விரிதொடர் தொகுப்புமுறை (Divergent synthesis) என்பது வேதியியல் தொகுப்பு முறையின் செயல்திறனை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட ஒரு தயாரிப்பு உத்தியாகும். பெரும்பாலும் ஒருங்குதொடர் தொகுப்புமுறை அல்லது நேரியலான ஒருபடித் தொகுப்புமுறை போன்ற தயாரிப்பு முறைகளுக்கு இம்முறை ஒரு மாற்று வழிமுறையாக கருதப்படுகிறது.
மூலக்கூறு ஒன்றை ஒரு தொகுதி வினைபடு பொருள்களுடன் வினைபுரிய வைத்து புதியப் புதிய வேதிச்சேர்மங்களின் தொகுப்பை உற்பத்தி செய்வது இவ்வுத்தியின் ஒரு தயாரிப்பு முறையாகும். இவ்வாறு உற்பத்தியான தொகுப்பிலுள்ள முதல்தலைமுறை சேர்மங்கள் ஒவ்வொன்றும் மேலும் வினைபுரிந்து அடுத்த தலைமுறைச் சேர்மங்களை உருவாக்கும். விரிதொடர் தொகுப்புமுறையில் ஏராளமான புதிய சேர்மங்கள் விரைவாக விரிவடைகின்றன.
உதாரணமாக, விரும்பத்தகுந்த பண்புகளுடன் கூடிய சர்க்கரைச் சேர்மங்களின் தொகுப்பை இம்முறையில் உற்பத்தி செய்து தொகுக்க முடியும்.
மையக்கருவாக ஒரு மூலக்கூறை எடுத்துக் கொண்டு அதிலிருந்து தொடங்கி, மேலும் மேலும் கட்டுமானத் தொகுதிகளைச் மைய மூலக்கூறுடன் சேர்த்து அடுத்தடுத்த தலைமுறை சேர்மங்களை தயாரிப்பது விரிதொடர் தொகுப்புமுறையின் மற்றொரு வகையாகும். தெந்திரைமர் தொகுப்புமுறை அல்லது அடுக்குக் கிளைத்தொகுப்பு முறை இதற்குச் சிறந்த உதாரணமாகும். ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு புதிய ஒருபடி வினைபுரிந்து கோளத் தொகுப்பின் மேற்பரப்பு வளர்கிறது.
பன்முகத்தன்மை சார்ந்த தொகுப்புமுறை உத்தியில், மூலக்கூறுத் தொகுப்புகள் பன்முகக் கூட்டை நோக்கி விரைவாகச் செலுத்தப்படுகின்றன [1]. பெடாசிசு வினையில், விளைபொருள் (1) புரோபார்கைல் புரோமைடுடன் சேர்க்கப்பட்டு, ஐந்து வேதிவினைக் குழுக்களுடன் கூடிய தொடக்கச் சேர்மத்தை (2) உருவாக்குகிறது [2]. இம்மூலக்கூறுடன் பல்வேறு வினையாக்கிகளைச் சேர்த்து தனித்தன்மை மிக்க முதல்தலைமுறையில் மூலக்கூற்றுக் கூடுகளை உருவாக்க முடியும் [3]
.