வத்சலா திருமலை (Vatsala Thirumalai) இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் உயிரியல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ஆராய்ச்சி மையமான பெங்களுர் தேசிய உயிரியல் அறிவியல் மையத்தின் நரம்பியல் சுற்றுகள் மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தில் ஓர் அறிவியலாளராக உள்ளார்.[1] சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பவியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார். அமெரிக்காவின் மாசசூசெட்சு மாநிலத்திலுள்ள வால்தம் நகரத்தின் மற்றும் பிராண்டீசு பல்கலைக்கழகத்தில் நரம்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நியூயார்க்கு நகரத்திலுள்ள கோல்டு இசுபிரிங்கு துறைமுக ஆய்வகத்திலும், மேரிலாந்தின் பெதசுத்தா நகரில் பட்டமேற்படிப்பு உறுப்பினராக இருந்தார். 1975 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2 ஆம் தேதியன்று வத்சலா பிறந்தார்.
தகவல்தொடர்பு மற்றும் நரம்பியல் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதில் செய்த பங்களிப்புகளுக்காக வத்சலா திருமலைக்கு 2020 ஆம் ஆண்டில் உயிரியல் அறிவியலுக்கான சாந்தி சுவரூப் பட்நாகர் விருது வழங்கப்பட்டது.[1]
விலங்குகளின் உடல் அசைவுகளை ஏற்படுத்தும் நரம்பியல் சுற்றுகளின் செயல்பாட்டைப் படிப்பதில் வத்சலா திருமலையின் நரம்பியல் சுற்றுகள் மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் கவனம் செலுத்துகிறது. கரு மற்றும் லார்வா நிலைகளின் போது கங்கைக்கு சொந்தமான வரிக்குதிரை மீனை தீவிர ஆய்வுக்காக இந்த ஆய்வகம் தேர்ந்தெடுத்துள்ளது. கரு மற்றும் லார்வா நிலைகளின் போது இம்மீனின் உட்புறங்களை நேரடியாகக் காண உதவுகிறது என்பதால் இம்மீனை ஆய்வகம் தேர்ந்தெடுத்தது.[2][3]