வாஜுபாய் ருதாபாய் வாலா | |
---|---|
18வது கருநாடக ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 1 செப்டம்பர் 2014 – 10 ஜூலை 2021 | |
முன்னையவர் | கொனியேட்டி ரோசையா |
பின்னவர் | தவார் சந்த் கெலாட் |
குசராத்து சட்டமன்ற சபாநாயகர் | |
பதவியில் 23 ஜனவரி 2012 – 31 ஆகஸ்ட் 2014 | |
முன்னையவர் | கணபத் வாசவா |
பின்னவர் | மங்குபாய் சா. பட்டேல் (பொறுப்பு) |
குசராத்து சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் ஜூலை 1985 – பிப்ரவரி 2002 | |
முன்னையவர் | மணிபாய் ரான்பரா |
பின்னவர் | நரேந்திர மோதி |
பதவியில் திசம்பர் 2007 – 31 ஆகஸ்ட் 2014 | |
முன்னையவர் | நரேந்திர மோதி |
பின்னவர் | விஜய் ருபானி |
தொகுதி | ராஜ்கோட் மேற்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 சனவரி 1937[1] ராஜ்கோட், ராஜ்கோட் மாநிலம், பிரித்தானியாவின் இந்தியா (தற்போது குசராத்து, இந்தியா) |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மனோரமாபஹன் |
பிள்ளைகள் | 2 மகள்கள், 2 மகன்கள் |
கல்வி | இளம் அறிவியல், இளங்கலைச் சட்டம் |
கையெழுத்து | |
As of 31 ஆகஸ்ட், 2014 மூலம்: [1] |
வாஜுபாய் ருதாபாய் வாலா (Vajubhai Rudabhai Vala) (பிறப்பு 23 ஜனவரி 1937) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1 செப்டம்பர் 2014 முதல் 6 ஜூலை 2021 வரை கர்நாடகாவின் 18வது ஆளுநராக இருந்தார்.[2] குர்சித் ஆலம் கானுக்குப் பிறகு கர்நாடகாவில் மிக நீண்ட காலம் ஆளுநராக இருந்தார்.[3]
2012 முதல் 2014 வரை குசராத்து சட்டமன்றத்தின் சபாநாயகராக வாஜுபாய் பணியாற்றினார். இவர் இன்னும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். இவர் குசதாத்து அரசாங்கத்தில் 1997 முதல் 2012 வரை நிதி, தொழிலாளர், வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் ராஜ்கோட் தொகுதியிலிருந்து குசராத்து சட்டமன்றத்துக்கு பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர், தனது அரசியல் வாழ்க்கையை ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் தொடங்கினார். பின்னர் 1971இல் பாரதீய ஜன சங்கத்தில் சேர்ந்தார். 1975இல் நெருக்கடி நிலையின் போது பதினோரு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.[4] 1980களில் ராஜ்கோட் நகரத் தந்தையாக இருந்தார். பின்னர் ராஜ்கோட்டிலிருந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 1998 முதல் 2012 வரை நிதி, வருவாய் ஆகிய துறைகளின் அமைச்சராக பணியாற்றினார். இவர் இரண்டு முறை நிதி அமைச்சராக இருந்தார். நிதியமைச்சராக குசராத்து சட்டமன்றத்தில் வரவு செலவு அறிக்கையை 18 முறை தாக்கல் செய்த சாதனையை இவர் கொண்டுள்ளார். திசம்பர் 2012இல் சட்டமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆகஸ்ட் 2014 வரை பணியாற்றினார். செப்டம்பர் 2014இல் கர்நாடக ஆளுநராக[5] [6] [7] [8] [9] [10] [11] நியமிக்கப்பட்டார்.
இவர், ராஜ்கோட் நாகரிக் சககாரி வங்கியுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். அங்கு இவர் வங்கி சேவையை திட்டமிட்டு, ஒழுங்கமைத்து, மேம்படுத்தினார். 1975-90 காலகட்டத்தில் ஐந்து வருடங்கள் வங்கியின் தலைவராகவும் இருந்தார்.[12]
2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது இவர் ஒரு சர்ச்சையில் சிக்கினார். இந்திய தேசிய காங்கிரசும், ஜனதா தளமும் (மதச்சார்பற்ற) தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்துக் கொண்டது. ஆனால், அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார். தனது பெரும்பான்மையை நிரூபிக்க புதிய முதல்வர் பி. எஸ். எடியூரப்பாவுக்கு 18 நாட்கள் அவகாசமும் அளித்தார். இவரது முடிவை நாட்டிலுள்ள அனைத்து பாஜக அல்லாத கூட்டணிக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. மேலும் இந்த விவகாரத்தில் காங்கிரசு கட்சி உச்சநீதிமன்றத்தை அணுகியது. எந்தவொரு கூட்டணிக்கும்/கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாத நிலையில், அந்த மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதே நீதிமன்றம் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு இவர் வழங்கிய 18 நாள் நேர வரம்பை வெறும் 3 நாட்களாகக் குறைத்தது. மேலும் வாக்களிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது. எடியூரப்பா தன்னால் பெரும்பான்மையை திரட்ட முடியாது என்று கூறி, சபை கூடிய பிறகு பதவி விலகினார். ஜனதா தளத்தின் எச். டி. குமாரசாமி புதிய முதல்வராக பதவியேற்க அழைக்கப்பட்டார். எனினும், 14 மாதங்களுக்குப் பிறகு, குமாரசாமியின் அரசும் கவிழ்ந்தது. பின்னர் 106 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுடன் எடியூரப்பா எளிதாக மீண்டும் ஆட்சியமைத்தார்.[13] [14] [15]