விண்வெளி வணிகம் (Space trade) என்பது கோள்களுக்கு இடையேயான அல்லது வானிடை விண்மீன்களுக்கிடையிலான வணிகத்தைக் குறிக்கிறது. 1960 ஆம் ஆண்டுகளில் தொடங்கி எதிர்காலவாதிகளும் பண்டிதர்களும் வர்த்தக செயல்பாடுகள் பற்றிய திட்டங்கள் மற்றும் யோசனைகளை வெளியிட்டு வருகின்றனர். அறிவியல் புனைகதை எழுத்தாளர்களும் பல தசாப்தங்களாக இத்தகைய வணிகத்தை கற்பனை செய்து வருகின்றனர்.
விண்மீன்களுக்கு இடையேயான வணிகம் நடப்பது தெரியவில்லை என்றாலும், அத்தகைய சூழ்நிலையில் வணிகக் கணக்கீடுகள் மற்றும் வட்டி விகிதங்கள் எவ்வாறு சரிசெய்யப்பட வேண்டும் என்பதில் பால் குரூக்மேன் போன்ற நன்கு அறியப்பட்ட பொருளாதார நிபுணர்களால் உருவாக்கப்பட்ட பல கோட்பாடுகள் உள்ளன. மிக அதிக திசைவேகத்தில், எடுத்துக்காட்டாக, ஒளியின் வேகத்துடன் ஒப்பிடத்தக்க ஒரு குறிப்பிடத்தக்க வேகத்தில் பயணிக்கும் ஒரு விண்வெளி நிலையத்தின் நேர அளவீட்டில் வித்தியாசம் இருக்கும். 2004ஆம் ஆண்டில் எசுபென் கார்டர் ஆக்கு, வில்மோட் இதழில் விலை வேற்றுமை வணிகத்தை தவிர்ப்பதற்காக வட்டி விகிதங்கள் மற்றும் பத்திரக் கணக்கீடுகள் மிக அதிக வேகங்களுக்கு எவ்வாறு சரிசெய்யப்பட வேண்டும் என்று ஒரு தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். 2007ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட டெரிவேடிவ்சு மாடல்சு ஆன் மாடல்சு எனப்படும் மாதிரிகளின் வழித்தோன்றல் மாதிரிகள் என்ற புத்தகத்தில் விண்வெளி நேர நிதி என்று அழைத்ததைப் பற்றிய ஒத்த கோட்பாடுகளை அவர் வெளியிட்டார். பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்ற பால் குரூக்மேன், 2010ஆம் ஆண்டில் விண்மீன் வணிகம் குறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.[1]
செவ்வாய் கோளில் மனிதன் குடியேறுவதை முக்கியமானதாகவும், சூரியக் குடும்பத்திற்குள் வணிகம் தன்னிறைவு பெறுவதற்கான வழிகளில் ஒன்றாகவும் பலர் கருதுகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் உலகளாவிய விண்வெளிப் பயணவியல் நிறுவனமான லாக்கீட் மார்டின் நிறுவனத்தின் இராபர்ட்டு சூப்ரின் என்பவரின் செவ்வாய் கிரகக் குடியேற்றத்தின் பொருளாதார நம்பகத்தன்மை பற்றிய ஒரு ஆய்வறிக்கை, பூமி, செவ்வாய் மற்றும் சிறுகோள் பட்டை ஆகியவற்றின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான ஆற்றல் உறவுகள் செவ்வாய் கிரகத்தை எதிர்காலத்தில் எந்த சிறுகோள் சுரங்க வணிகத்திலும் ஈடுபடுவதற்கு ஒரு சிறந்த நிலையில் வைத்திருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டி, ஓர் அனுமான செவ்வாய் குடியேற்ற மக்களை பூமியை விட பணக்காரர்களாக மாறுவதற்கான ஒரு வழியாக கோள்களுக்கு இடையேயான வணிகத்தை முன்வைக்கிறது.[2]
செவ்வாய் கிரகத்தை காலனித்துவப்படுத்துவதற்காக இயிம் பிளாக்சுகோ முன்வைக்கும் ஓர் ஆய்வறிக்கையில், செவ்வாயின் இயற்கைத் துணைக்கோள்களான தெய்மொசு மற்றும் போபொசு ஆகிய இரண்டையும் மேம்படுத்த இயலும் என்கிறார். அவை நீண்ட கால சோதனைத் தளங்கள் என்பதிலிருந்து குறுகிய கால சோதனைத் தளங்களாக மேம்படுத்தப்பட்டால் சிறுகோளைத் தோண்டி செவ்வாய் குடியேற்றத்திற்கான சாரங்கட்டுதல் சாத்தியமாகும். சூரியக் குடும்பத்திற்குள் செவ்வாய் கோள் குடியேற்றத்தினரின் சாதகமான நிலை காரணமாக கோள்களிடை வணிகத்தில் செவ்வாய் கோள் தன்னை முக்கிய வணிகத் தூணாக நிலைநிறுத்திக் கொள்ளும் என்றும் அவர் கூறுகிறார்.[3]
சூரியக் குடும்பத்தில் உள்ள வெவ்வேறு இடங்களில் மனிதர்கள் வாழும் பட்சத்தில், பல்வேறு கோள்கள், நிலவுகள் மற்றும் சிறுகோள்களுக்கு இடையே மதிப்புமிக்க வளங்களைக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும் என்பது ஒரு கோட்பாடாகும்.[4] சிறுகோள் பட்டை மதிப்புமிக்க தாதுக்களின் ஆதாரமாகக் கருதப்படுகிறது. இது தொழில்துறை சிறுகோள் சுரங்க உள்கட்டமைப்பாக உருவாகலாம். அதேசமயம் இந்த உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்கு பூமி உயர் தொழில்நுட்ப உற்பத்தியை ஏற்றுமதி செய்யலாம். ஒரு வர்த்தகப் பாதையின் பொருளாதார மதிப்பை மதிப்பிடுவதற்கு கோள்களுக்கு இடையேயான போக்குவரத்தின் ஆற்றல்-செயல்திறன் காரணி மிகவும் முக்கியமானதாக இருக்கலாம்.
விண்வெளி வணிகம் வளர்வதற்கு முக்கியத் தடையாக இருப்பது தூரம் என இயான் இக்மேன் என்பவர் அடையாளம் கண்டார். இத்தடையே அனைத்து அல்லது கிட்டத்தட்ட அனைத்து வர்த்தகத்திற்குமான அருவமான பொருட்களின் பரிமாற்றத்தைக் குறைக்கிறது. இதனால் ஓர் உண்மையான பொதுவான நாணயத்தில் வணிகத்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் கடன் ஒப்பந்தங்களை செயல்படுத்தும் அரசாங்கங்களும் அச்சுறுத்தப்படுகின்றன.[5]
அதிக திறன் கொண்ட வர்த்தக விண்வெளி நிலையங்களை உருவாக்க, இரயில் அல்லது கடல் போன்ற பிற போக்குவரத்து முறைகளுடன் தொடர்பு தேவைப்படலாம். இதனால் விண்வெளி நிலையங்கள் தேசிய பொருளாதாரத்தின் மற்றொரு பரிமாணமாக மாற்றும். ஒரு விண்வெளி நிலையத்தை இயக்குவதற்கான வணிக, தொழில்நுட்ப மற்றும் தளவாடக் கவலைகள் பற்றிய ஒரு பகுப்பாய்வை நாசா நிறுவனத்தின் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு அலுவலகம் உருவாக்கியுள்ளது.[6]
.doc download link