துப்பாக்கி வெடிக்கும் சத்தத்திற்கு இரு மூலங்கள் உள்ளன; வெடியொலி, மற்றும் ஒலியொத்த அல்லது மீயொலிவேகமுள்ள எறியத்தால் உருவாகும் சத்தம். வெளியேற்றத்திற்கு முன், உந்து-வாயு விரிவடையவும் குளிரவும், ஒரு பெரிய பரப்பை ஏற்படுத்தி, ஒலி அடக்கிகள் சுடுகலனின் சப்தத்தின் அளவை குறைக்க உதவகின்றது.[3]
சுடுகலனின் வெடியொலியில் இருந்து தோன்றும் மிகுதியழுத்த அலை, குறிப்பிடத்தக்க அளவிலான ஆற்றலை கொண்டிருக்கலாம், ஏனெனில் இது மிக அதிக வேகத்தில் பயணிக்கும். இந்த ஆற்றலை சன்னவாய் நிறுத்தியால் கட்டுப்படுத்தி, சுடுகலனின் பின்னுதைப்பை குறைக்க பயன்படுத்தலாம்.[4]
சன்னவாய் ஒளிர்வு என்பது துப்பாக்கிக் குழலில் இருந்து சன்னம்/குண்டு வெளியேறும் முன் புலப்படும் ஒரு செந்நிற ஒளிர்வாகும். அதி-உஷ்ண வாயுக்கள் எறியத்திற்கு முன் கசிந்து, துப்பாக்கிக் குழலை விட்டு வெளியேறுவதால் சன்னவாய் ஒளிர்வு ஏற்படுகிறது.
முதன்மை ஒளி என்பது சன்னத்திற்கு பின் சுடுகலனைவிட்டு வெளியேறும் உந்து-வாயுக்களால் ஏற்படுகிறது. இதர ஒளிகளைவிட இது பிரகாசமானதாக இருந்தாலும், முதன்மை ஒளியின் வெப்பம் விரைவில் தணிந்துவிடுவதால், இது வெகுநேரம் தென்படாது.
இடைநிலை ஒளி, வெளியேறும் எறியம் மற்றும் வாயுக்களின் மிகுந்த வேகத்தால் உருவாகும் அதிர்வலைகளால் ஏற்படுகிறது. இது சன்னவாயின் முன், செந்நிற வளைய வடிவில் தென்படும்.
பிந்திய ஒளி என்பது சன்னவாயில் இருந்து தள்ளி ஏற்படும், ஒரு பெரிய வெண்ணிறத்திலோ மஞ்சள்நிறத்திலோ தோன்றும் சுடர் ஆகும். சன்னவாயை சூழ்ந்துள்ள (வளிமண்டலத்தில் உள்ள) ஆக்சிசனுடன், எரியக்கூடிய வாயுக்கள் கலப்பதால்; இந்த பிந்திய ஒளி ஏற்படுகிறது..[6]
வெடியொளி மறைந்த பின், முழுமையாக எரியாத துகள்கள் சன்னவாயில் இருந்து வெளியேற்றப்படும். இதுதான் தீப்பொறியாக கண்களுக்கு புலப்படும்.
வெடியொளி, (அதிலும் நீண்ட நேர பிந்திய ஒளி) என்பது பல சுடுகலங்களில் இருக்கும் பிரச்சனை ஆகும். இதன் பிரகாசத்தால், சுடுநர் தற்காலிகமாக குருடாவார், மேலும் இரவில் சுடுநரின் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்துவிடும்.
ஒளி அடக்கிகளைக் கொண்டு வெடியொளியை அடக்கலாம். கூம்பு வடிவ, அல்லது வரிசையாக துளையிடப்பட்ட சன்னவாயை பயன்படுத்தி, உருவாகும் அதிர்வலைகளை இடைமறிப்பதால் இது சாத்தியமாகிறது. பிந்திய ஒளி ஏற்பட முதன்மைக் காரணமே, நீரியம் மற்றும் கார்பன்மொனாக்சைடின் எரியூட்டுதல் தான். வேதியல் வுரைகளும் பயன்படுத்தப் படுகின்றன. முதல் உலகப் போரில், சோடியம் குளோரைடு (உப்பு) நிரப்பப்பட்ட பைகள் பீரங்கிப்படையில் வெடியொளியை அடக்க பயன்படுத்தப் பட்டன.