லாலாங் நடவடிக்கை (Operation Lalang) | |
---|---|
இடம் | கோலாலம்பூர், மலேசியா |
இலக்கு | இனப் பதற்றத்தைத் தணிக்க |
திகதி | 27 அக்டோபர் 1987 20 நவம்பர் 1987 | -
செயற்படுத்தியோர் | மலேசிய சிறப்புக் காவல்துறை அரச மலேசியக் காவல்துறை |
விளைவு | 119 பேர் கைது; நான்கு நாளிதழ்கள் முடக்கம் |
பாதிக்கப்பட்டோர் | இல்லை |
லாலாங் நடவடிக்கை (மலாய்: Operasi Lalang; ஆங்கிலம்: Operation Lalang); என்பது மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Internal Security Act); 1960-இன் கீழ் மலேசிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பரவலான கைது நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையை களையெடுப்பு நடவடிக்கை (Operation Weeding) என்றும் அழைப்பது உண்டு.
மலேசியாவில் இனக் கலவரம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது. இந்தத் கைது நடவடிக்கை 1987 அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கி 1987 நவம்பர் 20-ஆம் தேதி வரையில் நீடித்தது.
தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்று கருதப்பட்ட அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், கல்விமான்கள், சீன மதவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மதப் பிரமுகர்கள், மாணவர்கள், கலைஞர்கள், அறிவியலாளர்கள் என 106 >>> 119 பேரை மலேசியப் போலீசார் கைது செய்தனர். விசாரணையின்றி தடுத்தும் வைத்தனர்.
அதே காலக் கட்டத்தில், ஆங்கில மொழி செய்தித்தாள்கள் தி ஸ்டார் (The Star), சீன செய்தித்தாள் சின் சிவ் சிட் போ (Sin Chew Jit Poh); மற்றும் வாராந்திரப் பத்திரிகைகளான மலாய் செய்தித்தாள் வாத்தான் (Watan), ஆங்கில மொழி செய்தித்தாள் தி சண்டே ஸ்டார் (The Sunday Star); ஆகியவற்றின் உரிமங்கள் மீட்டுக் கொள்ளப்பட்டன.
நாட்டிற்குள் இனப் பதற்றம் ஓர் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது; பதட்டத்தைத் தூண்டியவர்களைக் கைது செய்ய வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது எனும் காரணங்களை மலேசிய அரசாங்கம் முன்வைத்தது.
இருப்பினும் இனக் கலவரங்கள் உடனடியானவை எனும் அரசாங்கத்தின் கருத்திற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப் பட்டன. மேலும் இந்த நடவடிக்கை பிரதமர் மகாதீர் பின் முகமதுவின் அரசியல் எதிரிகளைக் கொடூரமான முறையில் கட்டுப்படுத்த வடிவமைக்கப் பட்டது என்றும் பரவலாக நம்பப் படுகிறது.
1969-ஆம் ஆண்டு மே 13 சம்பவத்தின் போது நடைபெற்ற கைது நடவடிக்கைக்குப் பிறகு, அதுவே மலேசியாவில் இரண்டாவது பெரிய கைது நடவடிக்கையாகும்.[1]
மலேசிய வரலாற்றில் இருண்ட காலக் கட்டங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப் படுகிறது. இந்த நிகழ்வு மகாதீரின் சர்வாதிகார ஆட்சியின் தொடக்கத்தைக் குறிப்பதாகவும் சொல்லப் படுகிறது.[2]
இந்தக் கைது நடவடிக்கைக்கு முன்னர் நாட்டில் பல அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பல அரசியல் பிரச்சினைகள் நிலவி வந்தன. அவை இனப் பதற்றங்களையும் ஏற்படுத்தி வந்தன.
கைது நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்த மலேசிய அரசாங்கத்தின் வெள்ளை அறிக்கையில் (White paper) கீழ்க்கண்டவாறு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பல்வேறு குழுக்கள் அரசாங்கத்தின் தாராளவாதத் தன்மை, சகிப்புத் தன்மை அணுகுமுறைகளை தவறாகப் பயன்படுத்திக் கொண்டன. "உணர்ச்சிகரமான பிரச்சினைகளைத் தொட்டு விளையாடின. அதன் மூலம் நாட்டில் இனப் பதற்றத்தை உருவாக்கின.
