விருகம்பாக்கம் Virugambakkam | |
---|---|
புற நகர் | |
ஆள்கூறுகள்: 13°02′58″N 80°11′06″E / 13.049557°N 80.184928°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
பெருநகரம் | சென்னை |
ஏற்றம் | 17 m (56 ft) |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | தமிழ் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 600 092 |
வாகனப் பதிவு | TN-10 |
மக்களை தொகுதி | தென் சென்னை |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | விருகம்பாக்கம் |
விருகம்பாக்கம் (Virugambakkam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலிலுள்ள சென்னையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும். இப்பகுதியில் சிறந்த பள்ளிகள், சந்தைகள், திரைப்படக் கலைஞர்களின் வீடுகள் உள்ளன. இங்கு சென்னையின் மிக பழமையான மற்றும் மிகப் பெரிய திரைப்பட படப்பிடிப்பு நிறுவனங்கள் உள்ளன. விருகம்பாக்கம் சென்னையின் முக்கியமான இடங்களில் ஒன்றாகும். விடுதலைக்குப் பின்னர் இப்பகுதி மிக வேகமாக வளர்ந்தது. இப்பகுதியின் வளர்ச்சி சென்னை நகரத்தின் விரிவாக்கத்திற்கு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. குடியிருப்பு காலனிகள் இங்கு ஏற்படுத்துவதற்கு முன்னர் நெல் வயல்கள், மாம்பழத் தோட்டங்கள் மற்றும் சவுக்கு மரங்களால் சூழப்பட்ட ஒரு கிராமமாக விருகம்பாக்கம் இருந்தது. விருகம்பாக்கம் முதன்முதலில் சாலிகிராமம் போன்ற கிராமங்களுடன் சேர்ந்து சென்னை நகர எல்லைக்குள் 1977-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.
விருகம்பாக்கம் சென்னை நகரத்தின் மையப்பகுதியுடன் சாலைகள் வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ஆற்காடு சாலை வழியாக இயங்கும் பேருந்துகள் விருகம்பாக்கத்தை சென்னை நகரத்தின் உள் மற்றும் புறநகர்ப் பகுதிகளுடன் நன்கு இணைக்கின்றன. விருகம்பாக்கத்தின் எல்லையும் ஆழ்வார்திருநகரும் சேர்ந்து சென்னை மாநகராட்சியின் மேற்கு எல்லையாக உருவாகிறது.
விருகம்பாக்கத்தின் வளர்ச்சி சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டுகளில் மெட்ராசு நகரத்தின் விரிவாக்கத்துடன் இணைந்திருந்த்து. இரண்டாம் உலகப் போரின்போது வளர்ச்சியடைந்த பல வட்டாரங்களில் விருகம்பாக்கமும் ஒன்றாகும். அந்த நேரத்தில் சென்னை பட்டினத்தில் கோடம்பாக்கம்-சாலிகிராமம்-புலியூர் குடியிருப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது [1][2]. 1940-ஆம் ஆண்டுகளில் அண்ணாசாலை-பூந்தமல்லி சாலையை நுங்கம்பாக்கத்துடன் இணைக்க ஆற்காடுசாலை உருவாக்கப்பட்டது. 1948-ஆம் ஆண்டில், ஆவிச்சி மெய்யப்பா செட்டியார் தனது வசிப்பிடத்தை காரைக்குடியிலிருந்து விருகம்பாக்கத்திற்கு மாற்றியபோது திரைப்பட படப்பிடிப்பு நிறுவனங்கள் இப்பகுதியில் தோன்றின [3]. அன்றுமுதல் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் இந்த இடம் ஒரு புகலிடமாக மாறியுள்ளது [4][5].
1965-ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களில் விருகம்பாக்கமும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 32 வயதான இந்திய அஞ்சல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியரான அரங்கநாதன் தன் உயிரைத் தானே பலியிட்டார்[6]. திராவிட முன்னேற்றக் கழகம் 1967 தேர்தலின்போது விருகம்பாக்கம் பிராந்தியத்தில் தீவிரமாக இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தது[7].
1970கள் வரை விருகம்பாக்கம் ஒரு சிறிய கிராமத்தைவிட சற்றுப் பெரிய கிராமமாக இருந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தின் சைதாப்பேட்டை தாலுகாவின் ஒரு பகுதியாகவே விருகம்பாக்கம் இருந்தது. சில திரைப்பட படப்பிடிப்பு நிறுவனங்கள் தவிர்த்து இங்கு மக்கள் மிகுந்த பகுதிகள் சில மட்டுமே இருந்தன. நடுத்தர குடியிருப்பு காலனிகளை உருவாக்கிய உட்புறப்பகுதிகள் நெல் வயல்களால் மூடப்பட்டிருந்தன. 1971-ஆம் ஆண்டில் இந்த நகரத்தின் மக்கள் தொகை 8,013 ஆகும். 1973-இல் இப்பகுதி சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட பின்னர் வளர்ச்சி வேகமாக நிகழ்ந்தது. குறிப்பாக 1980 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில் இவ்வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. ஆற்காடு சாலை புறநகர்ப்பகுதிகளில் கிடைக்கும் நிலத்தடி நீரின் நல்ல தரம் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
ஒரு காலத்தில் இங்கு நெல் வயல்கள் உள்ளடக்கியிருந்தன என்பதிலிருந்து மண் வளமானதாகவும், உற்பத்தி நிறைந்ததாகவும் இருக்கிறது என்பதை அறியலாம். இருப்பினும், நெல் வயல்கள் முற்றிலும் மறைந்துவிட்டன. 1966-ஆம் ஆண்டில் விருகம்பாக்கத்திற்கு அருகே இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. [8]. இன்றுவரை ஆவடியைத் தவிர சென்னை நகரத்தில் அறியப்பட்ட ஒரே இயற்கை எரிவாயு மூலமாக விருகம்பாக்கம் உள்ளது [8]
ஒரு காலத்தில் விருகம்பாக்கத்தில் ஒரு பெரிய ஏரி இருந்தது. இது சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில் அந்த ஏரி சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. விருகம்பாக்கம் கால்வாய் விரும்பம்பாக்கத்தை கோயம்பேடு போன்ற புறநகர்ப் பகுதிகளிலிருந்து பிரிக்கிறது, அவை உட்புறத்தை நோக்கி அமைந்துள்ளன [9][10].
விருகம்பாக்கத்தில் நுழைவதற்கு முன்பு இந்த கால்வாய் சூளைமேடு, அரும்பாக்கம் மற்றும் வடபழனி போன்ற புறநகர்ப் பகுதிகள் வழியாக சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ஓடுகிறது [9][11]. இந்த கால்வாய் முதலில் பண்ணை நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யும் நோக்கத்திற்காக பயன்பட்டது [9]. இருப்பினும், விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறியதன் மூலம், கால்வாய் வடிகாலாக மாறிப்போனது. மழைக்காலங்களில், கால்வாய் அடிக்கடி நிரம்பி வழிகிறது, அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அழிவையும் ஏற்படுத்துகிறது. 2003-ஆம் ஆண்டில், நிலைமையைச் சமாளிக்க வறட்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.