இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வள்ளலார் நகர் அல்லது தங்கசாலை (Mint) இந்திய மாநகரம் சென்னையின் வட பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுப் பகுதியாகும். சென்னை தொடருந்து நிலையத்தின் சரக்குப் பிரிவு இங்கிருப்பதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையாகும். மேலும் சென்னையின் தொன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான அரசு இசுடான்லி பொது மருத்துவமனை இங்கு அமைந்துள்ளது.
இப்பகுதிக்கு வள்ளலார் நகர் எனப்பெயர் வரக்காரணம், வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகள் சிறு பிள்ளையாயிருக்கும் பொழுது, தனது அண்ணனுடன் அப்பகுதியிலொன்றான ஏழுகிணறு என்னுமிடத்திலுள்ள, வீராசாமிப் பிள்ளைத் தெருவில் வசித்து வந்தார். தனது ஒன்பதாவது வயதிலேயே அருகிலுள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் துலுக்காணத்து ரேணுகை அம்மனுக்கு பாமாலைகள் சூட்ட ஆரம்பித்து விட்டார். மேலும் பாரிமுனையிலுள்ள புகழ்பெற்ற கந்த கோட்டத்திலும் பல பாடல்கள் புனைந்துள்ளார். இவ்வாறு தமிழ்நாட்டின் புகழ் பெற்ற துறவிகளில் ஒருவரான வள்ளலாரின் பிள்ளைப் பிராயம் இங்கிருந்தே துவங்கியதால் இப்பகுதிக்கு வள்ளலார் நகர் என்னும் பெயர் வந்தது.
வெள்ளையர் ஆட்சியின் போது, தங்கக்காசுகள் (Mint) இங்கே உருவாக்கப்பட்டிருந்ததனால் தங்கசாலை என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. 1980களில் வள்ளலார் நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்பகுதியில் தமிழக பொதுப்பணித்துறைத் தலைமையகமும் அரசாங்க அச்சகமும் இயங்கி வருகின்றன.