விட்ணு சிறிதர் வாகங்கர் | |
---|---|
பிறப்பு | நீமுச், மத்திய பிரதேசம் | 4 மே 1919
இறப்பு | 3 ஏப்ரல் 1988 சிங்கப்பூர் | (அகவை 68)
கல்வி | G. D. (Art), M. A. மற்றும் Ph.D. |
அறியப்படுவது | பிம்பெட்கா குகையை கண்டறிந்தார். |
விருதுகள் | 1975 ஆம் ஆண்டில் பத்மசிறீ |
விட்ணு சிறிதர் வாகங்கர் (ஆங்கிலம்: Vishnu Shridhar Wakankar) (4 மே 1919 - 3 ஏப்ரல் 1988) ஒரு இந்திய தொல்லியல் ஆய்வாளர் ஆவார். [1] 1957 ஆம் ஆண்டில் பிம்பேட்கா குகைகள் மற்றும் 1964 ஆம் ஆண்டில் கயாத்தா கலாச்சாரம் போன்றவற்றைக் கண்டறிந்த பெருமை வாகங்கருக்கு உண்டு. [2] 2003 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ பிம்பேட்கா பாறை குகைகளை உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது. பிம்பேட்கா குகைகள் இந்தியாவில் மனித வாழ்வின் ஆரம்ப தடயங்களில் ஒன்றாகும்.
இந்தியாவில் பாறை ஓவியங்களின் "பிதாமகன்" என்று அறியப்படும் வாகங்கர் 1954 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பாறை ஓவியம் குறித்த விரிவான பணிகளை மேற்கொண்டார். இது தொடர்பாக, அவர் இங்கிலாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், கிரீஸ், மெக்சிகோ, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று பாறை ஓவியக் கலைகளைப் பயின்றார்.
சுரேந்திரகுமார் ஆர்யா, தல்ஜித் கவுர், கிரிஷ் சந்திர ஷர்மா, நாராயண் வியாஸ், கிரிராஜ், கைலாஷ் பாண்டே, பஞ்சோலிஜி, ஜிதேந்திரதுத்தா திரிபாதி, பாரதி ஷ்ரோத்ரி, துபே மற்றும் ஐ.நா. மிஸ்ரா, லோதர் பாங்கே, இர்வின் மேயர் மற்றும் ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்ட சக ஊழியர்களுடன் பாறை ஓவியக்கலை துறையில் இவர் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டார்.
வாகங்கர் இந்தியாவில் 4000 க்கும் மேற்பட்ட குகைகளைக் கண்டறிந்து ஆய்வு செய்தார். மேலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பாறை வாழிட ஓவியங்களைக் கண்டறிந்தார். இந்திய பாறை ஓவியக் கலைஞர்களின் செயல்பாடுகள் 40,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று காலவரையறை செய்யப்பட்டது.
இன்று "வாகங்கர் ஆய்வு நிறுவனம் ("வாகங்கர் ஷோத் சன்ஸ்தான்"- (Wakankar Sodh Sansthan) சுமார் 7500 வரையப்பட்ட பாறை ஓவியங்களின் தனிப்பட்ட சேகரிப்பைக் கொண்டுள்ளது, அவற்றில் சுமார் 4000 வாகங்கரால் கண்டறியப்பட்டவை ஆகும்.
1954 ஆம் ஆண்டு தொடங்கி, வாகங்கர் தனது மாணவர்களான சச்சிதா நாக்தேவ், முசாபர் குரேஷி, ரஹீம் குட்டிவாலா ஆகியோருடன் சம்பல் மற்றும் நர்மதா நதிகளின் பள்ளத்தாக்குகளை ஆராய்ந்தார். மகேஷ்வர் (1954), நவடா டோலி (1955), மனோதி (1960), அவாரா (1960), இந்திரகாத் (1959), கயாதா (1966), மண்ட்சூர் (1974, 1976), ஆசாத்நகர் (1974), தங்கவாடா (1974, 1982), இங்கிலாந்தில் வெர்கோனியம் ரோமன் தளம் (1961) மற்றும் பிரான்சில் இன்கோலிவ் (1962), ருனிஜா (1980) ஆகிய களங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டார்.
நாணயவியல் மற்றும் கல்வெட்டுத் துறையில் வல்லுனரான வாகங்கர் கிமு 5 ஆம் நூற்றாண்டு முதல் சுமார் 5500 நாணயங்களைச் சேகரித்து ஆய்வு செய்தார். இவை இன்று "வாகங்கர் ஷோத் சன்ஸ்தானின்" பெருமைக்குரிய தொகுப்பாகத் திகழ்கிறது.
ஜெகநாத் துபே, முரளி ரெட்டி, நாராயண் பாடிஜி ஆகியோர் இந்த கடினமான சேகரிப்பு மற்றும் கடினமான ஆய்வுக்கு பெரும் பங்களிப்பை நல்கியுள்ளனர். இது தவிர, உஜ்ஜயினியில் 15000க்கும் மேற்பட்ட நாணயங்களை ஆய்வு செய்தார்.
இதேபோல், கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் சமஸ்கிருதம், பிராகிருதம், பிராமி மொழிகளில் பொறிக்கப்பட்ட சுமார் 250 கல்வெட்டுகளை "வாகங்கர் ஷோத் சன்ஸ்தானுக்காக" தொகுத்தார்.
முற்கால தொல்லியல் மற்றும் பண்டைய இந்திய வரலாற்றில் வாகங்கர் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். இந்திய நாகரிகத்தின் பெரும்பகுதி இரகசியங்களை தன்னுள்ளே வைத்திருப்பதாகக் கருதப்படும் சரஸ்வதி நதியின் வடிநிலத்தைக் கண்டுபிடிப்பதற்கு அவர் பொறுப்பேற்றார். அவர் நிறுவிய நிறுவனங்கள் இன்று உயிருடன் உள்ளன, அவற்றை உஜ்ஜயினில் பார்வையிடலாம். [3]