வளரி | |
---|---|
வகை | எறியும் தடி |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியா |
வளரி (Valari) என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கும், கால்நடைகளை திருடிச்செல்லும் திருடர்களைப் பிடிக்கவும் பண்டைய தமிழரால்[சான்று தேவை] பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். வளரித்தடி என்னும் வளரி பழங்கால ஆயுதங்களில் ஒன்றாகும். இவ்வாயுதம் தாங்கிய படை எரிபடை என சோழர் காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.[1] இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி,[2] திகிரி,[2] பாறாவளை,[3] சுழல்படை,[4] கள்ளர்தடி,[5] படைவட்டம்[சான்று தேவை] என்றும் அழைத்தனர்.
இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது.[6] பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.[6]
ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.[6]
வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.[6]
வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமான இது பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.[6] தமிழ்நாட்டில் சிவகங்கை, தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன.[6] சிவகங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், அவர்களது படைத்தளபதி வைத்திலிங்க தொண்டைமான் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.[6]
கள்ளர்கள், மறவர்கள் மற்றும் வலையர்கள் வேட்டையின் போது வளரியை பயன்படுத்தினார்கள். நாட்டார் கள்ளர்கள் திருமண சடங்கின் போது இருவீட்டார்களும், அவர்களின் பண்பாட்டின் அடையாளமாக வளரியை மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். வளரியை அனுப்பி மணமகளை அழைத்து வாருங்கள் “send the valari and bring the bride” என்று கூறியுள்ளார்கள்.[7] புதுக்கோட்டை மன்னர்கள் எப்போதும் தங்கள் ஆயுதக்கிடங்கில் வளரி ஆயுதங்களை இருப்பு வைத்திருந்தனர். [8]
1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் வளரி ஆயுதத்தை வைத்திருப்பதற்கும் மற்றும் பயன்படுத்தவும் தடை விதித்தார்கள். இதனால் வளரியின் பயன்பாடு மறைந்து போனது. நடுகற்களிலும் மற்றும் சாமி காணிக்கையாகவும் வழங்கிய வளரி ஆயுதம் மட்டுமே இன்று காணப்படுகின்றது.[9][10]
கள்ளழகர் கோயிலில் இருந்து மதுரை நோக்கி கிளம்பும் பெருமாள், ஒரு கையில் வளரித்தடி என்ற ஆயுதத்தை வைத்துள்ளார், இதையே கள்ளர் திருக்கோலத் தோற்றம் என்கிறார்கள்.[11]
சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல் என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது."[2]
பெரிய மருது ஓடுகின்ற முயலை கூட வளரி கம்பால் அடித்து விடுவார் என்று மேஜர் ஜேம்ஸ் வெல்ஷ் மருதுவின் வளரி வீசும் திறமையைப் பாராட்டி வியந்து கூறியுள்ளார். அதே போல ஜேம்ஸ் வெல்ஷ் சின்ன மருது , தனக்கு வளரி எறிவதைக் கற்றுக்கொடுத்ததாக ராணுவ நினைவுகள் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.[12]
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)