார்.[10] ரெட்டிஃப் தளமானது 2.5 நட்சத்திர மதிப்புடன் இப்படம் எதிர்பார்ப்பினை ஏமாற்றாமல் புதுமையான யுக்தியில் கணினி வரைகலையை நியாயமாகவும் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடுகிறது.[11] ஹாலிவுட் படங்களைப் போலப் பிரம்மாண்ட கணினி வரைகலையுடன் கதை சொல்வதாக பிலிம்பேர் இதழ் குறிப்பிடுகிறது. மேலும் பொருளாதாரத்தில் பெரிய ஹாலிவுட் படங்களைப் போல பட வேலைகள் அமைந்துள்ளதாகவும் காட்டின் விலங்குகளையும் தாவரங்களையும் பிரம்மாண்டமாக ஒளிப்பதிவு செய்துள்ளதாகவும் சிறப்புத் தோற்றங்களெல்லாம் தரமாக இருப்பதாகவும் அதே இதழ் குறிப்பிடுகிறது.[12] மூவி டாகீஸ் என்ற தளமானது மூன்று நட்சத்திர மதிப்புடன் படத்தின் கலையம்சமும் தொழில்நுட்பத் திறனும் இதர படங்களைவிட இதைத் தூக்கி நிறுத்துவதாகக் கூறுகிறது.[13]
பாக்ஸ் ஆபிஸ் இந்தியாவின்படி ரோர் படமானது முதல் நாளில் மட்டும் 1.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது[14] மேலும் மொத்தமாக 4.75 முதல் 5 கோடி வரை முதல் வாரத்தில் வசூல் செய்துள்ளது.[15] ஆனால் மூவிகிளாமர் தளமானது முதல் நான்கு நாளிலேயே 7 கோடியும்,[16] பாலிவுட் ஹங்கமா தளமானது 8.3 கோடிக்கு முதல் வாரம் ஓடியதாகக் குறிப்பிடுகின்றன.[17]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)