வித்தியா சரண் சுக்லா | |
---|---|
இந்திய அரசின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் 21 நவம்பர் 1990 – 20 பிப்ரவரி 1991 | |
பிரதமர் | சந்திரசேகர் |
முன்னையவர் | ஐ. கே. குஜரால் |
பின்னவர் | மாதவசிங் சோலான்கி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 ஆகஸ்டு 1929 ராய்ப்பூர், சத்தீஸ்கர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 11 சூன் 2013 மேதாந்த் மெடிசிட்டி, குர்காவுன், அரியானா | (அகவை 83)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு ஜனதா தளம்[1] ஜன் மோர்ச்சா |
வித்தியா சரண் சுக்லா அல்லது வி. சி. சுக்லா (Vidya Charan Shukla) (பிறப்பு: 2 ஆகஸ்டு 1929 – இறப்பு: 11 சூன் 2013) 60 ஆண்டு கால இந்திய அரசியல்வாதியும், இந்திய நடுவண் அரசில் பல துறைகளில் அமைச்சராகவும் பணியாற்றியவர். நெருக்கடி நிலை காலத்தில் இந்திராகாந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர்.
1957ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது இந்தியப் பொதுத் தேர்தலில் மகாசமுந்து நாடாளுமன்ற மக்களவை தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சுக்லா தொடர்ந்து ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2]
1966-இல் இந்திரா காந்தி அமைத்த முதல் இந்திய நடுவண் அரசு அமைச்சரவையில் 1966 முதல் 1977 முடிய ராஜாங்க அமைச்சராகப் பணியாற்றியவர்.[2] ராஜிவ் காந்தியின் அமைச்சரவையிலும் பணியாற்றிய[3] சுக்லா, பின்னர் ராஜிவ் காந்திக்கு எதிராக 1980ஆம் ஆண்டின் நடுவில் அருண் நேரு, வி. பி. சிங் மற்றும் ஆரீப் முகமது கான் ஆகிய தலைவர்களுடன் காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறி ஜன் மோர்ச்சா எனும் அரசியல் கட்சியைத் துவக்கினார்.[3] 1989-1990களில் வி. பி. சிங் அமைச்சரவையிலும், 1990-91களில் சந்திரசேகர் அமைச்சரவையிலும் அமைச்சராக பதவியில் இருந்தார்.[3] 9ஆவது மக்களவைத் தேர்தலில் ஜனதா தளம் கட்சி சார்பாக இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் காங்கிரசு கட்சியில் இணைந்து 1991- 1996 இல் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.[2] பின்னர் 2003-ஆம் ஆண்டில் தேசியவாத காங்கிரசு கட்சியின் சத்தீஸ்கர் மாநிலத் தலைவராக இருந்தவர்.[4] 2003-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து மகாசமுந்து நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்குப் போட்டியிட்டு காங்கிரசு கட்சியின் வேட்பாளர் அஜித் ஜோகியிடம் தோற்றார். 2004-இல் பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி [3] 2007-இல் மீண்டும் சோனியா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து கொண்டார்.[3]