இந்த இனப் பதற்ற நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தை, விரைவாகவும், உறுதியாகவும் செயல்பட கட்டாயப் படுத்தியது என்றும் அரசாங்கம் கூறியது.
1986-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும், 1987-ஆம் ஆண்டிலும் அம்னோ கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு இரண்டு குழுக்கள் உருவாகின.
மகாதீர் தலைமையிலான அணி ஏ என்றும்; துங்கு ரசாலி அம்சா, மூசா ஈத்தாம் தலைமையிலான அணி பி என்றும் இரு குழுக்களாகப் பிரிந்தன.[3] இதன் விளைவாக மகாதீரின் தலைமைப் பதவிக்குச் சவால் விடப்பட்டது. இதன் தொடர்ச்சியில் நடைபெற்ற அம்னோ பேராளர் மாநாட்டில் மகாதீர் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றாலும் சட்டரீதியான சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டது.[4]
அதே காலக் கட்டத்தில், பல அரசு சாரா நிறுவனங்களும், அரசாங்கத்தின் பல்வேறு கொள்கைகளை விமர்சித்து, அரசாங்கத்தின் மீது தாக்குதல்களைத் தொடுத்து வந்தன.
அந்த அரசு சாரா நிறுவனங்களை "அறிவுசார் உயர் அடுக்குகள்" என்றும்; "வெளிநாட்டு சக்திகளின் கருவிகள்" என்றும்; மக்களாட்சியின் நாசக்காரர்கள் என்றும்; மகாதீர் சாடினார்.[5]
இதே வேளையில் இனம் மற்றும் மதம் தொடர்பான பல பிரச்சினைகளும் எழுந்தன. அவை இனப் பதற்றத்தை ஏற்படுத்தின. மலாயா பல்கலைக்கழகத்தில், சீன மொழி, தமிழ் மொழி ஆய்வுத் துறைகளில், மாணவர்களின் விருப்பப் பாடங்கள் மலாய் மொழியில் போதிக்கப்படும் என்று மலேசியக் கல்வியமைச்சு அறிவிப்பு செய்ததும் ஒரு பிரச்சினையானது.[6]
மலேசிய சீனர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த லீ கிம் சாய் என்பவர் வந்தேறிகள் "(pendatang)" எனும் சொல்லைப் பயன்படுத்துவது குறித்தும் கேள்வி எழுப்பினார். அத்துடன் கட்டாயமாக மதம் மாறுதல் பற்றியும் கேள்வி எழுப்பினார்.[7]
இந்த நிலையில் சீன மொழித் தொடக்கப் பள்ளிகளுக்கு, ஏறக்குறைய 100 மூத்த உதவியாளர்களையும்; மேற்பார்வையாளர்களையும் நியமிக்க கல்வி அமைச்சு எடுத்த முடிவுதான் முக்கியமான காரணமாகக் கருதப் படுகிறது.[8]
சீன மொழியில் கல்வியறிவு இல்லாதவர்களைச் சீனமொழிப் பள்ளிகளின் உயர்ப் பதவிகளில் நியமனம் செய்தால், அந்தச் செயல்பாடு சீன மொழியைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும்; மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளி ஊழியர்களுடன் தொடர்பு கொள்வதற்கு ஆங்கிலம் அல்லது மலாய் மொழியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் சீனக் கல்வியாளர் குழுக்கள் வாதிட்டன.[9]
11 அக்டோபர் 1987-ஆம் தேதி, மலேசிய ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்களின் சங்கம் (UCSCAM); சீனப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம்; சீனப் பள்ளி அறங்காவலர்கள் சங்கம் (Dong Jiao Zong); ஆகிய சங்கங்களின் 2,000 ஆர்வலர்கள் கோலாலம்பூரில் தியன் ஊ கோயிலுக்கு (Thean Hou Temple) அருகில் உள்ள ஐனானீஸ் சங்கக் கட்டிடத்தில் கூட்டம் நடத்தினர்.
