வயநாடு வனவுயிர் காப்பகம்
Wayanad Wildlife Sanctuary | |
---|---|
அமைவிடம் | வயநாடு, கேரளம், இந்தியா |
அருகாமை நகரம் | சுல்தான் பத்தேரி, மானந்தவாடி |
ஆள்கூறுகள் | 11°38′46″N 76°21′50″E / 11.646°N 76.364°E[1] |
பரப்பளவு | 344 km2 (133 sq mi) |
நிறுவப்பட்டது | 1973 |
வயநாடு வனவிலங்கு காப்பகம் (Wayanad Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள விலங்குகள் சரணாலயமாகும் [2]சுல்தான் பத்தேரி, முத்தாங்கா, குரைச்சாத்தி மற்றும் தோல்பெட்டி ஆகிய நான்கு பிரிவுகளுடன் 344.44 சதுர கி.மீ. பரப்பளவில் இச்சரணாலயம் அமைந்துள்ளது. இக்காப்பகத்தில் காட்டுப்பன்றி, யானை, மான் மற்றும் புலி போன்ற பெரிய காட்டு விலங்குகள் காணப்படுகின்றன. சரணாலயத்தில் அசாதாரண பறவைகள் சிலவும் உள்ளன. குறிப்பாக மயில்கள் இங்கு மிகப்பொதுவாகக் காணப்படுகின்றன. வயநாடு வனவிலங்கு சரணாலயம் பசுமையான காடுகளையும், வன உயிரினங்களையும் கொண்டுள்ள கேரளாவின் இரண்டாவது மிகப் பெரிய வனவிலங்கு சரணாலயமாகும். தாவர மற்றும் விலங்கினங்களின் அரிதான மற்றும் ஆபத்துநிலையிலுள்ள இனங்கள் இங்குள்ளன. 1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தச் சரணாலயம் இப்போது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் ஓர் உட்பகுதியாகும். வடகிழக்கில் கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்கா மற்றும் நாகர்ஹோளே தேசியப் பூங்கா|நாகர்கோளே தேசியப் பூங்காக்களாலும்]], தென்கிழக்கில் தமிழ்நாட்டின் முதுமலை தேசியப் பூங்காவாலும் சூழப்பட்டுள்ளது.
தக்காண பீடபூமியின் ஒரு பகுதியே வயநாடு வனவிலங்கு சரணாலயமாகும். இப்பகுதியில் தென்னிந்திய மரமான ஈர இலையுதிர் தேக்கு மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் மேற்குக்- கடற்கரையின் அரைப்-பசுமைமாறா மரங்களடர்ந்த மேய்ச்சல்வெளியைக் கொண்டுள்ளது. யானைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இச்சரணாலயம் பாதுகாக்கப்படுகிறது. இப்பகுதியில் கூட்டம் கூட்டமாக யானைகளைக் காண முடியும். கேரள வனத்துறையால் யானைச் சவாரிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
கேரள ஆதிவாசி மக்கட்தொகையின் பெரும்பகுதி வயநாடு மாவட்டத்தில் உள்ளது. பணியர், குரும்பர், ஆடியர், குறிச்சியர், ஊராளியர், காட்டுநாய்க்கர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் இங்கு வாழ்கின்றனர்.
2126 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட வயநாட்டுக்குச் சக்திவாய்ந்த வரலாறு உள்ளது. வயனாட்டில் பல்வேறு பகுதிகளில் காணப்படும் எச்சங்கள் மற்றும் சாசனங்கள் வயநாட்டின் முக்கியமான வரலாற்றுக்கு முந்தைய காலத்தை பற்றிப் பேசுகின்றன. கிறித்துவிற்கு முன்பு குறைந்தபட்சம் 10 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்திருக்க வேண்டுமென வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்த சரணாலயம் நீலகிரி உயிர்க் கோளகத்தின் ஒரு பகுதியாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகளில், நீலகிரி உப-தொகுதி (6,000+ சதுர கிலோமீட்டர்) உட்பட சரணாலயத்தின் அனைத்து பகுதிகளும் ஓர் உலக பாரம்பரியக் களமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உலக பாரம்பரியக் குழுவால் பரிசீலிக்கப்படுகிறது.[3]
வயநாடு வனவிலங்கு சரணாலயம் 1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1991-92 ஆம் ஆண்டுகளில் யானைகள் பாதுகாப்பு திட்ட்த்தின் கீழ் இப்பகுதி கொண்டுவரப்பட்டது. இந்த சரணாலயம் 345 சதுரகிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிந்துள்ளது. இது கேரளாவின் இரண்டாவது மிகப்பெரிய சரணாலயமாகும். மேலும், இச்சரணாலயம் வடக்கு வயநாடு வனவிலங்கு சரணாலயம் மற்றும் தெற்கு வயநாடு வனவிலங்கு சரணாலயம் என இரண்டு துண்டிக்கப்பட்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்விரு பகுதிகளுக்கும் இடையில் உள்ள பகுதி உண்மையில் ஒரு வனப்பகுதியாகும். இருப்பினும் இப்போது அது பெருந்தோட்டங்கள் ஆக்கிரமித்துள்ள ஒரு பகுதியாக மாறிப்போனது.
