ஸ்ரீருத்ரம் என்பது சம்ச்கிருதம் மொழியிலுள்ள கிருஷ்ண யஜுர்வேதத்தில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்திற்கு (4-வது காண்டம், 5-வது அத்தியாயம்) பொது வழக்கிலுள்ள பெயர். யஜுர்வேதத்தின் 100 ('சாகைகள்' என்ற) கிளைகளிலும் இவ்வத்தியாயம் காணப்படுவதால் இது `சதருத்ரீயம்' என்றும் பெயர் பெற்றது. (`சத' என்றால் நூறு).அதனில் 37 ரிக்குகளும் 130 யஜுஸ்ஸுகளும் உள்ளன. செய்யுள் நடையிலுள்ள வேதவாக்கியத்திற்கு ரிக்(கு) என்றும் உரைநடையிலுள்ள வேதவாக்கியத்திற்கு யஜுஸ் என்றும் பெயர். ஸ்ரீருத்ரத்தில் 47 யஜுஸ்ஸுகள் தொடக்கத்திலும் முடிவிலும், மற்ற யஜுஸ்ஸுகள் தொடக்கத்தில் மட்டிலும், 'நமஹ' என்ற சொல்லை உடையவை. இதனாலேயே இவ்வத்தியாயத்திற்கு 'ருத்ர-நமகம்' அல்லது சுருக்கமாக 'நமகம்' என்றும் ஒரு பெயர் உண்டு. இது 'ருத்ரன்' என்ற சிவனை 300 பெயர்களாலும் இன்னும் பல மந்திரங்களாலும் போற்றி போற்றி என்று போற்றுவது. திராவிட நாட்டு அந்தணர்கள் கூட்டமாகச்சேர்ந்து சிவலிங்கத்திற்கு நீராடல்செய்யும்போது இந்த ருத்ரத்தை அதன் ஸ்வரங்களுடன் உரக்க உச்சரிப்பது செவிக்கும் உள்ளத்திற்கும் ஓர் ஆன்மீகவிருந்தென்று சொல்வோர் பலர்.
ஸ்ரீருத்ரம் தமிழில் திருவுருத்திரம் என அறியப்படுகிறது. வடமொழியில் ஸ்ரீருத்ர ப்ரச்னம், ஸ்ரீருத்ரசூக்தம், ஸ்ரீருத்ராநுவாகம் முதலிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. [1]
'நமஹ' என்ற வடமொழிச்சொல்லிற்கு 'போற்றி' என்றோ 'வணங்குகிறோம்' என்றோ பொருள் கூறலாம்.மற்றும் அச்சொல்லிற்குள் ஒரு பெரிய வேதாந்த தத்துவமே அடங்கியிருக்கிறது. 'ந' என்றால் 'இல்லை' என்று பொருள். 'ம' என்ற மெய்யெழுத்து 'மம' என்ற சொல்லின் பொருளான 'எனது' 'என்னுடையது' என்ற எண்ணத்தைக் குறிக்கிறது. அதனால் 'நமஹ' என்று உச்சரிக்கும்போது 'என்னுடையது இல்லை' என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறோம். அதாவது, நம்முடையது என்று ஒன்றுமில்லை, எல்லாம் ஆண்டவனுடையது என்று பொருள். இப்பொருள் செறிந்த சொல்லாகிய நமஹ என்பதைச்சேர்த்து ஆண்டவனின் திருநாமத்தைச் சொல்லும்போது அது இன்னும் ஏற்றமுடையதாகிறது என்பது இந்து மதநூல்களின் கொள்கை.
வேதகாலத்து நூல்களில் ஒரு முக்கியமான உபநிடதமான தைத்திரீய உபநிடதத்தில் (3-வது அத்தியாயம், 10-வது அனுவாகம்)'நமஹ' என்ற சொல்லிற்குள்ள ஏற்றத்தை "தம் நம இத்யுபாஸீத, நம்யந்தே அஸ்மை காமாஹ" என்று பறை சாற்றுகிறது. அதாவது "அவரை (பரம்பொருளை) நமஹ என்று எவன் போற்றித் தொழுகிறானோ அவனை ஆசைகள் அவ்வளவும் வந்து வணங்குகின்றன" என்று பொருள்.ஆசைகள்தான் மனிதர்கள் எல்லோரையும் ஆட்டி வைக்கின்றன; அவைகளே நம்மை வந்து வணங்குவதாயிருந்தால், ஆன்மீக உயர்வுக்காக அதை விட வேண்டக்கூடியது எது?
'நமச்சிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரம் இந்துமத நூல்களிலும் மரபிலும் மிக உயர்வாகப் பேசப்படுகின்ற ஒன்று. அது இந்த ஸ்ரீருத்ரத்தின் நடுமையத்தில் உள்ள சொற்றொடராகும். மேலும் ருத்ரமே சற்றேறக்குறைய யஜுர்வேதத்தின் மையத்தில் உள்ளது. யஜுர்வேதத்தில் 7 காண்டங்கள். ஒவ்வொருகாண்டத்திலும் பல அத்தியாயங்கள் ('பிரச்னங்கள்' என்று பெயர் கொண்டவை). அத்தியாயங்கள் 'அனுவாகங்களாகவும்' அனுவாகங்கள் அனேகமாக 50 சொற்கள் கொண்ட 'பஞ்சாசத்'துக்களாகவும் பிரிக்கப்பட்டவை. கீழே காணும் பட்டியலிலிருந்து, 'நமச்சிவாய' மந்திரம் எப்படி நடுக்காண்டத்திலும், ஏறக்குறைய நடு அத்தியாயம், நடுஅனுவாகம், நடு பஞ்சாசத்து, இவைகளில் பொறிந்திருப்பது தெரியவரும்.உண்மையில், யஜுர்வேதத்திலுள்ள சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் சொற்களில் நமச்சிவாய மந்திரம், நட்டநடுமையத்தை ஓராயிரம் சொற்களால்தான் தப்புகின்றது!
காண்டங்கள் | அத்தியாயங்கள் | அனுவாகங்கள் | பஞ்சாசத்துக்கள் | சொற்கள் | |
---|---|---|---|---|---|
முழு யஜுர்வேதத்தில் | 7 | 44 | 651 | 2198 | 109287 |
நமச்சிவாய என்ற சொல் வரை | 3 | 23 | 340 | 1115 | 55769 |
ஜாபால உபநிடதத்தில் சதருத்ரீயத்தை ஜபித்தால் ஒருவன் சாகாநிலை என்னும் வீடு பெறுவான் என்பதை யாக்ஞவல்கிய முனி அவருடைய சீடர்களுக்கு உபதேசிக்கிறார்.கைவல்ய உபநிடதத்தில் "எவன் சதருத்ரீயத்தை அத்தியயனம் செய்கிறானோ அவன் தீயினால், காற்றால், ஆன்மாவால் தூயப்படுத்தப்பட்டவன் போல் ஆகின்றான்... அதனால் 'அவிமுக்தம்' எனும் பதவியை அடைகின்றான். துறவி அதை ஒவ்வொரு நாளும் ஒருதடவையாவது ஜபிக்கவேண்டும்."(2.6) இது கைவல்ய உபநிஷத்தின் முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது. நாராயண தீர்த்தர் என்பவர் இவ்வுபநிஷத்துக்கு உரை எழுதும்போது, இந்த ருத்ரத்தை ‘சகுணப்பிரம்ம உபாசனை’ என்றும், இவ்வுபநிஷத்தை ‘நிர்க்குணப்பிரம்ம உபாசனை’ என்றும் கூறுகிறார்.