லூசி கோமிசார் (Lucy Komisar) நியூயார்க் நகரத்தை தளமாகக் கொண்ட புலனாய்வு பத்திரிகையாளர் மற்றும் நாடக விமர்சகர் ஆவார்.
லூசி கோமிசார் 1962 முதல் 1963 வரை மிசிசிப்பியின் ஜாக்சனில் உள்ள மிசிசிப்பி ஃப்ரீ பிரஸ்ஸின் ஆசிரியராக இருந்தார். இது, வாராந்திர சிவில் உரிமைகள் இயக்கம் தொடர்புடைய அரசியல் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகளை வெளியிட்டது. மிசிசிப்பியில் உள்ள கறுப்பின மக்களால் முக்கியமாக வாசிக்கப்பட்டது. செய்தித்தாள்கள் மற்றும் இவரது பிற சிவில் உரிமைகள் ஆவணங்கள் தெற்கு மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில், ஹாட்டிஸ்பர்க்கில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளன. [1]
கோமிசார் 1970 முதல் 1971 வரை பெண்களுக்கான தேசிய அமைப்பின் தேசிய துணைத் தலைவராக இருந்தார், மேலும் அமெரிக்க அரசாங்கத்தின் மத்திய ஒப்பந்ததாரர் மற்றும் கேபிள் டிவி உறுதியான செயல் விதிகளை பெண்களுக்கு நீட்டிப்பதில், சட்டமன்ற உறுப்பினர் ஆன் லண்டன் ஸ்காட் உடன் வெற்றி பெற்றார். வரலாற்றாசிரியர் ராபர்ட் ஓ. செல்ஃப்பின் கருத்துப்படி, கோமிசார் 1970 இல் பெட்டி ஃப்ரீடனுடன் இணைந்து, லெஸ்பியன் பெண்ணியவாதிகள் பெண்களுக்கான தேசிய அமைப்பைக் குறிப்பாக நியூயார்க் நகரக் கிளையைக் கைப்பற்ற அச்சுறுத்துவதாகக் குற்றம் சாட்டினார். இந்தச் செயல், கிளை ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வழிவகுத்தது. இதன் விளைவாக டிசம்பர் 1970 இல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதர பெண்ணியவாதிகளும் லெஸ்பியன் பெண்ணியவாதிகளுக்கு தங்கள் ஆதரவை அறிவித்தனர். [2]
ஆகஸ்ட் 10, 1970 இல் நியூ யார்க் நகரத்தில் உள்ள ஆண்கள் மட்டுமே மதுவருந்தக்கூடிய மெக்சோர்லியின் மதுக்கடையில், தன்மீது பீர் குவளையைச் சிலர் வீசியதையும் பொருட்படுத்தாது துணிச்சலுடன் மது அருந்தினார். அவரது துணிச்சலான இச்செயலால் அவர், 1854 ஆம் ஆண்டு முதல் இல்லாத வழக்கமாக, அந்த மதுக்கடையில் துணையின்றி வந்து மது அருந்திய முதல் பெண்ணானார். [3]
இவரது 'பெண்களுக்கான தேசிய அமைப்பின்' ஆவணங்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஷெல்சிங்கர் காப்பகத்தில் உள்ளன. [4]
1977 ஆம் ஆண்டில், கோமிசார் பத்திரிகை சுதந்திரத்திற்கான மகளிர் நிறுவனத்தின் கூட்டாளியானார். [5] இது, ஒரு அமெரிக்க இலாப நோக்கமற்ற வெளியீட்டு நிறுவனமாகும். பெண்களுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்கவும், பெண்களை அடிப்படையாகக் கொண்ட ஊடக வடிவங்களுடன் பொதுமக்களை இணைக்கவும் இந்த அமைப்பு செயல்படுகிறது.
பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு உணவு வழங்கும் முக்கிய நிறுவனமான சோடெக்ஸோவின் நடைமுறையை கோமிசார் அம்பலப்படுத்தினார். அந்நிறுவனம் அதன் வழங்குநர்களிடம் இருந்து இலஞ்சம் கோருவது மற்றும் பெறுவது பற்றிய இவரின் கட்டுரை மார்ச் 2009 இல் இன் தீஸ் டைம்ஸ்" என்கிற பத்திரிகையில் வெளிவந்தது. [6]
2010 ஆம் ஆண்டில், கோமிசார் "ராஜ்யத்திற்கான சாவிகள்: மாநில கட்டுப்பாட்டாளர்கள் $7 பில்லியன் பொன்சி திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தினார்கள்" என்பதற்காக நடுத்தர மற்றும் சிறிய செய்தித்தாள்களுக்கான ஜெரால்ட் லோப் விருதைப் பெற்றார். [7]
மார்ச் 2023 இல், நவல்னி என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருதை வென்ற பிறகு, கோமிசார் திரைப்படத்தை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார். இது செயற்கை நுண்ணறிவு உதவியாளர் ரைட்சோனிக் மூலம் ஓரளவு எழுதப்பட்டதாகக் காட்டப்பட்டது. . கட்டுரையானது, ரஷ்ய அரசின் ஆதரவுடன் பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் தி கிரேசோன் என்ற விளிம்புச் செய்தி இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.[8] [9]