வெட்டூரி | |
---|---|
பிறப்பு | வெட்டூரி சுந்தரராம மூர்த்தி 29 சனவரி 1936 பெடகல்லேபள்ளி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 22 மே 2010 ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா (தற்போதைய தெலங்காணா) | (அகவை 74)
பணி | கவிஞர், பாடலாசிரியர், பத்திரிக்கையாளர் |
வாழ்க்கைத் துணை | சீதா மகாலட்சுமி |
பிள்ளைகள் | 3 |
வெட்டூரி சுந்தரராம மூர்த்தி (Veturi Sundararama Murthy) (29 ஜனவரி 1936 - 22 மே 2010), தனது குடும்பப் பெயரான வெட்டூரி மூலம் அறியப்பட்ட இவர், ஓர் இந்தியக் கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் பத்திரிகையாளரும் ஆவார். இவர் தெலுங்குப் பாடல்களை எழுதுவதில் பிரபலமானவர். தெலுங்குத் திரையுலகில் இவரது வாழ்க்கை நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்திருந்தது.[1] தெலுங்கு பாடல்களில் இவரது ஆழமான மற்றும் சிந்தனைமிக்க வரிகளுக்காக இவர் மிகவும் பாராட்டப்பட்டார்.
வெட்டூரி, கிருஷ்ணா மாவட்டத்தின் சல்லப்பள்ளிக்கு அருகிலுள்ள பெடகல்லேபள்ளியில் சந்திரசேகர் சாத்திரி மற்றும் கமலாம்பாள் ஆகியோருக்கு ஒரு தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். .[2][3] இவர், தெலுங்கு ஆராய்ச்சி அறிஞரான வெட்டூரி பிரபாகர சாத்திரியின் மருமகன் ஆவார். இவரது தாத்தா வெட்டூரி சுந்தர சாத்திரியும் ஒரு கவிஞர்.
வெட்டூரி கிருஷ்ணா மாவட்டத்தில் விசயவாடாவிற்கு அருகில் உள்ள திவிசீமா, ஜக்கையபேட்டையில் பள்ளிப் படிப்பையும், தனது பாட்டியின் கிராமத்தில் இடைநிலைக் கல்வியையும் முடித்தார். பின்னர், உயர் கல்விக்காக சென்னைக்குச் சென்ற வெட்டூரி, மீண்டும் விசயவாடா வந்து அங்கு எஸ்ஆர்ஆர் அரசுக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். இவர் இக்கல்லூரியில் பழம்பெரும் விசுவநாத சத்யநாராயணாவின் மாணவராக இருந்தார்.
வெட்டூரி தனது கல்விக்குப் பிறகு 1952 இல் ஆந்திர பிரபா நாளிதழில் பத்திரிகையாளராக சேர்ந்தார்.[4] இவர் தனது முதல் ஆசிரியராகக் கருதும் ஆந்திர பிரபாவில் மூத்தவரான நர்லா வெங்கடேசுவர ராவிடம் இருந்து செய்திக் கட்டுரையைத் திருத்துவதற்கான அடிப்படைகளைக் கற்றுக்கொண்டார். 1959 இல், இவர்ஆந்திரா பத்ரிகா என்ற வார இதழில் சேர்ந்தார். அங்கு சத்திராசு லட்சுமி நாராயணா மற்றும் முல்லப்புடி வெங்கட ரமணா ஆகியோர் இவரது சக ஊழியர்களாக இருந்தனர்.[5] ஆந்திரா பத்ரிகாவில் திரைப்படப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தார். ஆந்திரப் பிரதேச காங்கிரசு கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ஆந்திரா ஜனதாவில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
1962 ஆம் ஆண்டில், ஸ்ரீசைலம் அணை நீர் மின் ஆற்றல் திட்டத்தைத் துவக்கி வைக்க வந்த அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவை நேர்காணல் செய்த முதல் மற்றும் ஒரே தெலுங்கு பத்திரிகையாளர் ஆனார். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் போன்ற தேசிய தலைவர்களின் பேச்சுகளை இவர் பதிவ்வு செய்தார். 1964ல் சட்டப்பேரவை நிருபராகவும் பணியாற்றினார்.
