விண்வெளிச் செவிலியம் (Space nursing) என்பது சிறப்பானதொரு பராமரிப்புப் பணியாகும். விண்வெளிப் பயணத்தில் உண்டாகும் தாக்கங்களுக்கு எதிராக மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றி படிக்கும் அறிவியல் படிப்பு விண்வெளிச் செவிலியம் எனப்படும். விண்வெளி மருத்துவம் போலவே இச்செவிலியச் சேவையும் புவியிறங்கிய நோயாளிகளுக்கு அளிக்கவேண்டிய செவிலிய பாதுகாப்புப் பற்றிய அறிவையும் அளிக்கிறது.[1][2]
1920களில் ஆரம்பமான அமெரிக்க வர்த்தக வான் பயணத்தில் செவிலியர்களை வானூர்தியுடன் அனுப்புவதும் வான் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1958-ம் ஆண்டு சனாதிபதி ஐசனோவர், நாசாவை அமைக்க தேசிய விமானவியல் மற்றும் விண்வெளிச் சட்டத்தில் கையெழுத்திட்டார். விண்வெளி வீரர்களின் உடற்தகுதிகளைக் கண்டறியும் சோதனைகளில் ஈடுபடும் மருத்துவக்குழுவுடன் நெருக்கமாகப் பணியாற்ற செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற அம்சமும் இந்தச் சட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பயணங்கள் முடித்துத் திரும்பிய விண்வெளி வீரர்கள் மீது விண்வெளியின் விளைவுகளைக் கண்காணிக்க செவிலியர்கள் உதவினார்கள்.[3]
இலெப்டினன்ட் டோலோரசு ஓ அரா மற்றும் இலெப்டினன்ட் செர்லி சைனெத் ஆகிய இருவரும் முதன் முதலில் ஏழு மெர்குரி திட்ட விண்வெளி வீரர்களுடன் பணியாற்ற ஒதுக்கப்பட்டனர். அவர்கள் விண்வெளி அவசரச் சிகிச்சை மருத்துவமனைக்குத் தேவையான கருவிகள் உருவாக்கும் வேலையில் ஈடுபட்டனர். ஒரு அவசரச் சிகிச்சைத் தேவை ஏற்பட்டால் இவர்கள் முதல் உதவி வழங்கினார்கள். பேரிடர் இடர்பாடுகளைச் சந்திக்க நேரிட்டால் விண்வெளி வீரர்கள் மீளவும் கட்டுப்படுத்திக் கொள்ளவும் இந்தச் செவிலியர்கள் உதவினார்கள்.
1962 ஆம் ஆண்டில் நாசா விண்வெளிச் செவிலியம் திட்டத்திற்காகச் செவிலியத்தில் பட்டம் பெற்ற நபர்களின் விண்ணப்பங்களைக் கோரியது. 1991 ஆம் ஆண்டில் விண்வெளி செவிலியச் சமுதாயம் துவக்கப்பட்டது. இலிண்டா பிளசு மற்றும் மருத்துவர் மார்த்தா ரோசர் ஆகியோர் இச்சமுதாயத்தை நிறுவினார்கள், "ஒன்றுபட்ட மனித சமுதாயத்திற்கு அறிவியல்" என்பதே இச்சமுதாயத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.[4]