ஸ்ரீ மகாராஜா Sri Maharaja | |
---|---|
பாதுகா | |
சிங்கபுர இராச்சியத்தின் 4-ஆவது அரசர் | |
ஆட்சிக்காலம் | 1375-1389 |
முன்னையவர் | ஸ்ரீ ராணா விக்கிரமா |
பின்னையவர் | பரமேசுவரா |
பிறப்பு | சிங்கப்பூர் |
இறப்பு | சிங்கப்பூர் |
புதைத்த இடம் | கெனிங் கோட்டை மலை (Fort Canning Hill) |
குழந்தைகளின் பெயர்கள் | பரமேசுவரா |
தந்தை | ஸ்ரீ விக்கிரம வீரா |
ஸ்ரீ மகாராஜா (மலாய் மொழி: Paduka Sri Maharaja; ஆங்கிலம்: Sri Maharaja); என்பவர் சிங்கபுர இராச்சியத்தின் நான்காவது அரசர். ஸ்ரீ ராணா விக்கிரமா என்பவரின் மூத்த மகன் ஆவார்.
இவர் 1375-ஆம் ஆண்டில் இருந்து 1389-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தவர். இவர் பதவி ஏற்பதற்கு முன்பு தமியா ராஜா (Damia Raja) என்று அழைக்கப்பட்டார்.[1]
செஜாரா மெலாயு எனும் மலாய் இலக்கிய வரலாற்றுச் சான்றுகளில், ஸ்ரீ மகாராஜாவின் ஆட்சியின் போது சிங்கபுரக் கடற்கரையை வாள் மீன்கள் தாக்கிய நிகழ்வுடன் குறிக்கப்படுகிறது.
ஆங் நாடிம் (Hang Nadim) எனும் சிறுவன், வாள்மீன்களின் தாக்குதலைத் தடுக்க ஒரு புத்திசாலித்தனமான தீர்வை வழங்கினான். ஸ்ரீ மகாராஜா ஆரம்பத்தில் நன்றியுடன் இருந்தார்.
ஆனாலும், சிறுவனின் புத்திசாலித் தனத்தால் அவருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் எனத் தவறுதலாக அறிவுரை வழங்கப்பட்டார். அரசவை அமைச்சர்களின் பேச்சைக் கேட்டு அந்தச் சிறுவனை தூக்கிலிட உத்தரவிட்டார்.[2]
தூக்கிலிடப்பட்ட ஆங் நாடிமின் இரத்தம், சிங்கப்பூர் நிலத்தின் ஒரு பகுதியைச் சிவப்பு நிறத்தில் கறை படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால் சிங்கப்பூரின் அந்தப் பகுதிக்கு தானா மேரா (Tanah Merah) எனும் பெயர் வந்ததாகச் சொல்லப் படுகிறது.
1389-ஆம் ஆண்டில், ஸ்ரீ மகாராஜாவுக்குப் பிறகு அவரின் மகன் பரமேசுவரா என்பவர் சிங்கபுர இராச்சியத்தின் அரியணையில் அமர்ந்தார். இவர்தான் மலாக்கா நகரத்தையும்; மலாக்கா சுல்தானகத்தையும் தோற்றுவித்தவர்.[3]