இவரது கட்டுரைகள் மிகவும் கவர்ச்சியாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, ஆந்திரப் பிரதேச மாநில சட்டசபைக்கு அருகில் உள்ள துவாரகா தங்கும் விடுதியில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை இவர் "அடிகோ துவாரகா - இவிகோ அலமண்டலு" ("இது துவாரகா மற்றும் இதோ கால்நடைகள்") என்று குறிப்பிட்டார். நிகழ்கால நிகழ்வுகளை விவரிப்பதற்கு ரைம் மற்றும் ரைம் தொடர்பான பாரம்பரிய கவிதை விதிகளைப் பயன்படுத்துவதில் அவரது திறமை காரணமாக அவரது எழுத்து நடை திரைப்படத் துறையின் கவனத்தை ஈர்த்தது.
வெட்டூரி பத்திரிக்கையாளராக இருந்த காலத்தில் தெலுங்குத் திரையுலகத்துடன் தொடர்பு கொண்டிருந்தார். மூத்த பாடலாசிரியர் தாசரதியை அடிக்கடி சந்திப்பார். பழம்பெரும் இயக்குனர் சித்தூர் வி. நாகையா, நா இல்லு (1953) திரைப்படத்தில் இவருக்கு ஒரு பாத்திரத்தை வழங்கினார். ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தான் நடிக்கத் தகுதியற்றவர் என்று கருதிய வெட்டூரி நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து, தனது வாய்ப்பை நிராகரித்ததற்காக நாகய்யாவிடம் மன்னிப்புக் கடிதம் எழுதினார். என். டி. ராமராவ், இவரை திரைப்படத்துறையில் பாடலாசிரியராக சேர அழைத்துள்ளார். 1974 ஆம் ஆண்டில், இவர், ஹரிகதா கலாட்சேபம் வடிவில், கே. விஸ்வநாத்தின் இயக்கத்தில் ஓ சீதா கதா (1974) என்ற படத்தில் "பாரதனாரி சரிதமு" என்ற தனது முதல் பாடலை எழுதினார்.
ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22 மே 2010 அன்று, 74 வயதில், சுமார் 9:30 மணியளவில் , நுரையீரல் ரத்தக்கசிவு காரணமாக வெட்டூரி இறந்தார்.
இலக்கியம் மற்றும் திரைப்படங்களுக்கான இவரது பங்களிப்புகளுக்காக வெட்டூரி பல தேசிய மற்றும் பிராந்திய விருதுகளைப் பெற்றுள்ளார். ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தின் 23வது பட்டமளிப்பு விழாவில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.[6] 2007ல் ஜந்தியாலா நினைவு விருதைப் பெற்றார்.[7]
மாத்ருதேவோபாவா திரைப்படத்தில் இடம்பெற்ற "ராலிபோயே புவ்வா" என்ற பாடலுக்காக சிறந்த பாடலுக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.[8] கவிஞரான சிறீ சிறீக்குப் பிறகு தனிச்சிறப்பைப் பெற்ற இரண்டாவது தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் ஆவார். 2006 ஆம் ஆண்டில், இந்திய அரசால் தெலுங்கிற்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்படாவிட்டால் தேசிய விருதை திருப்பித் தருவதாக அறிவித்தார்.[9] 2008 இல், இந்திய அரசு தெலுங்கைச் செம்மொழியாக அறிவித்தது.[10]
கோதாவரி (2006) படத்தின் உப்பொங்கேலே கோதாவரி பாடலுக்காக இவர் பிலிம்பேர் விருதைப் பெற்றார்.[11]
ஆந்திர அரசின் சிறந்த பாடல் வரிகளுக்கான நந்தி விருதை ஆறு முறை பெற்றுள்ளார்.