விழிஞ்ஞம் | |
---|---|
புறநகர் பகுதி | |
ஆள்கூறுகள்: 8°22′45″N 76°59′29″E / 8.37917°N 76.99139°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | திருவனந்தபுரம் மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 695 521 |
தொலைபேசி இணைப்பு எண் | 0471 |
வாகனப் பதிவு | கேஎல்-20 |
விழிஞ்ஞம் (Vizhinjam) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் நகரில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இது நகர மையத்திலிருந்து 16 கி.மீ. தென்மேற்கிலும், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 17 கி.மீ. தெற்கிலும் தேசிய நெடுஞ்சாலை 66 அருகில் அமைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனமான "அதானி துறைமுகங்கள்" தற்போது இந்தப் பகுதியில் ஒரு போக்குவரத்துத் துறைமுகத்தை உருவாக்கி வருகிறது.[1]
வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, தெற்காசியாவின் கடைசி தென்மேற்கு முனையில் அமைந்துள்ள விழிஞ்ஞம், இப்பகுதியின் வரலாறு முழுவதும் ஒரு முக்கியமான துறைமுகமாக செயல்பட்டு வந்துள்ளது. தென்கிழக்காசியாவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தை இணைக்கும் முக்கிய புள்ளியாக இந்த இடம் பொருளாதார ரீதியாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும் முக்கியமானது.
விழிஞ்ஞத்தில் ஒரு சர்வதேச துறைமுகம் 1991ஆம் ஆண்டிலேயே உருவாக்கத் திட்டமிடப்பட்டது.[1] ஆகஸ்ட் 2015 இல், கேரள அரசும் அதானி குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 'அதானி விழிஞ்ஞம் துறைமுகம்' என்ற நிறுவனமும் (ஏவிபிஎல்) அதானி விழிஞ்ஞம் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.[1][2] அதானி விழிஞம் துறைமுக நிறுவனம் மட்டுமே இந்த திட்டத்திற்கு ஏலம் எடுத்தது.[3]
ஒப்பந்தத்தின் விவரங்களின்படி, அதானி குழுமம் விழிஞ்ஞம் துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு 40 ஆண்டுகள் இலவச (மேலும் 20 ஆண்டுகள் நீட்டிக்க முடியும்) சலுகை வழங்கப்பட்டது. கேரள மாநில அரசு 15 ஆண்டுகளுக்குப் பிறகு துறைமுகத்திலிருந்துவரும் வருவாயில் ஒரு பகுதியைப் பெறத் தொடங்கும்.[3] இந்த திட்டத்தில் 360 ஏக்கர் நிலமும் (அவற்றில் சுமார் 36% கடலில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகின்றன), ஒரு தொடருந்து பாதையும் (சுமார் 10 கி.மீ நீளம்) அடங்கும்.[3] முதலாம் கட்டமான அதானி விழிஞ்ஞம் துறைமுகத்தின் பணிக்கான காலக்கெடு 2015 ஒப்பந்தத்தில் 2019 திசம்பர் 4 ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது.[4][2]
முழு விழிஞ்ஞம் திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ. 75.25 பில்லியன் ஆகும்.[4] இந்த திட்டத்திற்காக அதானி விழிஞ்ஞம் துறைமுக நிறுவனம் ரூ .16.35 பில்லியனை கேரள மாநில அரசிடம் கோரியிருந்தது.[3]
இந்த திட்டப் பணிகள் திசம்பர் 5, 2015 அன்று தொடங்கியது.[4] அதானி விழிஞ்ஞம் துறைமுக நிறுவனம் செப்டம்பர் 1, 2018 அன்று (1,000 நாட்கள் இலக்கு) "முதல் கப்பல் விழிஞ்ஞத்துக்கு வந்து சேரும்" என்று அறிவித்திருந்தது.[4] அதானி விழிஞ்ஞம் துறைமுக நிறுவனம் தற்போது கேரள அரசிடமிருந்து முதல் கட்டத்தின் பணிகளின் காலக்கெடுவை அக்டோபர் 2020 வரை நீட்டிக்க முயல்கிறது.[4]
ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, துறைமுகத்தை உருவாக்க சீனா ஒரு பெயரிடப்படாத இந்திய நிறுவனத்துடன் கூட்டு சேர விரும்பியது. ஆனால் தேசிய பாதுகாப்பு அடிப்படையில் ஒன்றிய அரசு நிராகரித்தது.[5] இந்தியாவின் கடற்படைக்கும், கடலோர காவல்படைக்கும் இந்தத் துறைமுகத்தில் இடமிருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.[5]
அருகில் | பெயர் | தூரம் |
---|---|---|
விமான நிலையம் | திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் | 15 கிலோமீட்டர்கள் (9.3 mi) |
தொடர்வண்டி நிலையம் | நெய்யாற்றிங்கரை | 8 கிலோமீட்டர்கள் (5.0 mi) |
துறைமுகம் | விழிஞ்ஞம் பன்னாட்டுத் துறைமுகம் | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
திருவனந்தபுரத்தின் கிழக்கு கோட்டையிலுள்ள மாநகர பேருந்து நிலையத்திலிருந்தும், திருவனந்தபுரத்தின் தம்பனூரிலுள்ள மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் வழக்கமான பேருந்துகள் விழிஞ்ஞம் பகுதிக்கு இயக்கப்படுகின்றன. பேருந்து நிலையங்களில் வண்டிகளையும் வாடகைக்கு அமர்த்தலாம்.