வெசுட்டன் விண்வீழ்கல் Weston meteorite | |
---|---|
![]() வெசுட்டன் விண்வீழ்கல், H4 | |
வகை | வேதி எரிகல் |
Class | சாதாரண வேதியெரிகல் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
பிராந்தியம் | வெசுட்டன், கனெடிகட் |
அவதானிக்கப்பட்ட வீழ்ச்சி | ஆம் |
வீழ்ந்த நாள் | 1807-12-14 |
வெசுட்டன் விண்வீழ்கல் (Weston meteorite) என்பது 1807 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 14 இல், ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான கனெடிகட்டில் உள்ள வெசுட்டன் நகரில் பூமியில் விழுந்த விண்வீழ்கல்லின் பெயராகும்[1].
கனெடிகட்டில் உள்ள வெசுட்டன் நகரில் 1807[1] ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 14 ஆம் நாளில் தோராயமாக காலை 6.30 மணியளவில் ஒரு விண்வீழ்கல் விழுந்தது. இவ்விண்வீழ்கல் விழுந்ததைப் பலர் பார்த்துள்ளனர் என்பதோடு அச்சமயத்தில் இருந்த செய்தித்தாள்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்[2]. அப்பகுதியில் ஒலித்த மூன்று வெடியொலிகளும் குறைந்தபட்சம் ஆறு பகுதிகளில் விழுந்து காணப்பட்ட கற்சிதறல்களும் தான் இந்நிகழ்வுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய சாட்சியங்களாகும்[3].
விண்வீழ்கல் கற்சிதறல்கள் பூமியில் காணப்பட்ட இடம் சிதைவுக் களம் எனப்படுகிறது. இந்நிகழ்வின் பெரும்பாலான கற்சிதறல்கள் தற்பொழுது ஈசுட்டன் என்று அழைக்கப்படும் நகரில் காணப்பட்டன. குறிப்பாக அவை ஈசுட்டன் நீர்த்தேக்கத்திலும்[2] அதைச்சுற்றி இருந்த இருப்பிடங்களிலும் காணப்பட்டன. தற்காலத்திய வெசுட்டன் நகரில் இச்சிதைவுகள் காணப்படவில்லை என்றாலும் ஈசுட்டன் நகரம் 1807 ஆம் ஆண்டில் வெசுட்டனின் ஒருபகுதியாக இருந்த காரணத்தினால் அவ்விண்வீழ்கல் வெசுட்டன் விண்வீழ்கல் என்ற பெயரைப் பெற்றது. இச்சிதறல்களின் எச்சம் ஈசுட்டனுக்கு அடுத்ததாக அந்நகருக்கு அருகிலுள்ள டிரம்பல் நகரில் காணப்பட்டன. விண்வீழ்கல்லின் பாறைச் சிதறல்கள் டிரம்பல் நகரின் தாசுவாப்[2] பிரிவில் சேகரித்து வைக்கப்பட்டன.
யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பெஞ்சமின் சிலிமான், சேம்சு கிங்சிலி ஆகியோர் விண்வீழ்கல்லின் சிதறல்களைச் சேகரித்து ஆவணப்படுத்தி வேதியியல் முறைப்படி பகுத்தாய்ந்தனர். வெசுட்டன் விண்வீழ்கல் தான் பூமியில் விழுந்த முதல் விண்கல் என்ற அடிப்படையில் அதை அமெரிக்காவில் புதிய உலகத்திற்கான தொடக்கம் என்று ஆவணப்படுத்தியுள்ளனர். வெசுட்டன் விண்வீழ்கல்லின் பழமையான சிதறல்கள் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன[2].