வைகானசம் (Vaikhānasa) வைணவ சமயத்தினர் பின்பற்றும் இரண்டு ஆகமங்களின் தொன்மையான ஒன்றாகும். விகநச முனிவரால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் இந்த ஆகம நெறியினைப் பின்பற்றுவோர் வைகானசர் ஆவர். திருவேங்கடம் (திருப்பதி) திருமாலிருஞ்சோலை போன்ற திவ்யதேசங்களில் வைகானச அர்ச்சகர்கள்தாம் பெருமாளுக்கு ஆராதனம் செய்கிறார்கள். இவர்கள் வடகலை வைணவ சமயப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.[1][2][3]
மூலவர் திருமேனியைத் தொடும் உரிமையுடையவர்கள் இவர்கள். இவர்களுக்கு உதவியாகப் பணிபுரியும் பட்டர்களுக்கும் மூலத்திருமேனியைத் தொடும் உரிமை இல்லை. இவர்கள் நெறி வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் இராமாநுசரையோ நம்மாழ்வாரையோ தம் குல குருவாக ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் திவ்வியப் பிரபந்தங்களை இவர்கள் ஓதுவதில்லை.
பஞ்ச சம்ஸ்காரம் (வைணவனாக எண்ணப்படுவதற்குத் தேவைப்படும் ஐவகைத் தூய்மைகள்) என்ற வைணவ தீட்சையை இவர்கள் பெறுவதுமில்லை. தாயின் கருவிலேயே இம்முத்திரை தங்களுக்கு இடப்பட்டுவிட்டது என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.
பரத்துவம், (வைகுண்டத்தில் உள்ள நிலை) வியூகம் (பாற்கடலில் உள்ள நிலை), விபவம் (அவதாரநிலை), அந்தர்யாமி (உயிரில் கரந்து நிற்கும் நிலை), அர்ச்சை (கோவில்களி்ல் குடிகொண்டுள்ள திருவுருவ நிலை) என்னும் வைணவ வழிபாட்டு நெறிகளில் அர்ச்சாவதாரத்தையே (கண்ணுக்குப் புலனாகும் பொருள்களாற் செய்யப்பெற்றுக் கோயில்களில் வழிபடப்பெறும் திருமேனிகளை வணங்குவதையே) வைகானசர் பின்பற்றுகின்றனர். பிற நெறிகளை ஏற்பதில்லை.
ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் காலத்தில் உருவான கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதால், ஆழ்வார்கள் காலத்திற்கு முன்பே வைகானசர் தமிழ்நாட்டுக் கோயில்களில் பணியாளராக நிலைபெற்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். “எனவே தமிழ் நிலத்து நெறிகளில் காலூன்றாமல் தங்களது தனித் தன்மையினைக் காப்பவர்களாக (puritans) இவர்கள் உள்ளனர். இவர்கள் வடமொழி வேதங்களை மட்டும் ஏற்றுக்கொள்வதற்கும் அதுவே காரணமாதல் வேண்டும்” என்பது அறிஞர்களின் முடிவாகும்.[4]