வியாழன் கோளின் மீது மோதல் (March 17, 2016 collision with Jupiter) 2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 17 ஆம் நாள் நிகழ்ந்தது. அப்போது சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கிரகமான வியாழன் கோளின் மீது வானியற் பொருளொன்று மோதியது. அவ்வானியற் பொருள் ஒரு குறுங்கோளா அல்லது வால்வெள்ளியா என்பதை நாசா உறுதி செய்யவில்லை ஆனால் அது அவற்றில் ஒன்றாக இருக்கக் கூடும்.
கெரிட் கெர்ன்பவ்வர் என்ற தொழில்சாரா வானியல் அறிஞர் மார்ச்சு மாதம் 17 ஆம் நாள் ஆத்திரேயா நாட்டின் வியன்னாவுக்கு அருகிலுள்ள மோட்லங்கு என்ற நகரிலிருந்து 20 சென்டிமீட்டர் தொலைநோக்கி வழியாக வியாழன் கோளை ஓர் காணொளி படமாக எடுத்துள்ளார். அவரது படப்பிடிப்பின் போது, வியாழனுக்கு வலதுபுறத்தில் ஓர் ஒளி தோன்றியதை தொலைநோக்கியின் வில்லை வழியாக அவர் பார்த்துள்ளார்[1]. இவருடைய படத்தைக் கண்டு சரிபார்த்த பின்னர் மற்றொரு தொழில்சாரா வானியல் வல்லுநர் யான் மெக்கியான் என்பவர் 11 சென்டிமீட்டர் தொலைநோக்கி வழியாக தான் பிடித்த காணொளி படத்தையும், இதே நிகழ்வின் அகச்சிவப்பு வடிகட்டையும் பதிவிட்டார்[2]
இவ்வானியற்பொருள் ஒரு குறுங்கோளாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அது வால்வெள்ளியாக இருக்காது என்றும் நாசாவின் புவி உற்றுநோக்குத் திட்டத்தின் நாசா மேலாளர்[3] பால் சோடாசு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதேபோல 1994 ஆம் ஆண்டு சூ மேக்கர் லெவி 9 என்ற வால் நட்சத்திரம் உடைந்து வியாழன் கோளின் மீது மோதியது[4]