மலேசிய சீனர் சங்கத்தின் துணைத் தலைவரும் தொழிலாளர் துறை அமைச்சருமான லீ கிம் சாய்; ஜனநாயக செயல் கட்சியின் (DAP) தலைவர் லிம் கிட் சியாங் மற்றும் கெராக்கான் கட்சி; மற்றும் பிற கட்சிகளின் பிரதிநிதிகள் போன்ற சீன அடிப்படையிலான கட்சிகளின் முக்கிய அரசியல்வாதிகள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சீன மொழியில் கல்வியறிவு இல்லாதவர்களைச் சீனமொழிப் பள்ளிகளின் உயர்ப் பதவிகளில் நியமனம் செய்யும் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்க வேண்டும். இல்லா விட்டால், மலேசியாவில் உள்ள சீனப் பள்ளிகள் மூன்று நாட்களுக்குப் பணிமுடக்கம் செய்வதற்கான அழைப்பு அந்தக் கூட்டத்தில் விடுக்கப்பட்டது.[8]
இருப்பினும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதற்காகக் கடைசி நேரத்தில் பணிமுடக்கம் கைவிடப்பட்டது, இருப்பினும் 57 பள்ளிகள் பணிமுடக்க அறிக்கை கிடைக்காத காரணத்தினால் அல்லது முடிவை ஏற்காத காரணத்தினால் அக்டோபர் 15-ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.[10]
புறக்கணிப்பு அதிகாரப்பூர்வமாக ஒத்திவைக்கப் பட்டாலும், அம்னோ இளைஞர்கள் மூலமாகப் பதிலடி கொடுக்கப்பட்டது. அக்டோபர் 17-ஆம் தேதி, கோலாலம்பூர், கம்போங் பாரு, ராஜா மூடா சாலையில் இருந்த டி.பி.சி.ஏ. அரங்கத்தில் (TPCA Stadium) 10,000 பேர் கூடி பேரணி நடத்தினர்.[11]
அம்னோ அரசியல்வாதிகள் மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர்கள் மீது கண்டனம் தெரிவித்தனர். மலேசிய சீனர் சங்கத்தின் துணைத் தலைவர் லீ கிம் சாய் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்னோ தரப்பினர் அழைப்பு விடுத்தனர்.
அதற்குப் பதிலடியாக அம்னோ தரப்பைச் சார்ந்த கல்வி அமைச்சர் அன்வார் இப்ராகிம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சீனர் தரப்பினர் வேண்டுகோள் வைத்தனர்.
கோலாலம்பூரில் உள்ள கம்போங் பாருவில் நடந்த மலாய் பேரணிக்கு அப்போதைய அம்னோ இளைஞர் பிரிவின் தலைவரான நஜிப் துன் ரசாக் தலைமை தாங்கினார். பேரணியின் போது, ஒரு கீரிஸ் கத்தியை சீன இரத்தத்தில் ஊற வைக்கப்படலாம் என மிரட்டியதாகவும் சொல்லப் படுகிறது. மே 13 கலவரம் போல மீண்டும் ஒரு நிகழ்ச்சி நிகழலாம் எனும் அச்சத்தைச் சீன சமூகத்திற்குள் தூண்டியது.[12][13][14][15] மலாய்த் தீவிர தேசியவாதிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி கோலாலம்பூர் நகரில் இருந்த பல சீன வணிகங்கள் சில நாட்களுக்கு மூடப் பட்டன.
பிரதமர் மகாதீர் பின் முகமது வெளிநாட்டில் இருந்தபோது, அம்னோ கட்சியின் பொதுச் செயலாளர் சனுசி ஜூனிட் மற்றும் பிற அம்னோ தலைவர்கள்; கோலாலம்பூரில் அம்னோவின் 41-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாட ஒரு மாபெரும் பேரணியை நடத்த திட்டம் வகுத்தனர். இந்தப் பேரணி முதலில் ஜொகூர் பாருவில் நடத்தப்பட இருந்தது.
ஆனால் அந்தப் பேரணி பின்னர் கோலாலம்பூருக்கு மாற்றப் பட்டது. அந்தப் பேரணியில் ஐந்து இலட்சம் உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் மகாதீர் நாடு திரும்பியதும் அந்தப் பேரணி ரத்து செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக லாலாங் நடவடிக்கை தொடங்கப்பட்டது.[8]