ஹர்மிலன் கவுர் பெயின்ஸ் (பிறப்பு 23 ஜூலை 1998) பஞ்சாபைச் சேர்ந்த ஒரு இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய தடகள அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.[1][2][3] இவர் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய இந்திய தேசிய சாதனை படைத்தார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரைச் சேர்ந்தவர் ஹர்மிலன் கவுர் பெயின்ஸ். இவர் தனது பள்ளிப்படிப்பை மஹில்பூரில் உள்ள தோபா பப்ளிக் பள்ளியிலும், ஹோஷியார்பூரில் உள்ள செயின்ட் சோல்ஜர் பள்ளியிலும் பயின்றார். ஹர்மிலனின் பெற்றோர் இருவரும் விளையாட்டு வீரர்கள்.[4] இவரது தந்தை அமந்தீப் பெயின்ஸ் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பதக்கம் வென்றார் மற்றும் இவரது தாயார் மாதுரி சிங் 2002 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.[5] இவரது தாயார் 2003 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது பெற்றவர். இவர் தர்மசாலாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். சுபோர்ட்ஸ்கீடா இணையதளத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தால் இவருக்கு ஆதரவளிக்கப்பட்டது.[6]
2023: புவனேஸ்வரில் நடந்த மாநிலங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன் போட்டியில் 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
2021: வாரங்கலில் நடந்த தேசிய ஓபன் சாம்பியன் போட்டியில் 2021 இல் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 4:05.39 வினாடிகளில் ஓடி, சுனிதா ராணியின் 2002 சாதனையான 4:06.03 ஐ அழித்து புதிய தேசிய சாதனையைப் படைத்தார்.[6]
2021: பாட்டியாலாவில் 2021 தேசிய சாம்பியன் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இவர் 2:02.57 நிமிடங்களில் இலக்கை எட்டினார்.
2020: கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தலா ஒரு தங்கப் பதக்கம் வென்றார்.
2016: வியட்நாமின் ஹோ சி-மினில் நடந்த ஆசிய இளையோருக்கான சாம்பியன் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.