ஸ்ரீ விக்கிரம வீரா

ஸ்ரீ விக்கிரம வீரா
Sri Wikrama Wira
பாதுகா
சிங்கபுர இராச்சியத்தின்
2-ஆவது அரசர்
ஆட்சிக்காலம்1347-1362
முன்னையவர்நீல உத்தமன்
பின்னையவர்ஸ்ரீ ராணா விக்கிரமா
பிறப்புசிங்கப்பூர்
இறப்புசிங்கப்பூர்
புதைத்த இடம்
துணைவர்நீல பஞ்சவடி
(Nila Panjadi)
குழந்தைகளின்
பெயர்கள்
ஸ்ரீ ராணா விக்கிரமா
தந்தைநீல உத்தமன்
தாய்வான ஸ்ரீ பினி
(Wan Sri Bini)

ஸ்ரீ விக்கிரம வீரா (மலாய் மொழி: Paduka Sri Wikrama Wira; ஆங்கிலம்: Sri Pikrama Wira அல்லது Vikramavira); என்பவர் சிங்கபுர இராச்சியத்தின் இரண்டாவது அரசர். சிங்கப்பூரைத் தோற்றுவித்த நீல உத்தமனின் மூத்த மகன் ஆவார்.

செஜாரா மெலாயு எனும் மலாய் இலக்கிய வரலாற்றுச் சான்றுகளின்படி, இவர் 1347-ஆம் ஆண்டில் இருந்து 1362-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தவர். இவர் பதவி ஏற்பதற்கு முன்பு ராஜா கெசில் பெசார் (Raja Kecil Besar) என்று அழைக்கப்பட்டார். மற்றும் நீல பஞ்சவடி (Nila Panjadi) என்ற இந்திய இளவரசியை மணந்தவர்.[1]

பொது

[தொகு]

ஸ்ரீ விக்கிரம வீராவின் ஆட்சிக் காலத்தில் சிங்கபுர இராச்சியத்தை அடிபணியச் செய்ய சயாமியர்கள் முதல் முறையாக முயற்சிகள் செய்தார்கள்.[2]

1349-ஆம் ஆண்டில் வாங் தாயுவான் (Wang Dayuan) எனும் சீன வணிப் பயணி ஒரு வரலாற்று நூலை எழுதி இருக்கிறார். அதன் பெயர் தாயி சிலு (ஆங்கிலம்: Daoyi Zhilüe அல்லது A Brief Account of Island Barbarians; சீனம்: 岛夷志). அந்த நூலில் உள்ள பதிவுகளின்படி, சயாமியர்கள் 70 கப்பல்களுடன் சிங்கப்புர இராச்சியத்தின் மீது படை எடுத்தார்கள்.[3]

சீனக் கடல்படையின் உதவி

[தொகு]

உதவிக்கு சீனாவில் இருந்து சீனக் கடல்படை வரும் வரையில், சிங்கபுர இராச்சியத்தின் படைகள் தாக்குப் பிடித்தன. அப்போது சிங்கப்பூரில் இருந்த சிங்கபுர இராச்சியத்தின் கோட்டை அரண்கள் வலுவாக இருந்தன. அதனால் சயாமியர்களை எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடிந்தது.[4]

அதே நேரத்தில், வளர்ந்து வரும் சிங்கபுர இராச்சியத்தின் செல்வாக்கை, அப்போதைய சக்திவாய்ந்த ஜாவானிய இராச்சியமான மஜபாகித் பேரரசு கவனிக்கத் தொடங்கியது. அப்போது மஜபாகித் பேரரசிற்கு கஜ மதன் (Gajah Mada) எனும் சிரனோதரன் (Jirnnodhara) பிரதமராக இருந்தார்.[5]

மஜபாகித் படையெடுப்பு

[தொகு]

கஜ மதன்

[தொகு]

கஜ மதனின் காலத்தில் நுசாந்தராவில் (Nusantara) இருந்த அனைத்து இராச்சியங்களுக்கும் எதிராக மஜபாகித் பேரரசு அதன் வெளிநாட்டு விரிவாக்கங்களைத் தொடக்கியது. அதில் சிதறிக் கிடந்த ஸ்ரீவிஜயம் பேரரசின் சிற்றரசுகளையும் மஜபாகித் பேரரசிற்குள் இணைப்பதும் ஒரு விரிவாக்கப் பகுதியாகும்.

