விச்சயநந்தி (Vijayanandi) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார். விச்சயானந்தா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். கணிதவியலாளராக இவர் முக்கோணவியலில் பங்களிப்பு செய்தார். காசி என்றும் பெனாரசு என்றும் அழைக்கப்படும் வாரணாசி நகரத்தில் சுமார் 940 மற்றும் 1010 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இவர் வாழ்ந்தார்.
செயானந்தா என்பவரின் மகனாக அறியப்படும் இவர், அல்-பிருனியின் குர்ரத் அல்-சிச்சாத்து என்ற அரபு மொழிபெயர்ப்பிலிருந்து கரணாதிலகா என்ற ஒரு படைப்பை எழுதியுள்ளார் என்பது மட்டுமே அறியப்பட்ட ஒரே தகவல் ஆகும்.[1] வியாழன் மற்றும் சனியின் தீர்க்கரேகைகளைக் கணக்கிடுவதற்கான முறைகளுக்கு விச்சயநந்தி என்ற மற்றொரு வானியலாளர் இருந்தார் என்று வராகமிகிரர் அவரது பஞ்சசித்தாந்திகாவில் குறிப்பிட்டுள்ளார்.[2]
காலத்தின் அலகுகள், சூரியன் மற்றும் சந்திரனின் தீர்க்கரேகைகள், பகல் நீளத்தின் கணக்கீடு, கிரகணம் மற்றும் பிற தலைப்புகள் பற்றிய குறிப்புகளை கரணதிலகம் நூல் உள்ளடக்கியுள்ளது.[3]