வயிற்றறை உட்காண் அறுவை சிகிச்சை | |
---|---|
வயிற்றரை உட்காட்டியில் கண்டவாறு நிகழும் பித்தப்பை நீக்கும் அறுவை |
வயிற்றறை உட்காண் அறுவைச் சிகிச்சை (laparoscopic surgery) அல்லது உதரத்துட்காண் அறுவைச் சிகிச்சை அல்லது குறைந்தளவு உட்புகும் அறுவைச் சிகிச்சை (MIS) அல்லது சாவித்துளை அறுவைச் சிகிச்சை (keyhole surgery), ஓர் தற்கால அறுவை மருத்துவமாகும். இச்செய்முறையில் உடலின் எங்கோவுள்ள சிறு வெட்டு (பொதுவாக 0.5–1.5 செமீ) வழியாக தொலைவிலுள்ள இடத்தில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது.
பழைய, வழமையான திறந்தநிலை அறுவைச் சிகிச்சையை விட நோயாளிக்கு இதில் பல நன்மைகள் உள்ளன. சிறிய வெட்டு ஏற்படுத்துவதால் குருதிப்போக்கும் வலியும் வெகுவாக குறைந்துள்ளது; குணமாகும் நேரமும் குறைகின்றது. மருத்துவமனையில் தங்கியுள்ள காலமும் அதற்கேற்ப மருத்துவச் செலவும் குறைகின்றது. வயிற்றறை உட்காண் அறுவைச் சிகிச்சையின் முக்கிய கூறுகளாக வயிற்றறை உட்காட்டியும் உட்செலுத்த வசதியான இடத்திலிருந்து தொலைவிலுள்ள பாதிக்கப்பட்ட பகுதி வரை புகுத்தி பாதிப்பையும் அறுவை நிலையையும் காட்டக்கூடிய நீண்ட இழை ஒளியிய வடமும் உள்ளன.
வயிற்றறை உட்காட்டி இருவகைப்படும்: (1) ஒளித படப்பிடிப்புக் கருவியுடன் இணைக்கப்பட்ட தொலைநோக்கி கம்பி வில்லை அமைப்பு அல்லது (2) உட்காட்டியின் முனையிலேயே அமைக்கப்பட்டுள்ள மின்னூட்ட இணைப்புக் கருவித்திரையுடனான எண்ணிம வயிற்றறை உட்காட்டி.[1]