லூயிசு உர்ரி

லூயிசு பிரடெரிக் உர்ரி (Lewis Fredrick Urry) (29 சனவரி 1927 – 19 அக்டோபர் 2004) ஒரு கனடிய வேதிப் பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார் . எவரெடி மின்கல நிறுவனத்தில் பணிபுரியும் போது அல்கலைன் மின்கலம் மற்றும் லித்தியம் மின்கலன் இரண்டையும் கண்டுபிடித்தார்.

வாழ்க்கை

[தொகு]

உர்ரி 1927 ஆம் ஆண்டு சனவரி 29 ஆம் நாள் ஒன்டாரியோவின் போண்டிபூலில் பிறந்தார். இவர் 1950 ஆம் ஆண்டில் தொராண்டோ பல்கலைக்கழகத்தில் வேதிப்பொறியியலில் பட்டம் பெற்றார். முன்பு கனேடிய இராணுவத்தில் பணியாற்றினார். படித்து முடித்த சில மாதங்களில் எவரெடி மின்கல நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றார். இவர் பெவர்லி ஆன் என்பவரை மணந்தார் (இறப்பு 1993) இத்தம்பதியினருக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருந்தனர். இவர் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் நாள் இறந்தார். ஓஹியோவின் ஈடன் டவுன்ஷிப்பில் உள்ள பட்டர்நட் ரிட்ஜ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். [1]

தொழில்

[தொகு]

1955 ஆம் ஆண்டில் துத்தநாக-கரிம மின்கலம் ஒன்றின் ஆயுளை நீட்டிப்பதற்கான வழியைக் கண்டறியும் பொருட்டு, ஓகியோவில் உள்ள பார்மாவில் உள்ள நிறுவனத்தின் ஆய்வகத்திற்கு உர்ரி அனுப்பப்பட்டார். இந்த மின்கலங்களின் குறைந்த ஆயுட்காலம் விற்பனையை கடுமையாக சேதப்படுத்தியது. பழைய மின்கலத்தை உருவாக்குவதை விட புதிய மின்கலத்தை உருவாக்குவது செலவு குறைந்ததாக இருக்கும் என்பதை உர்ரி உணர்ந்தார்.

1950கள் முழுவதும் பல பொறியியலாளர்கள் அல்கலைன் மின்கலங்களை பரிசோதித்தனர். ஆனால், உற்பத்திச் செலவின் மதிப்பை விட நீண்ட நேரம் இயங்கும் மின்கலத்தை யாராலும் உருவாக்க முடியவில்லை. உர்ரி, பல பொருட்களைச் சோதித்த பிறகு, மாங்கனீசு டை ஆக்சைடு மற்றும் காரச்சூழலில் திட துத்தநாகம் நல்ல மின்பகுபொருளாக நன்றாக வேலை செய்வதைக் கண்டுபிடித்தார். அவரது முக்கிய பிரச்சனை என்னவாக இருந்ததென்றால், மின்கலத்தால் போதுமான சக்தியை வழங்க முடியாத நிலை இருந்தது. நன்கு தூளாக்கப்பட்ட துத்தநாகத்தைப் பயன்படுத்தி உர்ரி இந்தப் பிரச்சனையைச் சமாளித்தார்.

1957 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் நாள், லூயிஸ் உர்ரி, கார்ல் கோர்டெஷ் மற்றும் பிஏ மார்சல் இந்த புரட்சிகர அல்கலைன் உலர் மின்கலத்திற்கு அமெரிக்க காப்புரிமை கோரி (2,960,558) தூளாக்கப்பட்ட துத்தநாகக் கூழ்ம நேர்மின்வாயோடு தாக்கல் செய்தனர். 1960 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாளில் இதற்கான காப்புரிமம் யூனியன் கார்பைடு கழகத்திற்கு வழங்கப்பட்டது. [2]

இந்த யோசனையை தனது மேலாளர்களுக்கு விற்பதற்காக, உர்ரி ஒரு பொம்மை மோட்டார் மகிழுந்தில் தனது மின்கலத்தை வைத்து, பழைய மின்கலத்தைப் பயன்படுத்தும் மகிழுந்துகளுக்கு எதிராக உணவகத்தைச் சுற்றி ஓட்டிக்காட்டினார். இவருடைய புதிய கண்டுபிடிப்பு பழைய மின்கலங்களோடு ஒப்பிடும் போது பல மடங்கு ஆயுள் கொண்டதாக இருந்தது. எவரெடி நிறுவனம் 1959 ஆம் ஆண்டு உர்ரி வடிவமைப்பு செய்த மின்கலத்தின் உற்பத்தியைத் தொடங்கியது.[3]

1980 ஆம் ஆண்டில் இதன் வணிகப்பெயர் எனர்ஜைசர் என மறுபெயரிடப்பட்டது. நவீன அல்கலைன் மின்கலன்கள், தொழில்நுட்ப மேம்பாடுகள் காரணமாக, அசல் முன்மாதிரியை விட 40 மடங்கு அதிகமாக நீடிக்கும்.

1999 ஆம் ஆண்டில், உர்ரி தனது முதல் முன்மாதிரி மின்கலத்தையும், வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட முதல் உருளை மின்கலங்களையும் சிமித்சோனிய நிறுவனத்திற்கு வழங்கினார். இரண்டு கலங்களும் இப்போது எடிசனின் மின்விளக்கு இருக்கும் அதே அறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]

 

  1. Christopher Reed The Guardian, 6 Dec 2004, "Lewis Urry"
  2. US Patent 2960558 (in ஆங்கில மொழி)
  3. "History of the Energizer Battery Company". Archived from the original on 2010-10-08. பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.