வலையப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம் | |
---|---|
பிறப்பு | Valayapatti |
பணி | Percussionist |
வலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார்.[1]
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வலயப்பட்டி எனும் ஊரில் பிறந்த சுப்பிரமணியம், ஆரம்பத்தில் தனது தந்தை ஆறுமுகத்திடம் நாதசுவர இசையினைக் கற்றார். பின்னர் தவில் வாசிக்கும் கலையினை மன்னார்குடி ராஜகோபால பிள்ளையிடம் கற்றார். அக்காலகட்டத்தில் சிறந்து விளங்கிய நாச்சியார்கோயில் ராகவ பிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை ஆகியோரின் தவில் இசையினை கேட்டுக் கேட்டு தனக்குரிய ஒரு பாணியினை தான் உருவாக்கிக் கொண்டதாக செவ்வியொன்றில் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.[2]
பிரபல நாதசுவரக் கலைஞர்கள் திருவீழிமிழலை சகோதரர்கள், செம்பனார்கோயில் சகோதரர்கள், காருக்குறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் இவர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். கிளாரினெட் கலைஞர் ஏ. கே. சி. நடராஜனுடன் இணைந்து செய்த இசை நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. நாதசுவரக் கலைஞர் திருவிழா ஜெயசங்கருடன் இணைந்து பெரும் எண்ணிகையில் இசை நிகழ்ச்சிகளைச் செய்துள்ளார்.[2]
இலய நுணுக்கத்தில் வல்லவரான தவில் இசைக் கலைஞர் திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளைக்கு இணைத் தவில் வாசித்துள்ளார். இசையுலகில் பெரிதும் பேசப்பட்ட இணைகளில் ஒன்று, குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் – வலயப்பட்டி தவில் இசையாகும். இவர்களின் இணைந்த இசை நடைபெறாத தமிழக ஊரே இல்லை என சொல்லத்தக்கவகையில் ஏறத்தாழ 3000 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.[2]