வில்லெம் யாக்கூப்சன் கோசுட்டர் Willem Jacobsz. Coster | |
---|---|
![]() | |
இலங்கையின் 1-வது ஒல்லாந்த ஆளுநர் | |
பதவியில் 13 மார்ச் – 17 ஆகத்து 1640 | |
முன்னையவர் | புதிய பதவி |
பின்னவர் | யான் தைசோன் பேயார்ட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வில்லெம் யாக்கூப்சன் கோசுட்டர் அண். 1590 ஏக்கர்சிலூட், ஒல்லாந்து, ஐக்கிய இடச்சு மாகாணங்கள் |
இறப்பு | 21 ஆகத்து 1640 நில்கலை, இலங்கை | (அகவை Expression error: Unrecognized punctuation character "–".–49–50)
இராணுவ சேவை | |
பற்றிணைப்பு | டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி |
தரம் | அட்மிரல் |
Wars | இடச்சு-போர்த்துக்கீசப் போர் |
வில்லெம் யாக்கூப்சன் கோசுட்டர் (Willem Jacobszoon Coster) ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் சார்பில், இலங்கையில் ஒல்லாந்தரின் தொடக்ககால நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர். இக்காலத்தில் பல படைத்துறைப் பதவிகளை வகித்ததுடன், காலிக் கோட்டையை ஒல்லாந்தர் கைப்பற்றிய பின்னர் அப்பகுதியில் முதலாவது ஆளுனராகவும் பதவி வகித்தார்.
செப்டெம்பர் 1636 ஆம் ஆண்டிலும் பின்னர் 1637 ஆம் ஆண்டிலும் போத்துக்கீசரை விரட்டுவதற்குக் கண்டியரசர் ஒல்லாந்தரிடம் உதவி கோரியதை அடுத்து பத்தேவியாவிலிருந்து போத்துக்கீசருடன் போரிடுவதற்காகக் கோவாவுக்குச் சென்றுகொண்டிருந்த அட்மிரல் வெஸ்ட்வால்ட் என்பவனுக்கு, கண்டியரசனுடன் உடன்படிக்கை செய்துகொள்ளும்படி தகவல் அனுப்பப்பட்டது. தகவல் கிடைத்தபோது போத்துக்கீசருடன் கடற்போரில் ஈடுபட்டிருந்த வெஸ்ட்வால்ட் போர் முடிந்ததும் தமது படையில் "வைஸ் அட்மிரலாக" இருந்த வில்லெம் யாக்கூப்சன் கோசுட்டரை இலங்கையில் இருந்த போத்துக்கீசரின் ஏதாவதொரு கோட்டையை முற்றுகை இடும்படி அனுப்பினான். சில நாட்கள் கழித்து கோசுட்டர் இலங்கையின் கிழக்குக் கரையில் அமைந்திருந்த போத்துக்கீசரின் மட்டக்களப்புக் கோட்டையை முற்றுகை இட்டார். மே மாதம் 10 ஆம் தேதி கோவாவில் இருந்து வெஸ்ட்வால்ட் ஐந்து கப்பல்களுடன் வர, கண்டியில் இருந்து இராசசிங்கனும் தனது படையுடன் மே 14 ஆம் தேதி மட்டக்களப்புக்கு வந்தார். 18 ஆம் தேதி மட்டக்களப்புக் கோட்டையில் இருந்த போத்துக்கீசப் படைகள் சரணடைந்தன. 23 ஆம் தேதி மே 1638 ஆம் ஆண்டில் கண்டியரசருக்கும் ஒல்லாந்தருக்கும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது[1].
கோஸ்டர் அவ்வாண்டின் இறுதிவரை மட்டக்களப்புக் கோட்டையில் இருந்தார். சில மாதங்களின் பின்னர் திருகோணமலை ஒல்லாந்தரிடம் பிடிபட்டபோது, கோசுட்டர் உதவிக் கட்டளை அதிகாரியாக அங்கு அனுப்பட்டார். 1640 ஆம் ஆண்டில் போத்துக்கீசரின் நீர்கொழும்புக் கோட்டை ஒல்லாந்தரிடம் பிடிபட்டபோது, கோசுட்டர் அங்கே கட்டளை அதிகாரியாகப் பதவியேற்றார்[2]. தொடர்ந்து போத்துக்கீசரிடம் இருந்த காலியைக் கைப்பற்றுவதற்காக கோசுட்டர் நீர்கொழும்பில் இருந்து புறப்பட்டார். இதற்கு உதவியாகக் கண்டியப் படைகளும் வருவதாக இருந்தது ஆனாலும், இப்படைகள் வராததால், திருகோணமலையில் இருந்து வந்த ஒல்லாந்தப் படைகளின் உதவியுடன் காலிக் கோட்டையை 1640 மார்ச் 13 ஆம் தேதி கோசுட்டரின் படைகள் கைப்பற்றின. எனினும் இரு தரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. காலிக் கோட்டை கைப்பற்றப்பட்டமை பத்தேவியாவிலும் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. காலி ஒல்லாந்தரின் இலங்கைக்கான தலைமையிடமாகவும் அறிவிக்கப்பட்டது. கோசுட்டர் இலங்கைக்கான முதலாவது ஒல்லாந்த ஆளுனராகப் பதவியேற்றார்[3].
முன்னர் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி போருக்கான செலவுகளைக் கண்டியரசர் கொடுக்கவில்லை. ஒல்லாந்தர், போத்துக்கீசரைப்போலவே நாட்டைக் கைப்பற்ற முயல்கிறார்கள் எனக் கண்டியரசருக்கு ஐயம் ஏற்பட்டது. இதனால் கோசுட்டரிடம் இருந்து வரும் கடிதங்கள் எதற்கும் கண்டியரசர் பதிலளிக்கவில்லை. இதனால், கண்டியரசரைத் தானே நேரில் சந்திக்க கோசுட்டர் தீர்மானித்தார். 1640 சூலை 15 ஆம் தேதி கோசுட்டர் கண்டியை அடைந்தார். எவ்வித பயனும் இன்றி ஒருமாதம் அங்கே தங்கியிருந்த கோசுட்டர் மரியாதைக் குறைவாகவும் நடத்தப்பட்டார். முடிவில் கண்டியைவிட்டுப் புறப்பட்ட கோசுட்டர் மட்டக்களப்பு நோக்கிப் பயணமானார். இவ்வாறு போகும் வழியில் 1640 ஆகத்து 21 ஆம் தேதி நில்கல என்னும் ஊரில், கோசுட்டரும் அவரது குழுவைச் சேர்ந்த எண்மரும் குரூரமாகக் கொலை செய்யப்பட்டனர்[4].