![]() பதகில்லா சதுக்கத்திலிருந்து வயாங் அருங்காட்சியகத்தின் முகப்புத்தோற்றம்(Indonesian: Taman Fatahillah) | |
![]() | |
நிறுவப்பட்டது | 1975 |
---|---|
அமைவிடம் | பிண்டு பேசர் உதாரா தெரு 27, ஜகார்த்தா பரத், ஜகார்த்தா, இந்தோனேசியா |
வகை | பொம்மலாட்ட அருங்காட்சியகம் |
பொது போக்குவரத்து அணுகல் |
|
வயாங் அருங்காட்சியகம் (Wayang Museum) (Indonesian: Museum Wayang) என்பது இந்தோனேசியாவின் ஜகார்த்தாவின் கோட்டா துவாவில் அமைந்துள்ள, ஜவான் வயாங் எனப்படுகின்ற பொம்மலாட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அருங்காட்சியகம் ஆகும். இந்தோனேசியாவில் ஃபதஹில்லா சதுக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் அமைந்துள்ள பல அருங்காட்சியகங்களில் இந்த அருங்காட்சியகமும் ஒன்றாகும். இங்குள்ள பிற அருங்காட்சியகங்கள் ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம், நுண்கலை மற்றும் பீங்கான் அருங்காட்சியகம் மற்றும் கோட்டா தபால் அலுவலக கலைக்கூடம் ஆகியவை ஆகும்.[1]
பழைய டச்சு தேவாலயம் என்ற பெயரில் 1640 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு தேவாலயத்தின் இடத்தில் இந்த அருங்காட்சியகக் கட்டிடம் அமைந்துள்ளது. (டச்சு: De Oude Hollandsche Kerk).[2] 1732 ஆம் ஆண்டில், தேவாலயம் புதுப்பிக்கப்பட்டு, புதிய டச்சு தேவாலயம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.(டச்சு: De Nieuwe Hollandsche Kerk). 1808 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பூகம்பத்தின்போது அங்கிருந்த தேவாலயம் அழிந்து போனது.[3] பின்னர் 1912 ஆம் ஆண்டில், புதிய மறுமலர்ச்சி பாணியில் ஒரு கட்டிடம் அந்த இடத்தில் கட்டப்பட்டது; இது ஆரம்பத்தில் ஜியோ வெஹ்ரி & கோ நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு கிடங்காக செயல்பட்டு வந்தது. 1938 ஆம் ஆண்டில், டச்சு காலனித்துவ கட்டிடக்கலைப் பாணியைப் பின்பற்றி, கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. வயாங் அருங்காட்சியகத்தின் தோட்டம் முந்தைய டச்சு தேவாலயத்தின் முற்றத்தில் அமைந்துள்ளது. அந்த இடத்தில்தான் பொது ஆளுநர் ஜான் பீட்டர்ஸூன் கோயனின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
பின்னர், இந்தக் கட்டிடத்தை படேவியா கலை மற்றும் அறிவியல் சங்கம் வாங்கியது (டச்சு: Bataviasche Genootschap van Kunsten en Wetenschappen). அந்தச் சங்கமானது இந்தோனேசியப் பண்பாடு மற்றும் அறிவியலோடு தொடர்புடைய ஓர் அமைப்பாக செயல்பட்டு வந்தது. பின்னர் அந்த நிறுவனம் இந்தக் கட்டிடத்தை பழைய படேவியா அறக்கட்டளைக்கு மாற்றியது (டச்சு: Stichting Oud Batavia). டிசம்பர் 22, 1939 ஆம் நாளன்று இது பழைய படேவியா அருங்காட்சியம் என்ற பெயரில் ஓர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது (டச்சு: Oude Bataviasche Museum). 1957 ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் சுதந்திரத்திற்குப் பின்பு, இந்தக் கட்டிடம் இந்தோனேசிய பண்பாட்டு நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது (Indonesian: Lembaga Kebudayaan Indonesia) மற்றும் செப்டம்பர் 17, 1962 ஆம் நாளன்று கல்வி மற்றும் பண்பாட்டு அமைச்சகத்திற்கு மாற்றம் செய்தது. ஜூன் 23, 1968 ஆம் நாளன்று, டி.கே.ஐ ஜகார்த்தா நிர்வாகம் இந்தக் கட்டிடத்தை வயாங் அருங்காட்சியகமாக மாற்றியது; அந்த அருங்காட்சியகம் ஆகஸ்ட் 13, 1975 ஆம் நாளன்று துவக்கம் செய்யப்பட்டது.
அருங்காட்சியகத்தில் பல்வேறு வகையான வயாங் பொம்மலாட்ட காட்சிப்பொருள்கள் தொகுப்பில் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றுள் ஜாவானிய வயாங் குலிட் மற்றும் சுடானிய வயாங் கோலெக் போன்றவையும் அடங்கும். அருங்காட்சியகத்தின் உள்ளே ஜான் பீட்டர்ஸூன் கோயனின் கல்லறையைக் குறிக்கும் ஒரு தட்டும் உள்ளது.[3][4] ஒரு வயாங் தியேட்டர் இவ்வருங்காட்சியகத்தில் செயல்பட்டு வருகிறது. வயாங் தயாரித்தல் தொடர்பாக பட்டறைகள் அவ்வப்போது அருங்காட்சியகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.