ஹமத் அசாம் (Hammad Azam (உருது: حماد اعظم;பிறப்பு: மார்ச் 16, 1991 ) பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக, பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.இவர் துடுப்பாட்டத்தில் சகலத் துறையராக விளையாடினார்.
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் கோப்பைத் தொடரில் இவர் கைபர் பக்துன்குவா அணி சார்பாக விளையாடினார்.[1][2]
2008 ஆம் ஆண்டில் ராவல்பிண்டி சார்பாக இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இவர் 6 போட்டிகளில் விளையாடி அதில் 173 ஓட்டங்களை எடுத்தார். இதில் அந்து போட்டிகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களை எடுத்து அணியினை இறுதிப் போட்டிக்குச் செல்ல உதவினார்.[3] இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டித் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டார்.[4]
நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இவர் தேர்வானார். அதற்கு முன்பாக இவர் ஆறு முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
2011 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஏப்ரல் 23 இல் கிராஸ் ஐலெட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் மார்லன் சாமுவேல்சு இலக்கினை வீழ்த்தினார்.[5]
2015 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. மே 31 இல் லாகூரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 12 பந்துகளைச் சந்தித்த இவர் 4 ஓட்டங்கள் எடுத்து கிரீமர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியின் முடிவு கிடைக்கவில்லை.
2012 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மற்றும் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் செய்தது. பெப்ரவரி 23 இல் துபாயில் நடைபெற்ற பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். ஆனால் இந்தப் போட்ட்டியில் மட்டையாடவும் பந்துவீசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாவது போட்டியில் 15 பந்துகளைச் சந்தித்த இவர் 2 ஓட்டங்களை எடுத்து ரவி போபரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.[6] இவர் தற்போதுவரை 5 பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
2013 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்தது. சூலை 28 இல் கிங்ஸ்டவுனில் நடைபெற்ற பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் 2 பந்துகளைச் சந்தித்த இவர் 1 ஓட்டங்களை எடுத்து சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 11 இலக்குகளால் வெற்றி பெற்றது.