ஹரிகே சதுப்புநிலமும் ஹரிகே ஏரியும் | |
---|---|
![]() ஹரிகே சதுப்புநிலம் | |
அமைவிடம் | பஞ்சாப் |
ஆள்கூறுகள் | 31°09′N 74°58′E / 31.15°N 74.97°E |
வகை | நன்னீர் |
முதன்மை வரத்து | பியாஸ் ஆறும் சத்லஜ் ஆறும் |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 4,100 எக்டேர்கள் (10,000 ஏக்கர்கள்) |
அதிகபட்ச ஆழம் | 2 மீட்டர்கள் (6 அடி 7 அங்) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 210 மீட்டர்கள் (690 அடி) |
Islands | முப்பத்து மூன்று தீவுகள் |
குடியேற்றங்கள் | ஹரிகே |
அலுவல் பெயர் | ஹரிகே ஏரி |
தெரியப்பட்டது | 23 மார்ச் 1990 |
உசாவு எண் | 462[1] |
ஹரிகே சதுப்புநிலம் (Harike Wetland) அதன் ஆழமான பகுதியான ஹரிகே ஏரியுடன், வட இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலமாகும்.[2] "ஹரி-கே-பட்டன்" என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் இரண்டாவது பெரிய பறவைகள் புகலிடமாகும். இந்தச் சதுப்புநிலம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தர்ன் தாரன் சாஹிப் மற்றும் பெரோஸ்பூர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது.
சதுப்புநிலமும் ஏரியும் 1953 ஆம் ஆண்டில் சத்லஜ் ஆற்றின் குறுக்கே, தேக்க வேலைப்பாடுகளைக் கட்டியதன் மூலம் உருவாக்கப்பட்டன. பஞ்சாபிலுள்ள சிற்றூரான ஹரிகவுக்குத் தெற்கே பியாஸ் மற்றும் சத்லஜ் ஆறுகள் சேரும் இடத்தினடியில் இந்த தேக்கக் கட்டங்கள் அமைந்துள்ளன. இந்தச் சதுப்புநிலத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீரியல் சமநிலையைப் பராமரிப்பதில் முதன்மைப் பங்கு வகிக்கும் சதுப்புநிலத்தின் வளமான உயிரியற் பல்வகைமையையும், உலகளாவிய அச்சுறுத்தலுக்கு உள்ளான பல இனங்களை உள்ளடக்கிய புலம்பெயர் நீர்ப்பறவைகளின் பரவலான அடர்த்தியையும் கொணடுள்ளது. இது பரத்பூருக்கு அருகிலுள்ள கேவலாதேவ் தேசியப் பூங்காவிற்கு அடுத்தபடியாக இருப்பதாக அறியப்படுகிறது. இவற்றின் அடிப்படையில் ராம்சர் உடன்படிக்கையின் 1990-ம் ஆண்டில் சுற்றுச்சூழல் அமைப்பின் வளங்காப்பு, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக இந்தியாவில் உள்ள ராமசார் தளங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.[1]
செயற்கையாக உருவாக்கப்பட்ட, ஆறு மற்றும் ஏரி சார்ந்த இந்தச் சதுப்புநிலம், 4100 ஹெக்டேர் பரப்பளவில் பஞ்சாபின் தர்ன் தாரன் சாஹிப், பெரோஸ்பூர் மற்றும் கபுர்த்தலா ஆகிய மூன்று மாவட்டங்களில் பரவியுள்ளது. 1987-1988 முதல், இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும் பஞ்சாப் மாநில அரசும் (அதன் பல முகமைகள் வழியாக) இந்தச் சதுப்புநிலத்தின் வளங்காப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளித்து, பல ஆண்டுகளாகப் பற்பல ஆய்வுகள் மற்றும் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.[3]
பலவகைப்பட்ட பறவை, ஆமை, பாம்பு, நீர்நில வாழ்வன, மீன் முதுகெலும்பிலி இனங்களைக் கொண்ட இந்தச் சதுப்புநிலத்தின் உயிரியற் பல்வகைமை தனித்தன்மை வாய்ந்ததாக அறியப்படுகிறது.[4][3]