வீணை சேசண்ணா

வீணை சேசண்ணா (1852-1926).

வீணை சேசண்ணா (Veene Sheshanna) (1852-1926) இவர் நரம்பொலிக் கருவியான வீணை கருநாடக இசைக் கலைஞராவார்.[1][2] இவர், தென்னிந்தியாவின் மைசூர் அரசில் அரசவையில் இசைக் கலைஞராக இருந்தார். ஆனால் பக்கிங்காம் அரண்மனையில் இவரது உருவப்படத்தை வைத்திருந்த மன்னர் ஐந்தாம் சியார்சு உட்பட யூரேசியா முழுவதும் இவரது நிகழ்ச்சிகள் பாராட்டப்பட்டன.[1]

குடும்பம்

[தொகு]

இவர், 1852 இல் மைசூரில் ஒரு மத்வ பிராமண இசைக் குடும்பத்தில் பிறந்தார்.[3] இவரது தந்தை சிக்கராமப்பா மைசூர் மகாராஜாவின் அவையில் வீணைக் கலைஞராக இருந்தார். இவர், கர்நாடக இசையின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான பச்சிமீரியம் ஆதி அப்பய்யாவின் வழித்தோன்றல் ஆவார். மைசூரில் அக்கால நடைமுறையின்படி, இவர் தனது பன்னிரண்டு வயதில் திருமணம் செய்து கொண்டார். அவரது தந்தை இவரது சிறு வயதிலேயே இறந்தார்.

பயிற்சி மற்றும் தொழில்

[தொகு]

இவர் ஐந்து வயது சிறுவனாக இருந்தபோதே தனது இசைத் திறமையை வெளிப்படுத்தினார். சிறு வயதிலேயே, இவர் மகாராஜாவின் கண்களில் பட்டு அவரிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றார். மைசூர் சதாசிவ ராவ் மற்றும் வீணை வெங்கடசுப்பையா ஆகியோரிடமிருந்து இசையைக் கற்றுக்கொண்டார். விடாமுயற்சியுள்ள மாணவராக இருந்த இவர் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் இசைப் பயிற்சியினை மேற்கொண்டார். இவர் ஆரம்பத்தில் குரல் இசையைக் கற்றுக்கொண்டார். ஆனால் பின்னர் சரஸ்வதி வீணையை வாசிக்க ஆரம்பித்து அதில் நல்ல புலமையைப் பெற்றார்.

இவர் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் கலைகளின் பணக்கார புரவலர்களின் வீடுகளிலும், ராஜாக்களின் சபைகளிலும் பொது நிகழ்ச்சிகளாக இருந்தன. மைசூர் மகாராஜாவின் சபையில் அரசவைக் கலைஞராக நியமிக்கப்பட்டார். இவரது இசை திறமை மிகச்சிறந்ததாக இருந்தது. மேலும் வயலின், பியானோ சுவராபத் , ஜலதரங்கம் போன்றக் கருவிகளை வாசித்தார்.

பங்களிப்புகள்

[தொகு]

இவர் சுரங்கள், பதங்கள், சாவாலிகள் மற்றும் பல தில்லான்கள் உட்பட 53 பாடல்களை இயற்றினார். இவருக்கு இந்துஸ்தானி இசை குறித்து ஆழமான புரிதல் இருந்தது. இசையமைப்பாளர்களான மைசூர் வாசுதேவாச்சாரியார் மற்றும் ஆர். அனந்த கிருஷ்ணர் உள்ளிட்டோர் இவரது தொழில்நுட்பத் திறமை குறித்து தாராளமாக பாராட்டியுள்ளனர்.

இராம நவமிகளிலும், கிருஷ்ண ஜெயந்திகளிலும் இவர்,பொது இசை நிகழ்ச்சிகளை வழங்குவார். இந்த இசை நிகழ்ச்சிகள் இவரது சொந்த வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த இரண்டு பண்டிகைகளின் போது அவை தலா பத்து நாட்கள் நடைபெற்றன. இது ராஜாவின் சபையிலிருந்தும், பணக்காரனின் மாளிகையிலிருந்தும் இசையை சாமானியரின் வீட்டு வாசலுக்கு கொண்டு வந்தது. கர்நாடகாவின் தர்மஸ்தலத்தில் உள்ள வரலாற்று கலைப்பொருட்கள் அருங்காட்சியகத்தில் இவர் வாசித்த வீணையைக் காணலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Going by strings". Deccan Herald. 2 November 2019. https://www.deccanherald.com/spectrum/spectrum-top-stories/going-by-strings-772762.html. பார்த்த நாள்: 10 March 2023. 
  2. "Mandolin in city". Mint. 13 December 2014. https://www.livemint.com/Leisure/5LwUJyxh7R6MTkiivtO1xH/Mandolin-in-city.html. பார்த்த நாள்: 10 March 2023. 
  3. P.N. Sundaresan (1994). Sruti, Issues 112-113. p. 9. Born in 1852 in a Madhwa Brahmin family, Seshanna was the son of Veena Bakshi Chikkaramappa, a vidwan in Mummadi Krishnaraja Wodeyar's court and a descendant of Pachimiriam Adiappaiah, the creator of the immortal Bhairavi

வெளி இணைப்புகள்

[தொகு]