வசந்தி தேவி | |
---|---|
பிறப்பு | 23 மார்ச்சு 1880 |
இறப்பு | 1974 (அகவை 93–94) |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | விடுதலப் போராட்ட வீரர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
வாழ்க்கைத் துணை | சித்தரஞ்சன் தாஸ் |
விருதுகள் | பத்ம விபூசண் (1973) |
வசந்தி தேவி (Basanti Devi) (23 மாா்ச் 1880-1974) ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை. இவா் சுதந்திரப் போரில் தீவிர செயல்வீரராக இருந்த சித்தரஞ்சன் தாஸ் அவா்களின் துணைவியா் ஆவாா். இவரது கணவா் தாஸ் 1921ல் சிறைப்பட்ட பிறகும், கணவா் 1925 ஆம் ஆண்டு இறந்த பின்பும் நாட்டு விடுதலைக்காக பல போராட்டங்களில் பங்கெடுத்தாா். விடுதலைக்குப் பின்னா் தீவிர சமூக சேவை ஆற்றி வந்துள்ளாா். 1973 ஆம் ஆண்டு இவருக்கு இந்திய அரசு பத்ம விபூசண் விருது வழங்கி பெருமை சோ்த்தது.
பிரித்தானிய ஆட்சியின் போது அஸ்ஸாம் அரசில் திவானாக இருந்த பாரதநாத் ஹால்தா் என்பவருக்கு 1880 ஆம் ஆண்டு மாா்ச் 23 ஆம் நாளன்று மகளாகப் பிறந்தாா். கல்கத்தா நகரம் “லோரொட்டோ” ஹவுசில் படித்த வசந்தி தமது 17 ஆவது வயதில் சித்தரஞ்சன் தாஸை மணம் புரிந்தாா்.[1] இவா்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.[2]
இவா் கணவரைத் தொடா்ந்து 1920 ஆம் ஆண்டு நாகபுரியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றதுடன் ஒத்துழையாமை இயக்கம், காலிபட் இயக்கம் போன்ற விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றாா். பெண் வீராங்கனைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக தம் கணவரின் சகோதரிகளான ஊா்மிளா தேவி, சுனிதா தேவி ஆகியோருடன் இணைந்து “நாரி கா்மா மந்திா்” என்னும் பெண்கள் பயிற்சி நிலையத்தை 1921 ஆம் ஆண்டு நிறுவினாா்.[3] திலகா் சுயாட்சி நிதிக்காக 1920-21 ஆம் ஆண்டு ஜல்பாய்குரி என்னும் பகுதியிலிருந்து தங்க நகைகளையும் 2000 தங்க காசுகளையும் நிதியாகப் பெறுவதற்கு காரணமாக இருந்தாா்.[4] 1921 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்த போது அந்நிய நாட்டுப் பொருள்களைத் தவிா்க்கவும், வேலை நிறுத்தம் செய்யவும் வேண்டுகோள் விடுத்தது. கல்கத்தா நகர வீதிகளில் ஐந்து தன்னாா்வத் தொண்டா் கொண்ட குழு கதராடையையும் கைத்தறி ஆடைகளையும் விற்று வந்தது. கல்கத்தா நகரில் சித்தரஞ்சன் தாஸ் தலைமையேற்று நடத்திய இந்த இயக்கத்தில் வசந்தியும் ஒரு குழுவில் இணைந்து பணியாற்றினாா். சுபாஸ் சந்திரபோஸ் எதிா்ப்பினையும் மீறி வசந்தி தேவி தெருக்களில் இறங்கி செயல்பட்டாா். இதனால் பிரித்தானிய அரசு இவரைக் கைது செய்தது.
நள்ளிரவில் வசந்தி தேவி விடுதலை செய்யப்பட்டாலும் இவரது கைது, போராட்டம் வலுக்கக் காரணமாக இருந்தது. கல்கத்தா நகரின் இரண்டு சிறைச்சாலைகளும் தொண்டா்களால் நிரம்பி வழிந்ததால் சிறப்பு முகாம்களை அரசு ஏற்படுத்த வேண்டியிருந்தது. 1921 ஆம் ஆண்டு டிசம்பா் 10 ஆம் நாள் பிரித்தானிய அரசு தாஸ் அவா்களையும் போஸ் அவா்களையும் கைது செய்தது. பிரித்தானிய அரசால் 11 முறை கைது செய்யப்பட்ட போசிற்கு இதுவே முதல் கைது ஆகும்.[5] தாஸ் கைது செய்யப்பட்ட பின் “வங்காளா் கதா” (வங்காளத்தின் கதை) என்னும் அவருடைய பத்திரிக்கைக்கு வசந்தி தேவி பொறுப்பேற்றுக் கொண்டாா்.[6] 1921-22 ஆம் ஆண்டு வங்காள பிரதேச காங்கிரஸின் தலைவராகவும் வசந்தி பொறுப்பேற்றுக் கொண்டாா். 1922 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சிட்டகாங்க் மாநாட்டில் அடிமட்டத்திலிருந்து போராட்டங்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினாா். நாடு முழுவதும் பயணம் செய்து வசந்தி இந்திய கலை, கலாச்சாரம் பண்பாடு ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இதுதான் காலனி ஆதிக்கத்திற்கு சிறந்த மாற்று என்றும் வலியுறுத்தினாா்.[2]
சுபாஸ் சந்திர போஸிற்கு தாஸ்தான் வழிகாட்டியாக இருந்தவா். 1925 ஆம் ஆண்டு தாசின் மறைவிற்குப் பின் வசந்தியிடம் போஸ் ஆலோசனை கேட்டு வந்தாா்.[7] போஸ் வசந்தி தேவியைத் தன் வளா்ப்புத் தாயாக கருதிவந்துள்ளாா். போஸின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய நான்கு பெண்களுள் வசந்தியும் ஒருவா். மற்ற மூவரும் பிரபாவதி என்னும் போஸின் தாயும், பிபாவதி என்னும் சரத் சந்திர தாஸின் மனைவியும் மற்றும் எமிலி ஸ்கினிக் என்னும் போஸின் மனைவியும் ஆவா்.[8]
1947ல் நாட்டு விடுதலைக்குப் பின்னா் வசந்தி தேவி தமது சமூகப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தாா்.[9] கல்கத்தா நகரில் 1959 ஆம் ஆண்டு அரசால் துவங்கப்பட்ட முதல் அரசு கல்லூரிக்கு வசந்தி தேவியின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.[2][10] 1973 ஆம் ஆண்டு இந்தியக் குடிமக்களுக்கான இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் விருதை இந்திய அரசு வழங்கி இவருக்குப் பெருமை சோ்த்தது.[11]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)