1350-இல், ஆயாம் ஊருக் (Hayam Wuruk) என்பவர் மஜபாகித் பேரரசின் அரியணையில் ஏறினார். இவரின் அசல் பெயர் இராயசநகரன் (Rajasanagara) அல்லது பதாரா பிரபு (Bhatara Prabhu).

இவர் சிங்கபுரத்திற்கு ஒரு தூதரை அனுப்பி, சிங்கபுர இராச்சியத்தை மஜபாகித் பேரரசிடம் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை வைத்தார்.

விக்ரம வீரா மறுப்பு

[தொகு]

அந்தக் கோரிக்கையை ஸ்ரீ விக்ரம வீரா மறுத்து விட்டார். அத்துடன் மஜபாகித் மன்னனின் தலையை மழித்து விடுவேன் என்று மிரட்டி ஓர் அடையாளச் செய்தியையும் அனுப்பி வைத்தார்.[6]

கோபம் அடைந்த மஜபாகித் மன்னர் ஆயாம் ஊருக், 180 போர்க் கப்பல்களையும் மற்றும் எண்ணற்ற சிறிய கப்பல்களையும் கொண்ட ஒரு படையெடுப்பிற்கு உத்தரவிட்டார்.

சிங்கபுரக் கடற்கரையில் போர்

[தொகு]

கடற்படை பிந்தான் தீவுகள் வழியாக சென்றது. அங்கு இருந்து சிங்கபுரத்திற்குச் செய்தி பரவியது. படையெடுப்பை எதிர்கொள்ள உடனடியாக 400 போர்க் கப்பல்கள் களம் இறங்கின. இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். மூன்று நாட்களாகச் சிங்கபுர கடற்கரையில் போர் நடந்தது.

அந்தக் கட்டத்தில் மஜபாகித் ஜாவானியர்கள் பெரும்பாலும் கடற்படைப் போரில் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தனர். அந்த வகையில் அவர்கள் அந்தப் போரில் தோற்கடிக்கப்பட்டனர். இறுதியில் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தப் போர் 1350-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் 1362-ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விக்ரம வீரா, சிங்கப்பூரை ஆட்சி செய்தார். இவருக்குப் பின்னர் இவருடைய மகன் ஸ்ரீ ராணா விக்கிரமா (Sri Rana Wikrama) என்பவர் சிங்கபுர இராச்சியத்தின் அரியணையில் அமர்ந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dr. John Leyden (1821). Malay Annals: Translated from the Malay Language. London: Longman, Hurst, Rees, Orme, and Brown. pp. 44–49.
  2. Chiu Hsin-Hui (2008). The Colonial 'civilizing Process' in Dutch Formosa: 1624 - 1662. Brill. p. 233. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004165076.
  3. Morris Rossabi, ed. (30 August 2013). Eurasian Influences on Yuan China. Institute for Southeast Asian Studies. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9814459723.
  4. The Ethnic Chinese in the Asian States
  5. Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824803681.
  6. Leyden, John (1821), Malay Annals (translated from the Malay language), Longman, Hurst, Rees, Orme and Brown, p. 52
ஸ்ரீ விக்கிரம வீரா
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் சிங்கப்பூர் அரசர்
1347-1362
பின்னர்

மேலும் காண்க

[தொகு]
  • Ruling House of Malacca-Johor. Christopher Buyers. October 2008. Retrieved 2010-10-08.
  • Studying In Singapore. Search Singapore Pte Ltd. Retrieved 2006-04-14.
  • Sang Nila Utama (PDF). 24hr Art. Retrieved 2006-04-14.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]