2012 ஆம் ஆண்டு கேரள வனத் துறையினரால் வயநாடு வனவிலங்கு சரணாலய காப்பித் தோட்டத்தில் ஒரு புலி சுட்டுக் கொல்லப்பட்டது. பல உள்ளூர் அரசியல் தலைவர்கள் புலியை வேட்டையாடியதைப் பாராட்டினர். வீட்டு விலங்குகளை கொன்று உண்டு வந்த புலியை விரட்டச் சொல்லி எழுந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து புலியைச் சுடுவதற்கான ஆணையைப் இவர் பிறப்பித்தார்.
இலையுதிர் காடுகளில் மாருதி, கரிமாருதி, கருங்காலி, தேக்கு மரம். வெங்கல், சடாச்சி, மாழங்குஞ்சிரம், மூங்கில் உள்ளிட்ட பல மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
யானைகள், புலிகள், சிறுத்தைகள், காடுப்பூனைகள், காட்டு நாய்கள், புணுகுப் பூனைகள், குரங்குகள், மான்கள், கரடிகள், காட்டெருமைகள், ஓநாய்கள் பாம்புகள் என பல்வகையான விலங்குகள் இங்கு வாழ்கின்றன.
மயில்கள், குயில்கள், ஆந்தைகள், மரங்கொத்திகள், காட்டு மயில்கள் போன்றவை இங்கு காணப்படும் சில பறவையினங்களாகும்.
வயநாட்டின் காலநிலை உற்சாகமளிக்கக் கூடியது. மாவட்டத்தின் சராசரி மழைப்பொழிவு 2322 மில்லி மீட்டர்களாகும். உயர் மழையளவைப் பெறும் சில பகுதிகளில் ஆண்டு மழை அளவு 3,000 முதல் 4,000 மிமீ வரைகூட இருக்கும். தென்மேற்கு பருவக்காற்று பருவகாலத்தில் அதி வேக காற்று வீசுதல் என்பது இங்கு மிகப்பொதுவானது. மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் உலர் காற்று வீசும். அதிக உயர் அழுத்தப் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவும். தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் இக்குளிர்ச்சி 95% வரை உயர்ந்து அதிக ஈரப்பதத்தை அனுபவிக்கிறது. பொதுவாக வயநாட்டின் ஆண்டு குளிர் காலம், கோடைகாலம், தென்மேற்கு பருவமழை காலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காலம் என்ற நான்கு பருவங்களாக வகைப்படுத்தப்படுகிறது. வைத்திரி தாலுக்காவில் உள்ள மலையடிவாரத்தில் அமைந்துள்ள 'லக்கிடி பள்ளத்தாக்கு கேரளாவின் உயர் சராசரி மழைப்பொழிவைக் கொண்டுள்ளது.
தெற்கு வயநாடு பிரிவு சுல்தான் பாத்தெரியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் வடக்கு வயநாடு பிரிவு கேரளாவின் மனந்தவாடியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
வெண்முதுகுக் கழுகு, செந்தலைக்கழுகு போன்ற பறவையினங்களுக்கு வயநாடு வனவிலங்கு சரணாலயம் பாதுகாப்பான புகலிடங்களில் ஒன்றாகும். 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடுத்த கணக்கெடுப்பில் ஒட்டுமொத்தமாக இங்கு கிட்டத்தட்ட 150 கழுகுகள் இருந்ததாகக் கூறப்பட்டது. இதே ஆண்டு மார்ச்சு மாதத்தில் இந்த எண்ணிக்கை 70 ஆகக் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. முதலில் 17 கூடுகளாக இருந்த எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 16 என்ற எண்ணிக்கைக்கு குறைந்தது. டைக்ளோஃபினாக் என்ற மருந்து ஏற்படுத்திய சிறுநீரகச் செயலிழப்பே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது [4].
Reference Link : https://www.gotirupati.com/wayanad-wildlife-sanctuary