வானவில் கிராமம் ( Rainbow Village (Chinese: 彩虹眷村; pinyin: Cǎihóng Juàncūn) என்பது தைவானின் நன்துன் மாவட்டத்தில் உள்ள, தைசுங் நகரத்தின் அருகே அமைந்திருக்கும் ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமத்தை புகழ்வாய்ந்த இடமாக மாற்றியவர், 1924 இல் குவாங்டாங் மாகாணத்தில் பிறந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஹுவாங் யுங்-ஃபு என்பவராவார். இவருடன் பிறந்த நான்கு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகளில் இவர் மூத்தவரான இவரின் கலைத்திறமையானது இளமையிலேயே வெளிவந்தது.[1] தற்போது வானவில் கிராமம் என அழைக்கப்படும் இந்த கிராமத்தில் இவர் முதலில் தன் வீட்டின் சுவர்களில் ஓவியங்களை வரையத் துவங்கினார். பின்னர் கிராமத்தில் உள்ள பிற வீடுகளின் சுவர்களிலும் ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். அந்த வீட்டுச் சுவர்களில் வெவ்வேறு உருவங்களையும் விலங்குகளையும் ஓவியங்களாக வரைந்தார். இவ்வாறு அந்த ஊரில் இருந்த 1,200 வீட்டுச் சுவர்களிலும் ஓவியங்களால் நிரப்பினார்.
ஹுவாங், ஹாங்காங்கைச் சேர்ந்தவர். சீனாவில் நடந்த உள்நாட்டுப் போரின்போது கம்யூனிச படைகளை எதிர்த்து போரிடும் நோக்கத்துடன் இவர் 1946 இல் தேசியவாதிகளான குவோமிண்டாங் இராணுவத்தில் சேர்ந்தார். 1949 இல் தோற்கடிக்கப்பட்ட குவோமின்டாங் படைகளானது, அவர்களின் தலைவரான, சங் கை செக்க்கைப் பின்தொடர்ந்து, தைவான் பகுதிக்கு தப்பிச் சென்றது. இவ்வாறு சீனாவிலிருந்து திரும்பிய முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருப்பதற்காக தைவான் அரசால் தைவான் தீவு முழுவதும் பல குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன.[2] இவற்றில் இந்த குடியிருப்பானது நிரந்தர கிராமமாக ஆனது. அந்த இராணுவ வீரர்களும் இங்கேயே நிரந்தரமாக வாழத்துவங்கினர்.
ஆனால், காலப்போக்கில் இந்தக் கிராமத்தில் வசித்தவர்கள் பலரும் கிராமத்தை காலிசெய்து சென்றுவிட்டனர். கட்டுநர்கள் பலரும் அந்தக் கிராமத்தின் இடங்களை வாங்கினர். 1200 வீடுகள் அமைந்திருந்த அந்தக் கிராமம், ஒரு கட்டத்தில் 11 வீடுகளாகச் சுருங்கியது. அதனால் தைவான் அரசு அந்த கிராமத்தில் அமைத்திருந்த வீடுகளை இடிக்க முடிவுசெய்தது. வீட்டில் தனியாக இருந்த ஹுவாங், பொழுதுபோகாமல் தன் வீட்டில் ஒரு பறவையை வரைந்தார். அதன்பிறகு அவரது ஓவியப் பணி வளர்ந்தது.
கிராமத்தில் ஹுவாங் செய்த இந்த ஓவியப் பணிகளைப் பார்த்த உள்ளூர் பல்கலைக் கழக மாணவர்கள் இந்த கிராமத்தை காப்பாற்ற பரப்புரை செய்தனர். இதையடுத்து இந்த கிராமத்து வீடுகளில் ஹுவான் வரைந்திருந்த ஓவியங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி, இக்கிராமத்தை ஒரு கலாச்சார பகுதியாக்கி பாதுகாக்க வேண்டி வலியுறுத்தினர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் பலரும் அந்தக் கிராமத்துக்கு வரத்தொடங்கினர். இதையடுத்து தைவான் அரசு, வானவில் கிராமத்தை இடிக்கும் முடிவைக் கைவிடுவதாக அறிவித்தது. இங்குள்ள ஓவியத் தொருவானது இந்த ஊருக்கு ஆசியாவில் இருந்து ஆண்டுக்கு ஒரு மில்லியன் சுற்றுலா சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக மாற்றியுள்ளது.
இந்தக் கிராமமானது தைவான் இருப்புப்பாதை நிர்வாகத்துக்கு உட்பட்ட ஸினுவூரி தொடர்வண்டி நிலையத்துக்கு வடக்கே உள்ளது.