ஷபிபுலிஸ்லாம் (Shafiul Islam (Bengali: শফিউল ইসলাম, பிறப்பு அக்டோபர் 6, 1989) வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். வலதுகை வேகப் பந்துவீச்சாளரான இவர் ராஜாஹி மாகாண அணிக்காக 2006 ஆம் அண்டு முதல் விளையாடி வருகிறார்.
வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆறு அணிகள் கொண்ட வங்காளதேச பிரீமியர் லீக் தொடரினை நடத்தத் திட்டமிட்டது.[1] அதற்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.[2] ஷபிபுல் குல்னா அணிக்காக 65,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஒப்பந்தன் ஆனார்[3].அந்தத் தொடரில் ஏழு போட்டிகளில் 5 இலக்குகளை வீழ்த்தி அதிக இலக்குகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் நான்காவது இடம் பிடித்தார்.[4] அதே ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் இ தரத்தில் இருந்து ஆ தரத்திற்கு முன்னேறினார்.[5]
2017 -2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தாக்கா பிரீமியர் லீக் தொடரில் அக்ரனி வங்கி துடுப்பாட்ட சங்கம் சார்பாக விளையாடினார். அந்தத் தொடரில் 13 போட்டிகளில் 24 இலக்குகளை வீழ்த்தினார். இதன் மூலம் அந்தத் தொடரில் அதிக இலக்குகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.[6]
சனவரி, 2010 இல் இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையே நடந்த முத்தரப்பொ ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரில் இதற்கு முன்பாக சர்வதேச போட்டிகளில் விளையாடாது தேர்வான ஒரே வங்காளதேச வீரர் எனும் பெருமை பெற்றார். ஆனால் உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.[7]
சனவரி 4, 2010 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். ரூபெல் ஒசைனுடன் இணைந்து துவக்க ஓவர்களை வீசினார். 5 ஓவர்களை வீசி 39 ஓட்டஙளை விட்டுக் கொடுத்தார். குமார் சங்கக்காராவின் இலக்கினை வீழ்த்தினார்.[8] முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் இலக்கினை வீழ்த்தியத்ன் மூலம் அதற்கு அடுத்த மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடருக்கான 14 பேர் கொண்ட வங்காளதேச அணியில் இவருக்கு இடம் கிடைத்தது.[9] சனவரி 17 இல் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் சஹாதத் உசைனுடன் இணைந்து துவக்க ஓவர்களை வீசினார். இந்தப் போட்டியில் கவுதம் கம்பீரின் இலக்கினை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 113 ஓட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது.[10]
சூன் 2010 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 90 ஓட்டங்களும் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியிலும் 90 ஓட்டங்களும் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்த வங்காளதேச பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இரண்டு இடங்களில் இவர் உள்ளார்.[11]
2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையினை இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து வங்காளதேச அணி நடத்தியது.ஷபிபுல் 15 பேர்கொண்ட உத்தேச அணியில் இடம் பிடித்தார். மார்ச், 11 இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 9 ஆவது இணைக்கு 58 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.[12] இந்தப் போட்டியின் முடிவில் ரசிகர்கள் ஷபிபுல் வங்காள தேசத்தின் நாயகன் எனப் புகழ்ந்தனர்.[13] இந்தப் போட்டின் முடிவில் இம்ருல் கயஸ் ஆட்டநாயகனாகத் தேர்வானார். ஆனால் இந்த விருதிற்கு ஷபிபுல்லே தகுதியானவர் எனத் தெரிவித்தார்[14]. நெதர்லாந்திர்கு எதிரான போட்டியில் இவரின் பந்துவீச்சு மற்றும் மட்டையாட்டம் சிறப்பாக இருந்ததாக சகீப் அல் அசன் தெரிவித்தார்.[14] காலில் ஏற்பட்ட காய காரணமாக மேர்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான் ஒருநாள் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இருந்து இவர் விலகினார்.[15]